தொழில்நுட்பம்

நமது பிரபஞ்சத்திலேயே நாம் அறிந்த கூறுகளில் அது துகளாக இருந்தாலும் சரி அல்லது அலையாக இருந்தாலும்  சரி மிக வேகமானது இந்த 2 வித இயல்பையும் ஒருங்கே கொண்ட ஒளியாகும். இந்த ஒளியின் வேகம் என்ன? பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த இந்தக் கேள்விக்கு விடை கிடைத்தது 1676 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் திகதியாகும்.

இதை நினைவு கூர்வதற்கு ஒளியின் வேகம் கண்டறியப் பட்ட 340 ஆவது ஆண்டை சிறப்பித்து தனது தேடுபொறியின் முகப்பு லோகோவில் கூகுள் டூடுள் அனிமேசன் மூலமாக சிறப்பித்துள்ளது கூகுள். ஒளியின் வேகத்தை திருத்தமாகக் கண்டு பிடித்த பெருமை டானிஷ் வானியலாளரான ஒலே றோமெர் என்பவரைச் சேருகின்றது. றோமெருக்கு முன்பாக மிகப் பிரசித்தமான வானியலாளரும் பௌதிகவியலாளரும் கணிதவியலாளருமான கலிலியோ கலிலி கூட ஒளியின் வேகத்தை அளப்பதற்கு முயற்சி செய்தார். ஆனால் கலிலியோ கலிலி அதில் தோல்வியுற்றதுடன் பதிலாக அவருக்குப் பின் வந்த றோமெர் வெற்றியடைந்தார்.

1610 இல் கலிலியோ கண்டு பிடித்த வியாழனின் நிலவான லோ மூலமான வியாழனின் கிரகணம் (eclipses) நிலவும் போது ஏற்படும் நேர வித்தியாசத்தை 1673 ஆம் ஆண்டு கணிப்பிட்ட றோமெர் இந்த இடைவெளியில் வியாழனின் ஒளி பூமியை வந்தடையும் நேரம் சூரியனுடனான பூமியின் சுற்று வட்டப் பாதையின் விட்டத்தில் அரைப் பங்கைக் கடக்க  10 இலிருந்து 11 நிமிடம் எடுப்பதாகவும் இதன் மூலம் ஒளியானது ஒரு செக்கனுக்கு 200 000 000 மீட்டர்கள் பயணிப்பதாகவும் றோமெர் கூறினார். ஆனால் நிகழ்காலத்தில் கணிப்பிடப் பட்டுள்ள ஒளியின் வேகத்தினை விட இது 26% வீதம் குறைவு எனக் கூறப்படுகின்றது.

றோமெரின் கணிப்பீட்டை அவர் ஆராய்ச்சி செய்ய உதவிய பாரிஸிலுள்ள றோயல் கண்காணிப்பகம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அவரின் காலப் பகுதியைச் சேர்ந்த ஏனைய தத்துவவியலாளர்களான கிறிஸ்டியான் ஹைஜென்ஸ் மற்றும் ஐசாக் நியூட்டன் ஆகியவர்களின் ஆதரவு இவரது கண்டுபிடிப்புக்குக் கிடைத்தது. இறுதியாக றோமெர் இறந்து இரு தசாப்தங்களுக்குப் பின்னர் வந்த ஆங்கிலேய வானியலாளரான ஜேம்ஸ் பிராட்லேய் 1728 ஆம் ஆண்டு நட்சத்திரங்களின் ஒளியில் ஏற்படும் விலகலை (aberration) கண்டுபிடித்து  அதன் மூலம் ஒளியானது ஒரு செக்கனுக்கு 295 000 000 மீட்டர்கள் பயணிக்கின்றது எனத் திருத்தமாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.