தொழில்நுட்பம்
Typography

வளர்முக நாடுகளின் மீள் பாவனை விண்வெளி ஓடப் பரிசோதனைகள் ஒவ்வொன்றாக அரங்கேறி வரும் நிலையில் தற்போது அந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைந்து கொண்டுள்ளது. அதாவது இந்தியா தனது மீள் பாவனை செய்யக் கூடிய முதலாவது மாடல் ராக்கெட்டு இனை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்துள்ளது.

இப்பரிசோதனை மூலம் விண்வெளிப் பாவனைக்கான ராக்கெட்டுக்களின் தயாரிப்பு செலவும் அதன் கழிவுகளும் வெட்டப் பட்டு இரு வழிகளிலும் நண்மை ஏற்பட கை கூடியிருப்பதாகவும் தமது எதிர்பார்ப்புக்கள் பூர்த்தி அடைந்திருப்பதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. கடந்த காலத்தில் விண்வெளி ஆய்வுகளின் ஜாம்பவானாக விளங்கிய அமெரிக்கா மீள் பாவனை விண் ஓடங்களின் தொடர் விபத்துக்களால் ஸ்தம்பிதம் அடைந்தது. இதனால் கடந்த 5 வருடங்களாக சர்வதேச விண்வெளி ஆய்வு ஓடமான ISS இற்கு ரஷ்ய விண் ஓடங்களையே (சோயுஷ்) நாசா பாவித்து வருகின்றது. எனினும் சிறியளவிலான மற்றும் வினைத் திறன் மிக்க விண் ஓடங்களைத் தயாரிப்பதில் ரஷ்யா(Roscosmos), ஜப்பான்(Jaxa) மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமான (ESA) ஆகியவை முனைப்புக் காட்டி வருகின்றன.

எனினும் விண்ணில் புவி ஈர்ப்பு வளையத்துக்கு வெளியே ராக்கெட்டு மூலம் சென்று பின்னர் மறுபடி திரும்பி வரக் கூடிய விண் ஓடங்களை Elon Musk's இனது SpaceX மற்றும் Jeff Bezos's இனது Blue Origin ஆகிய கம்பனிகளே வெற்றிகரமாகத் தயாரித்துள்ளன. இதனால் ரஷ்யாவும் ஜப்பானும் இக்கம்பனிகளில் இணைந்துள்ளன. இவற்றை அடுத்து இந்தியா தான் அடுத்த நாடாக இந்த சவாலை வெற்றிகரமாக சந்தித்துள்ளது. சிறிஹரிகோட்டாவின் சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து சுமார் 23 அடி நீளமான இந்த விண் ஓடத்தை திங்கட்கிழமை காலை 7 மணிக்கு விஞ்ஞானிகள் செலுத்தி இருந்தனர். பூமியின் தரையில் இருந்து 56 Km உயரத்தில் RLV-TD என்ற குறித்த விண் ஓடத்தை விட்டு HS9 என்ற ராக்கெட்டு விலகியது. பின்னர் தனது பூஸ்டரின் உதவியுடன் 65 Km உயரத்தை அடைந்த இந்த ஓடம் பூமியின் வளி மண்டலத்துக்குள் ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் இறங்கியது.

இதன் போது ஏற்படும் கடும் வெப்பத்தால் வெடித்துச் சிதறாது வெப்ப சமநிலை கருவியின் உதவியுடன் பூமியை நோக்கி விரைந்த குறித்த ஓடம் சிறிஹரிகோட்டாவில் இருந்து 450 Km தொலைவில் வங்களா விரிகுடா கடலில் பத்திரமாக இறங்கியது. இந்த வெற்றி இந்திய விண்வெளி மையமான ISRO இஸ்ரோவின் ஆய்வில் ஒரு முக்கிய மைல்கல் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS