தொழில்நுட்பம்
Typography

நாம் வாழும் பூமியில் இருக்கும் உயிரின வகைகளின் (Biodiversity, மொத்த எண்ணிக்கை அல்ல!) எண்ணிக்கை எத்தனை இருக்கும் என இதுவரை நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா? இல்லாவிட்டாலும் நமது அறிவைக் கொண்டு கணிப்பிட்டுப் பார்த்தால் இலட்சக் கணக்கில் இருக்கலாம் என்று தானே தோன்றும்.  ஆனால் அப்படியல்ல. மிக அதிகம் என்கிறார்கள் உயிரியலாளர்கள்.

நமது பூமி சுமார் டிரில்லியன் (Trillion) வகை உயிரினங்களுக்கு இல்லமாகும். இந்த எண்ணிக்கை நமது  பால்வெளி அண்டத்தில் (Milkyway Galaxy) உள்ள அனைத்து நட்சத்திரங்களையும் விட அதிகமாகும்.  இப்புள்ளி விபரங்களை விட அதிர்ச்சியளிப்பது என்னவென்றால் இத்தனை உயிரினங்களிலும் 99.999% உயிரின வகைகள் பற்றி விஞ்ஞான உலகுக்கு எதுவுமே தெரியாது என உயிரியலாளர்கள் கூறுவது தான். 

மேலும் இதற்கு முன் மேற்கொள்ளப் பட்ட கணிப்புக்களை விட மிக அண்மைய கணிப்பில் 100 000 (ஒரு இலட்சம்) மடங்கு உயிரின வகைகள் அதிகம் எனவும் கூறப்படுகின்றது. ஆனால் புதிய கணிப்பில் அளவீடு சட்டங்கள் மற்றும் நுண்ணியிர்களின் (microorganisms) வகைகள் என்பனவும் உள்ளடக்கப் பட்டுள்ளது. மேலும் நமது வீட்டுத் தோட்டத்தில் நாம் கையில் எடுக்கக் கூடிய மண்ணில் மண்புழு, பூச்சிகள் போன்ற கண்ணால் பார்க்கக் கூடியதும் கண்ணால் பார்க்க முடியாத நுண்ணுயிர்களும் அடங்கலாக 10 000 உயிரின வகைகளும் டிரில்லியன் கலங்களும் (cells) இருக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் நுண்ணுயிர்கள் தவிர்த்து  கண்ணால் பார்க்கக் கூடிய மரங்கள் மற்றும் பாலூட்டிகள், பறவைகள் அடங்கலாக விலங்குகளின் எண்ணிக்கை 15 000 இற்கும் அதிகம் எனவும் கணிப்பிடப் பட்டுள்ளது. நமது பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களையும் வகைப் படுத்துவது என்பது தான் நவீன உயிரியலின் மிகப் பெரிய சவாலாக உள்ளது என உயிரியலாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS