Friday, May 24th

Last update10:32:37 AM

மூச்சுவிடும் போது விசில் சப்தம் வருவது ஏன்..?

நான் கல்லூரியில் படித்து வருகிறேன். எனக்கு மூச்சுவிடும் போது

ஒரு வித விசல் சப்தம் வருகிறது. இதனால் வகுப்பறையில் உட்காருவதே கடினமாக இருக்கிறது. பாடங்கள் நடத்தப்படும் போது அமைதியான வகுப்பறையில் இந்த விசில் சப்தம் சகமாணவர்களிடம் தொந்தரவையும், சில நேரங்களில் கேலிக்கும் ஆளாகிறேன்.இதை சரிசெய்ய முடியுமா? என 4தமிழ்மீடியாவின் திருச்சி வாசகர் விஜயகுமார் மின்னஞ்சல் வழி அனுப்பி வைத்த கேள்வியை , காது,மூக்கு,தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.முருகன் என்.ராம் அவர்களிடம் முன் வைத்தோம்.

மருத்துவர் பதில்: நமது மூக்கின் துவாரங்கள் இரண்டையும் பிரிக்கும் குருத்தெலும்பும், நடுத்தண்டு எலும்பும் சேரும் இடத்தில் இயற்கையிலேயே சிலருக்கு ஒரு துவாரம் அமைந்து விடுவதுண்டு. இதனால் மூக்கினுள் இழுக்கப்படும் காற்று அந்த துவாரத்தில் படும் போது இந்த விசில் ஒலியை கிளப்பும். மற்றொரு வகையில், 21 வயதுக்குள் சைனஸ் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் சிலருக்கு மருத்துவர்கள் பயன்படுத்தும் கூர்மையான அறுவைசிகிச்சை கருவிகள் இந்த குருத்தெலும்பில் படும் நிலையில் துவாரம் ஏற்பட்டு விடும்.

அதாவது 21 வயதுக்குள் சைனஸ் அறுவை சிகிச்சை செய்யக்கூடாது என்பது மருத்துவ விதி. இதற்கு காரணம் 21 வயது வரை மூக்கின் குருத்தெலும்பு வளர்ந்து கொண்டிருக்கும். அது மிகவும் இளக்கமாகவும் இருக்கும். இந்த எலும்பின் மீது கூர்மையான ஆயுதங்கள் படும் போது எளிதாக துவாரம் விழுந்து விடும். இந்த துவாரத்தின் மீது காற்று படும் போது விசில் சப்தம் எழும். இதில்,முதலில் சொன்ன இயற்கையில் இருக்கும் துவாரத்தை சிறிய அறுவை சிகிச்சை மூலம் எளிதில் அடைத்து விசில் சப்தத்தை நிறுத்தி விட முடியும்.

சைனஸ் அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட துவாரத்தை நாசல் பட்டன் என்ற முறையில் சைலா ஸ்டிக் என்ற பொருள் கொண்டு தயாரிக்கப்பட்ட சட்டை பட்டன் போன்ற வடிவமைப்பில் பிரேத்யகமாக தயாரிக்கப்பட்ட பட்டன் போன்ற ஒரு பொருளை வைத்து தான் அடைக்க முடியும். இந்த பட்டன் தற்போது மருத்துவ உலகின் நவீன வரவுகளில் ஒன்று. இதைக் கொண்டு சைனஸ் அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட செயற்கை ஓட்டையை அடைத்து விசில் சப்தத்தை நிறுத்திவிடலாம்.

பதிலளித்தவர்: டாக்டர்.முருகன் என்.ராம், காது,மூக்கு,தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர், மதுரை.

1989 முதல் 90 வரையிலான கால கட்டத்தில் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் பயிற்சி பெற்று, டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் செவி நுண் அறுவை சிகிச்சையில் அனுபவம் பெற்றவர்.  காது, மூக்கு, தொண்டை தொடர்பான கருத்தரங்குகளில் இந்திய மருத்துவர்களின் பிரதிநிதியாக மலேசியா, அமெரிக்காவின், மடிசான் மேற்கு விஸ்கான்சின் மாகாணங்களில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்த டாக்டர்.முருகன் என்.ராம் எழுதி, பல்வேறு ஊடகங்களிலும் வெளிவந்த  மருத்துவம் தொடர்பான கட்டுரைகள் வாசகர்களுக்கு இந்த துறையில் சிறந்த அறிமுகத்தையும், தெளிவையும் ஏற்படுத்தி தந்தன.

இவர் 4தமிழ்மீடியா வாசகர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்க இசைந்துள்ள இவ் வேளையில் உங்கள் சந்தேகங்களை கேள்விகளாக This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.   எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகின்றோம்.

- 4Tamilmedia Team

 

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus