Sunday, May 19th

Last update12:55:59 PM

சருமத்தின் அழகை நிறம் தீர்மானிக்குமா..?

சருமத்தின் அழகை நிறம் தீர்மானிக்குமா..? வாசகி யமுனாவின் கேள்வியோடு

அரோமா தெரபிஸ்ட் கீதா அசோக் அவர்களைச்  சந்தித்தோம். அப்போது அவர் தன் அனுபவப் பகிர்வொன்றினைப் பதிலாகத் தந்தார்.

சித்ரா (இங்கு பெயர் மாற்றப் பட்டுள்ளது) கொஞ்சம் மாநிறம்தான். பால் போன்ற மென்மையான பளிச் என்கிற சருமம் கொண்ட பெண்களைப் பார்த்தால் சித்ராவுக்கு ஏக்கம் அதிகமாகிவிடும். எத்தனையோ சிவப்பு அழகு தரும் கிரீம்கள் உபயோகப் படுத்திப் பார்த்தாயிற்று.

சந்தையில் புதிதாக வரும் அத்தனைக் கிரீம்களையும் உபயோகப்படுத்தி மனம் வெதும்பிப் போனத்தான் மிச்சம். போதாததற்கு அழகு நிலையங்களுக்கும் சென்று பார்த்தாகி விட்டது. பளிச் என்கிற வெண்மை நிறம் என்னவோ சித்ராவுக்கு கனவு போலவே இருந்தது. டிவியில் வரும் விளம்பரங்கள் வேறு சித்ராவைப் பாடாய் படுத்திவிடும் அதிலும் குறிப்பாக ஒரு சிவப்பழகு க்ரீம் விளம்பரம் சித்ராவை கோபத்தின் எல்லைக்கே கொண்டு போய் விட்டுவிடும்

அதாவது, செஸ் விளையாட்டு போர்டில் கருப்பு ராணியைத் தள்ளிவிட்டு, வெள்ளை ராணி அதில் அமறுவாள். இது ஒரு சாம்பிள்தான், இப்படி கருப்பு நிறத்தை அவமதிக்கும் படி எத்தனனையோ விளம்பரங்கள் சித்ராவுக்கு எதிரி.

ஒருநாள் சித்ராவின் அம்மா சித்ராவை என்னிடம் அழைத்து வந்து, சித்ரா திருமணத்துக்கு சம்மதிக்க மறுக்கிறாள். கேட்டால் நான் கருப்பு, என்னை யாருக்கும் பிடிக்காது என்கிறாள். நான் என்ன செய்வது, தினம் அழுது ஓய்கிறாள். என்னால் அவளை பாதுகாக்கவும் முடியவில்லை, அவளுக்கு ஆதரவு சொல்லவும் முடியவில்லை. நீங்கள்தான் ஒரு வழி காட்டவேண்டும் என்று என்னிடம் கூறினார் .

நான் சித்ராவைப் பார்த்தேன். மாநிறம்தான், என்றாலும் அழகு. இவளுக்கு ஏன் இது புரியவில்லை? நிறம் ஒரு முக்கிய பிரதானமே இல்லை. வியாபார நுட்பத்திற்காக பல நிறுவனங்கள் செய்யும் மட்டமான யுக்திதான் இந்த சிவப்பழகு விளம்பரங்கள்.சருமத்தின் அழகை நிறம் தீர்மானிப்பதில்லை. என்றேன். சித்ரா நம்பவில்லை. இதை நான் உனக்கு உணர்த்தினால் நீ என்னை நம்புவாயா என்றேன். பார்க்கலாம் என்று விரக்தியாக சொன்னாள் சித்ரா.

எனக்கு ஒருமாதம் டைம் கொடு, அந்த ஒருமாதமும் என்வீட்டில் என்னுடன் தங்குவாயா? என்றேன், அவள் அம்மாவைப் பார்த்தாள். இதுவும் ஒரு ட்ரீட்மென்ட் தான், இதை அழகு நிலையம் என்று பார்க்காமல், மருத்துவமனை என்று நினைத்துக் கொள் என்றேன். சரி என்று இருவரும் சம்மதித்தார்கள்.

நான் என்னுடைய அழகுக் கலை நிலையத்தின் எந்த விஷயத்தையும் சித்ராவுக்கு பரிந்துரைக்க விருமபவில்லை. அவளுக்கு சரும ஆரோக்கியம்தான் சருமத்தின் அழகு என்பதைப் புரிய வைக்க வேண்டும் என்று எண்ணினேன். அவளை என்வீட்டில் தங்க வைத்தேன். எங்கள் வீட்டு சமையல்கார அம்மாவிடம் அவளுக்கு எந்தெந்த நேரத்தில் என்ன உணவு அல்லது சாப்பிட கொடுக்கவேண்டும் என்று விவரித்தேன்.

ஒரு மாதம்தான் சித்ரா மெல்ல மெல்ல தெளிவானாள். என்னுடன் அவளே வந்து பேசி தான் மெருகேறி விட்டதாகக் கூறினாள். "இனி நான் வீட்டிலும் இதேபோல உணவு முறைகளைக் கடை பிடிக்கிறேன்,.சருமத்தின் அழகு நிறத்தில் இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன்" என்றாள்

சித்ராவுக்கு அப்படி என்னத்தை அரோமா தெரபிஸ்ட் கீதா அசோக் செய்திருப்பார்? அதைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னர் சிவப்பழகு கிரீம்கள் உண்மையிலேயே சிவப்பழகைத் தருகிறதா? யமுனாவிடம் மட்டுமல்ல உங்களிடமும் அந்தக் கேள்வி உண்டென்பது தெரியும். அதற்குப் பதில் காண முன், சரும மருத்துவர் முரளீதரன் இதுபற்றி என்ன சொல்கிறார்? என்று பார்க்கலாம்.

"சிவப்பழகுக் கிரீம்கள் என்று சொல்வதெல்லாம் சுத்த ஏமாற்று வேலை. இதை இன்னுமா மக்கள் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், மேலோட்டமாகப் பார்க்கப் போனால் முகத்தில் உள்ள கரும்புள்ளி, தேமல், இறந்த செல்கள் இதை எல்லாம் போக்குவதால் மக்கள் அதைத் தொடர்ந்து வாங்கி உபயோகிக்கலாம். ஆனால் வாங்கி உபயோகிக்கும் மக்களுக்கேத் தெரியும், இதனால் நமக்கு சிவப்பழகு ஒன்றும் வரப்போவதில்லை என்று.

எனினும் உடனடி நிவாரணத்துக்கு இதுபோல விஷயங்களை அவர்கள் நாடி செல்கிறார்கள் என்பதுதான் உண்மை. கருப்போ, சிவப்போ சருமம் ஆரோக்கியமாக இருந்தால் அழகு தன்னால் கூடிவிடும். இதுதான் உண்மை, இந்த உண்மையை மக்கள் புரிந்து கொள்ளாமல் வீணாக விளம்பரங்களை நம்பி ஏமாந்து போகிறார்கள்." என்றவரிடம், சிவப்பழகு கிரீம்களில் ஆண்களுக்கானது, பெண்களுக்கானது என்று வேறு விளம்பரப் படுத்துகிறார்களே டாக்டர் என்றபோது,

"இதுவும் ஒரு விளம்பர யுக்திதான்" என்று சிரித்துவிட்டு, "சருமத்தில் ஆண்களுக்கான சருமம், பெண்களுக்கான சருமம் என்று ஒரு வித்தியாசமும் இல்லை. இவர்களே நினைத்துக் கொள்வதுதான்,ஆண்கள் சருமம் என்றால் கடினமாக இருக்கும், பெண்கள் சருமம் என்றால் மென்மையாக இருக்கும் என்று. உடல்வாகில்தான், கடினம், மென்மை என்று தீர்மானிக்கலாம் சருமத்தில் அப்படி தீர்மானிக்க முடியாது.

நீங்கள் சொல்கிறபடியே ஆண்களுக்கான சருமத்திற்கு கடினமாக தேவைப் ஆடுகிறது என்று இன்னும் கெமிக்கலை அதிகம் உபயோகித்து க்ரீம் தயாரிப்பார்களா? அவர்கள் சருமம் தாங்குமா? இது எல்லாம் ஒரு விளம்பர யுக்திதான். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் மக்களை முட்டாளாக்கும் இதுபோல விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும்" என்கிறார் சரும மருத்துவ நிபுணர் டாக்டர் முரளீதரன்.

சரி, இப்போது கீதா அசோக், சித்ராவுக்கு என்ன செய்தார், எப்படி சித்ராவுக்கு சருமத்தின் அழகு நிறத்தில் இல்லை என்று புரிய வைத்தார் என்று பார்க்கலாம்.

"ஒன்றுமே நான் செய்யவில்லை. அரோமா தெரபி போல இது ஒரு நேச்சுரல் தெரபி அவ்வளவுதான்." என்று கீதா அசோக், தான் சித்ராவுக்கு செய்த நேச்சுரல் தெரபியை விவரிக்கிறார்.

காலை - 5 .30 மணிக்கு :தேன் கலந்து ஒரு தம்ளர் எலுமிச்சை ஜூஸ்.

காலை -7.30 மணிக்கு விதவிதமான பழங்கள், ஒரு தம்ளர் பால்.

காலை -9.30 மணிக்கு ஒரு தம்ளர் கேரட் ஜூஸ்.

காலை -11.30 மணிக்கு ஒரு கிண்ணம் வேகவைத்த காய்கறிகள், முளைவிட்ட பயிறு கலந்து தயிர் சாலட்

மதியம்- 2.30 மணிக்கு ஒரு தம்ளர் மோர்.

மதியம்-4,30 மணிக்கு ஜூஸ், பழங்கள்.

மாலை- 6 மணிக்கு ஒரு தம்ளர் கேரட் ஜூஸ்.

இரவு- 7.40 மணிக்கு இரண்டு எண்ணெய் சேர்க்காத சப்பாத்தி, பழங்கள், தயிர்சாலட்.

"மேலே உள்ள சார்ட் படி, ஒரு மாதம் சாப்பிடும் போது, உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறும். சருமம் பொலிவு அடையும், சருமம் ஆரோக்கியம் அடையும், இதுவே உங்களது சருமம் நிறம் அடைந்ததைப் போல உங்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். சரும ஆரோக்கியம்தான், சருமத்திற்கு அழகு என்பதை உணர்வீர்கள். இதைத்தான் சித்ராவுக்கும் செய்தேன். அவள் வீட்டில் நான் இதுபோல ஆரோக்கியமாக தினமும் சாப்பிடப் போகிறேன் என்று சொல்லிவிட்டு சந்தோஷமாக கிளம்பினாள்" என்கிறார் கீதா அசோக்.

- 4தமிழ்மீடியாவிற்காக : ஒருங்கிணைப்பு எழில்செல்வி

மருத்துவம் தொடர்பான  உங்கள் சந்தேகங்களை கேள்விகளாக This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.   எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் துறைசார் நிபுணர்களிடம்  ஆலோசனை பெற்றுப் பதிலாகத் தருகின்றோம்.

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus