இளைக்க விருப்பமா? : விரைவில் செரிக்கும் உணவை சாப்பிடாதீர்கள்!
- Monday, 01 October 2012 08:31
நான் தொலைத் தொடர்புத் துறையில் வேலை பார்க்கிறேன்.அதிக நேரம் உட்கார்ந்தே பார்க்கும் வேலை அது.
இதனால் என் உடல் வெயிட் போட்டுவிடும் என்று பயமாக இருக்கிறது. நான் என்ன மாதிரி உணவுகள் சாப்பிட வேண்டும்? என 4தமிழ்மீடியாவின் வாசகி சசிரேகா, மயிலாடுதுறையிலிருந்து அனுப்பிவைத்த கேள்வியை இயற்கை உணவு சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேஷிடம் முன்வைத்தோம்.
இட்லி, இடியாப்பம், கஞ்சி சாப்பிடாதீர்கள்!
எளிதில் ஜீரணமாகும் உணவுகளைக் குறிக்க, ஜி.ஐ.(GI) என்கிறோம். கிளைசிமிக் இன்டக்ஸ் என்பதுதான் ஜிஐ. உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் ஜூஸ், கஞ்சி, இட்லி, இடியாப்பம் என்று எளிதில் ஜீரணமாகும் உணவுகளை சாப்பிடும் போது, உணவு விரைவில் செரித்து க்ளுகோஸ் ஆக மாறிவிடுகிறது. இது சில நேரங்களில் சர்க்கரை நோய்க்கு கூட வழிவகுத்து விடும்.
கொஞ்சம் சாப்பிடுவதுதான் பிரச்சனை!
அதற்காக இட்லி, இடியாப்பம், கஞ்சி, ஜூஸ் சாப்பிட்டாலே சர்க்கரை வியாதி வருமா என்றால் இல்லை. காரணம் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் டயட் என்கிற பெயரில் 2 இட்லி, அல்லது ஒரு டம்ளர் கஞ்சி, அல்லது ஒரு டம்ளர் ஜூஸ், இடியாப்பம் என்று எடுத்துக் கொள்வார்கள். அதனால்தான் இந்த அபாயம். அதுவே நார்மலாக சாப்பிடுபவர்கள் வயிறு நிறைய இட்லி, இடியாப்பம், கஞ்சி, ஜூஸ் என்று சாப்பிடும் போது, அது எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாது.
உடல் எடை குறைக்க விரும்புவோர் என்ன அதிகம் சாப்பிடலாம்?
வெந்தயக் கீரை, காய்கறிகள் சேர்த்த சப்பாத்தி, தோசை, பொங்கல், அடை, பயத்தம் பருப்பு சேர்த்த உணவுகள் சாப்பிடலாம். நமது சமையல் முறைப்படி, இட்லிக்கு பதில் எண்ணெய் விடாத தோசை சாப்பிட்டால் விரைவில் செரிக்காது. உடல் எடை குறைக்க விரும்புவோர் அளவாக தோசை சாப்பிடலாம்.
பொங்கல், அடை, போன்ற உணவுகளில் நிறைய புரதம், நார் சத்துக்கள் இருப்பதால், எளிதில் ஜீரணமாகாது. இவை உடனே சர்க்கரையாக மாறும் தன்மை இல்லாதது. எனவே, பொங்கல் அடையை அளவோடு சாப்பிடலாம்.
இதோ சில உணவுகளில் உள்ள ஜிஐ அளவுகள்
கவனியுங்கள் நீங்கள் எந்த அளவுக்கு வெயிட் குறைக்க விரும்புகிறீர்களோ, அந்த அளவுக்கு ஜிஐ குறையவேண்டும். ராஜ்மாவில் ஜிஐ அளவு 29 , வாழைப்பழத்தில் ஜிஐ அளவு 89 , சோயாவில் ஜிஐ அளவு 43 , ஆப்பிள் பழத்தில் ஜிஐ அளவு, 39 , சாத்துக்கொடி, ஆரஞ்சு பழத்தில் ஜிஐ அளவு, 40
அதிக நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பதால் உடல் எடை கூடுமா?
அப்படியில்லை, ஆனால் வேலை நேரம் போக, வீட்டுக்கு திரும்பும் நேரத்தில் நடைப் பயிற்சி செய்யலாம். உணவு முறைகள் மேற்கண்ட மாதிரி கடை பிடித்தாலே உடல் எடை கூடாமல் இருக்கும். ஆனால் இது போல வேலை பார்க்கும் போது நான் வெஜ் சாப்பிடாதீர்கள். வீட்டில் இருக்கும் போது நான் வெஜ் சாப்பிடுங்கள். அலுவலக நேரங்களில் பொரித்த மீன் சாப்பிடாமல் குழம்பு மீன் சாப்பிடலாம். உடல் எடை கூடாது என இயற்கை உணவு சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேஷி ஆலோசனை தெரிவித்துள்ளார்.
- 4தமிழ்மீடியாவுக்காக எழில்செல்வி
இதே போன்று உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்த சந்தேகங்களை கேள்விகளாக
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தீர்கள் எனில் இதே போன்று மருத்துவர்களின் நேரடி பதில்களை தரவிழைகிறோம்.
- 4Tamilmedia Team
