சைனஸ் தொல்லையால் தூக்கம் இல்லை, தலைவலியா? : இதோ ஆயுர்வேத முறைப்படி தீர்வு
- Sunday, 07 October 2012 00:09

சைனஸ் தொல்லையால் எனக்கு அடிக்கடி தலைவலி வரும். தலைக்கு குளிக்கும் அன்று கட்டாயம் தலைவலி வந்து விடும்.
தினமும் இரவில் சரியாக தூக்கமும் வருவதில்லை. எப்போதும் தலை பாரமாகவே இருக்கிறது. இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை எனக்கு ஏதாவது ஆயுர்வேத மருந்து அல்லது ஆயுர்வேத உணவு முறை சொல்லுங்கள் என 4தமிழ்மீடியா வாசகர் வைத்தீஸ்வரன் கோயிலிருந்து வெற்றி சிறீ எழுப்பிய கேள்வியை ஆயுர்வேதா மருத்துவர் சுவாமிநாதனிடம் முன்வைத்தோம்.
இதோ அவரது பதில் : ஏலக்காய், கிராம்பு இவைகளை வெற்றிலை சாற்றில் கலந்து மைய அரைத்து நெற்றியில் பற்று போடுங்கள். குறிப்பிட்ட இடங்களில் கோட்டக்கல் வைத்திய சாலை என்று இருக்கிறது. Varahabi கஷாயம் கிடைக்கும். அதை வாங்கி தினமும் குடித்து வாருங்கள். தலையில் நீர் கோர்ப்பது சரியாகிவிடும். பகலில் தூங்கக் கூடாது, அதிகம் இனிப்பு, புளிப்பு சேர்ந்த உணவுகளை சாப்பிடக் கூடாது. ஜாதிக்காயை இழைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தூக்கம் வரும்.
சாத்துக் கொடி ஜூஸுடன் தேன் அல்லது வெதுவெதுப்பான நீர் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தாலும் சைனஸ் தொல்லை இருக்காது. இரவில் தூக்கம் நன்றாக வரும். தலைக்கு குளிக்கும் போது, யுகலிப்டஸ் இலைகள் போட்டு கொதிக்க வைத்த தண்ணீரில் தலைக் குளித்தால், தலையில் நீர் கோர்க்காது. அல்லது நீலகிரித் தைலம் 5 சொட்டுக்கள் விட்டுக் குளியுங்கள்.
இரவில் படுக்கும் முன்பு ஏலக்காய் பொடி ஒரு சிட்டிகை, ஜாதிக்காய் பொடி ஒரு சிட்டிகை, குங்குமப் பூ ஒரு சிட்டிகை, மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை என்று கொதிக்கிற பாலில் கலந்து, கற்கண்டு சேர்த்து பருகி விட்டு படுத்தாலும் சைனஸ் தொல்லை இருக்காது, தூக்கமும் நன்றாக வரும்.
பதில் அளித்தவர் : ஆயுர்வேத மருத்துவர் சுவாமிநாதன்
இதே போன்று உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்த சந்தேகங்களை கேள்விகளாக
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தீர்கள் எனில் இதே போன்று மருத்துவர்களின் நேரடி பதில்களை தரவிழைகிறோம்.
- 4தமிழ்மீடியா குழுமம்
