இரவு வேலை செய்யும் ஆண்களுக்கு புற்று நோய் ஏற்பட 3 மடங்கு வாய்ப்பு!
- Monday, 22 October 2012 20:59

பகலில் வேலை செய்யும் ஆண்களை விட இரவு நேரம் உறங்காமல் கண் விழித்து வேலை செய்யும் ஆண்களுக்கு ஆண்மையைப் பாதிக்கும் புற்று நோயான Prostate cancer ஏற்படும் வாய்ப்பு 3 மடங்கு அதிகம் என புதிய ஆய்வொன்றில் தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களுக்கு இந்நோயைத் தவிர உடலின் முக்கிய உறுப்புக்களான குடல், சிறுநீர்ப்பை, நுரையீரல் என்பவற்றில் கட்டிகளை உருவாக்கக் கூடிய புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பும் அதிகம் எனவும் கூறப்படுகின்றது.
இந்த எச்சரிக்கை கனடாவின் கியூபெக் இலுள்ள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களால் விடப்பட்டுள்ளது. ஆண்களைத் தவிர இரவில் வேலை செய்யும் பெண்களுக்கும் மார்பகப் புற்று நோய் உட்பட ஏனைய புற்று நோய்கள் தாக்கும் வாய்ப்பு அதிகம் எனவும் இவர்கள் கூறுகின்றனர்.
நமது உடலில் மூளையில் உள்ள பைனியல் சுரப்பியில் இருந்து சுரக்கும் ஹோர்மோனான 'மெலட்டொனின்' அதிகம் சுரந்து நாம் தூங்குவதையும் விழிப்பதையும் கட்டுப்படுத்துகின்றது. நாம் உறங்காமல் வேலை செய்தால் இச்சுரப்பி பாதிக்கப்பட்டு உடலின் சமநிலையைக் குழப்புகிறது எனவும் இதனால் புற்று நோய் ஏற்படலாம் எனவும் இந்த ஆய்வில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் வேலை செய்பவர்களில் 14% வீதமானோர் இரவு வேலை செய்பர்கள் எனவும் புள்ளிவிபரம் கூறுகின்றது. பிரிட்டனில் மட்டும் Prostate புற்று நோயால் ஒவ்வொரு வருடமும் 40 000 பேர் சிகிச்சை பெறுவதாகவும் இதில் 10 000 பேர் இறக்கின்றனர் எனவும் கூறப்படுகின்றது. இதேவேளை பிரிட்டனில் குடல்புற்று நோயால் மட்டும் 41 000 பேர் ஒவ்வொரு வருடமும் பாதிக்கப் படுகின்றனர் எனவும் இவர்களில் அரைவாசிப் பேர் ஆண்கள் எனவும் கூட இந்தப் புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
