வினோதம்

கடந்த திங்கட்கிழமை தாய்லாந்து கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கிலம் (Pilot Whale) தொடர்ந்து 5 நாட்களாக சிகிச்சை அளிக்கப் பட்ட போதும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக தாய்லாந்து கடலியல் அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை தாய்லாந்தின் தெற்கு மாகாணமான சொங்க்லாவில் இந்தத் திமிங்கிலம் கரை ஒதுங்கியிருந்தது.

இதனை ஆய்வு செய்த மருத்துவர் குழு அதற்கு சிகிச்சை அளித்த போது அது 5 பிளாஸ்டிக் பைகளை வெளியே கக்கியது. மேலும் அளித்த சிகிச்சை பலனின்றி அது உயிரிழந்தது. அதன் பின் அதனை உடற்கூறு ஆய்வு செய்த போது அதன் வயிற்றில் 8 கிலோ எடையுடைய 80 பிளாஸ்டிக் பைகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இந்த பிளாஸ்டிக் பைகளை உட்கொண்டதன் விளைவாக இத்திமிங்கிலம் உணவு அருந்த முடியாது தான் உயிரை விட்டுள்ளது. பொதுவாக சிறிய ரக மீன்களை உட்கொள்ளும் பைலட் ரக திமிங்கிலங்கள் தமக்கு உணவு கிடைக்காத போது ஆக்டோபஸ் மற்றும் ஏனைய கடல் வாழ் உயிரினங்களையும் உட்கொள்ளும்.

இந்நிலையில் உலகளவில் அதிகளவான பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் அடைக்கப் பட்டு வருகின்றன. நீரின் மேலே மிதக்கும் இதுபோன்ற பிளாஸ்டிக் பைகளை இந்த பைலட் திமிங்கிலம் மட்டுமன்றி ஏனைய பல கடல் வாழ் உயிரினங்களும் கூட உணவாக எண்ணி விழுங்கி விடுகின்றன. இதனால் இந்த பிளாஸ்டிக் அதன் வயிற்றில் சென்று அடைத்துக் கொண்டு சமிபாடு அடையாது மேலும் உணவை உட்கொள்ள முடியாத நிலையை உண்டாக்குவதால் பல திமிங்கிலங்கள் இறந்து அழிந்து வருகின்றன.

இந்நிலையில் உலக திமிங்கில பாதுகாப்பு அமைப்பான அமெரிக்காவின் Cetacean Society விடுத்த தகவலில் ஜூன் 8 ஆம் திகதி அனுட்டிக்கப் படவுள்ள உலக சமுத்திரவியல் தினத்தின் போது கடலில் மிதமிஞ்சி அடைக்கப் பட்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களால் திமிங்கிலங்களுக்கு ஏற்பட்டு வரும் இந்த அழிவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளது.

ஐ.நா இன் சுற்றுச் சூழல் பிரிவு டிசம்பரில் விடுத்த தகவலில் ஒவ்வொரு வருடமும் உலகளாவிய ரீதியில் 8 மில்லியன் டன் எடை கொண்ட பிளாஸ்டிக் போத்தல்கள், பக்கெட்டுக்கள் மற்றும் ஏனைய பிளாஸ்டிக் கழிவுகள் சமுத்திரங்களுக்குள் அடைக்கப் பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் சமுத்திர உயிரின வாழ்க்கை மட்டுமன்றி இது மனிதனின் உணவுச் சங்கிலிக்குள்ளும் தாக்கத்தை ஏற்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது.