வினோதம்

ஐரோப்பாவில் உலகின் பண்டைய உயிரின சுவட்டு படிமங்கள் அதிகம் நிறைந்த நாடான போர்த்துக்கல்லின் லௌரின்ஹா என்ற நகரில் கிட்டத்தட்ட 10 ஹெக்டேர் பரப்பளவில் 70 வகை டைனோசர் உயிரினங்களின் 120 உயரமான செயற்கைக் கட்டமைப்புக்கள் அடங்கிய கண்கவர் டைனோசர் படிமப் பூங்கா பார்வையாளர்களுக்காகத் திறக்கப் பட்டுள்ளது.

சுமார் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய பிந்தைய ஜுராசிக் உலகின் டைனோசர் படிம சுவடுகள் அடங்கிய போர்த்துக்கலின் மிகப் பெரிய திறந்த வெளி அருங்காட்சியகம் இதுவாகும். போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனுக்கு வடக்கே ஒரு மணித்தியாலம் பயணம் செய்தால் அடையக் கூடிய லௌரின்ஹா என்ற இந்த நகரானது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து டைனோசர் படிமங்கள் அதிகம் அகழ்ந்தெடுக்கப் பட்ட பகுதியாகும்.
இங்கு அமைக்கப் பட்ட Supersaurus என்ற மிக நீண்ட கழுத்தை உடைய மிகப் பெரிய டைனோசர் மாதிரியைப் பார்வையிடுபவர்களுக்கு அது நிச்சயம் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.

பல மாதிரிகள் ஜேர்மனியில் தயாரிக்கப் பட்டு குறித்த டைனோசர்கள் காட்டில் எவ்வாறு வாழ்ந்திருக்கக் கூடும் என்ற அதே அனுபவத்தைத் தரக் கூடிய வகையில் அமைக்கப் பட்டிருப்பதும் சிறப்பம்சமாகும். மிக மோசமான காலநிலையின் மத்தியிலும் கிட்டத்தட்ட 175 000 பார்வையாளர்கள் இப்பூங்கா திறக்கப் பட்டு 6 மாதத்துக்குள் வந்து சென்றுள்ளனர். சிறுவர்கள் மத்தியில் இந்த டைனோசர் பூங்கா பிரபல்யம் அடைந்ததுக்கு அண்மைக் காலத்தில் டைனோசர்கள் குறித்து வெளியான ஹாலிவுட் திரைப் படங்களும் காரணம் என நெகிழ்வுடன் கூறுகின்றனர் இப்பூங்காவின் நிர்வாகிகள்.