வினோதம்
Typography

1903 ஆமாண்டு ஜனவரி 2 ஆம் திகதி பிறந்த கேன் டனாக்கா என்ற ஜப்பானியப் பெண்மணி தான் இன்று உலகில் வாழ்ந்து வரும் உலகின் மிகவும் வயது கூடிய நபராகப் பெயர் பெற்றுள்ளார்.

இவரது வயது 116 ஆகும். இவர் பிறந்த வருடமான 1903 இல் தான் ரைட் சகோதரர்கள் முதன் முதலில் எரிபொருளால் செயற்படக் கூடிய விமானத்தை வெற்றிகரமாகப் பரிசோதித்திருந்தனர் என்கின்றது கின்னஸ் உலக சாதனைப் புத்தகம்!

கேன் டனாக்காவின் அன்றாடப் பழக்க வழக்கங்களில் பிரதானமாக அவர் ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கே எழும்பி விடுவார் என்பதுடன் அவர் தனது பகல் பொழுதுகளை கணிதம் பயிலவும், சித்திரமொழி (Calligraphy) பயிலவும், பலகை விளையாட்டுக்கள் விளையாடவும் செலவிடுவார் என்றும் கூறப்படுகின்றது. மேற்கு ஜப்பானின் ஃபுக்குவோக்கா இலுள்ள நேர்சிங் ஹோமில் இவர் வசித்து வருகின்றார். இவரது வாழ்க்கையில் எந்தத் தருணம் இவருக்கு மிகவும் மகிழ்ச்சிகரமானது என்று கேள்வி எழுப்பப் பட்ட போது இப்போது இத்தருணம் தான் எனப் பதில் அளித்து அனைவரையும் ஆச்சரியப் படுத்தியுள்ளார் கேன் டனாக்கா.

1922 இல் ஹிடேயோ டனாக்காவைத் திருமணம் செய்த இவருக்கு 4 குழந்தைகளும் 5 ஆவதாக தத்தெடுக்கப் பட்ட ஒரு குழந்தையும் உள்ளனர். உலகில் மிக அதிகளவு வயது முதிர்ந்த ஆரோக்கியமான நபர்களைக் கொண்டிருக்கும் நாடாகப் பெருமை பெற்றுள்ள ஜப்பானில் தான் 116 வயதில் மிக அதிக வயதுடைய ஆணாகக் கணிக்கப் பட்ட ஜிரோமொன் கிமுரா 2013 ஆமாண்டு இயற்கை எய்தியிருந்தார்.

இதுவரை காலம் உலகில் வசித்த மனிதர்களிலேயே பிரான்ஸை சேர்ந்த ஜீன் லூயிஸ் கால்மெண்ட் என்பவர் தான் 122 வயது வரை வாழ்ந்து அதிகூடிய வயது உடைய நபராக சாதனை படைத்திருந்தார். 1997 ஆமாண்டு இவர் இயற்கை எய்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS