வினோதம்

இன்று மார்ச் 12 ஆம் திகதி கூகுளின் முகப்பில் அதாவது கூகுள் டூடுளாகத் தெரிவது அகில உலக வலையமைப்பான WWW உருவாக்கப் பட்டதன் 30 ஆவது ஆண்டு நிறைவை அனுசரிக்கும் லோகோ ஆகும்.

இந்த WWW அல்லது வெப் உம் இணையம் அதாவது Internet உம் ஒன்று என பெரும்பாலான இணையப் பாவனையாளர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளது.

இணையம் அல்லது Internet என்பது பூகோள ரீதியிலான அனைத்து நெட்வேர்க்குகள் மற்றும் இணையத் தளங்களை இணைக்கும் ஊடகம் (Medium) ஆகும். ஆனால் பொதுவாக வெப் (Web) என அறியப் படும் WWW என்று ஆரம்பமாகும் இணையத் தளங்களானவை HTTP எனப்படும் இணைய மொழி மூலமான ஒரு தகவல் தொடர்பு மாடல் அல்லது வலையமைப்பு ஆகும்.

இந்த WWW என்ற வலையமைப்பு முதன் முதலாக மிகை சக்திப் பௌதிகவியல் (High energy Particle Physics) ஆராய்ச்சிகள் நடாத்தப் பட்டு வரும் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரிலுள்ள CERN அணுவாராய்ச்சி மையத்தில் விஞ்ஞானிகளிடையே தகவல் பரிமாற்றத்துக்காக முதன்முதல் பௌதிகவியல் ஆய்வாளர் மற்றும் உலகளாவிய வலைச் சங்கத்தின் தற்போதைய இயக்குனருமான சர் திம் பெர்னெர்சு லீ என்பவரால் உருவாக்கப் பட்டது.

உலகளாவிய வலை அல்லது வெப் ஆனது தகவல்களை இணையத்தின் வழியே, பயன்படுத்த எளியதும் நெகிழ்த்தன்மையுள்ளதுமான வடிவமைப்புகளின் மூலம் பரப்புவதைச் சாத்தியமாக்கியது. இவ்வாறாக, உலகளாவிய வலையானது இணையத்தின் (Internet) பயன்பாட்டைப் பிரபலமாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தது. இந்நிலையில் இன்றைய உலக வலையமைப்புத் தினத்தில் சர்வதேச இணைய ஊடகத்தில் தீயவை களைந்து நண்மையைப் பெருக்கிப் பயனடைவோம் என உறுதி பூணுவோம்.