வினோதம்

பூமியின் பழமையான உயிரினங்களில் ஒன்று ஆமையினம். டைனோசர் காலத்துக்கு முன்பே, ஆமையினம் தோன்றிவிட்டதாக இயற்கைக் கோட்பாட்டாளர்கள் நிறுவுகின்றார்கள். மிகமெதுவான இதயத்துடிப்பினைக் கொண்டதனால், ஆயுட்காலம் அதிகமான உயிரினமும் ஆமையினம்தான். அதிகளவில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும், ஊர்வனவகைப் பிராணியும் ஆமைதான். ஆனாலும் உலகில் வேகமா அழிந்து வரும் உயிரினமாக கண்டறியப்பட்டிருக்கிறது.

ஃபெங்க்சுயி எனும் சீன வாஸ்து சாஸ்திரப்படி நீண்ட ஆயுளையும், விருப்பங்கள் உடனடியாக நிறைவேறுவதை, ஆமை குறிக்கிறது. ஐரோப்பியர்கள் மத்தியிலும் ஆமை அதிர்ஸ்டம் தரும் பிராணியாகவே பார்க்கப்படுகிறது. அறியாமை, முயலாமை, இயலாமை, பொறாமை, போன்ற எதிர்மறை எண்ணங்கள், மனித வாழ்க்கைக்கு உகந்ததல்ல எனச் சொல்லப்பட்ட அறிவுரையின் மெய்பொருள் உணராது, அத்தனை ஆமைகளையும், அகத்துள் வைத்துக்கொண்டு, "ஆமை புகுந்த வீடு உருப்படாது" என, ஆற்றல் மிகு உயிராமைகளை அழித்து வருகின்றோம்.

உலகம் முழுவதும் 225 வகையிலான கடலாமைகள் உள்ளதாகத் தெரிவிக்கின்றார்கள். பல ஆயிரம் மைல்கள் கடலில் நீந்திச் சென்று முட்டையிடக் கூடிய ஆமைகள், தொடர்ச்சியாக குறிப்பிட்ட சில கடற்கரைகளிலேயே முட்டையிடுவதாகவும், ஒரு தடவையில் 150 முதல் 200 முட்டைகள் வரை இடுமெனவும் சொல்கிறார்கள். கடல்வளம் காக்கும் இவ் உயிரினத்திற்கு இயற்கையாக ஏற்படக் கூடிய இடர்களினால் அழிவு ஒருபுறமிருக்க, இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும், மூலப்பொருட்களுக்காகவும், அலங்காரப் பொருட்களுக்காகவும், மனிதர்களால் ஆமைகள் பெருமளவில் அழிக்கப்படுகின்றன. சூழல் மாசடைதல், கடற்பிரதேசங்களில் கழிவுகளைச் சேர்த்தல், என்பவற்றாலும், இயந்திரவலை மீன்பிடிப்பு என்பவற்றாலும் ஆமைகள் அழிந்து வருகின்றன. ஆயிரத்தில் ஒரு ஆமையே இந்த ஆபத்துக்கள் தாண்டி உயிர்வாழ முடிகிறது. ஆதலால் அதன் உயிர் விகிதாசாரம் குறைந்து வருகிறது. பல ஆமையினங்கள் முற்றாக மறைந்து வருகின்றன.

இவ்வுலகின் பழமையான உயிரினம், இயற்கைச் சமநிலை பேணுவதற்கு உதவும் உயிரினம் அழிந்து போவதைத் தடுக்கவும், சர்வதேச ரீதியாகக் கவனங்கொள்ளச் செய்வதற்காக மே 23 ந் திகதியை ஆமைகள் தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளார்கள். ஆமைகளை வேட்டையாடுவதற்கு எதிரான சட்ட வரைபுகளை மேற்கொண்டுள்ளார்கள். உலகின் பலபாகங்களிலும், தன்னார்வத் தொண்டர் அமைப்புக்கள், ஆமைகள் முட்டையிட்டுக் குஞ்சுபொரிக்கும் காலங்களில், அவற்றைப் பாதுகாத்துக் கடலில் சேர்த்து வருகின்றார்கள்.

மண் பயனுறவேண்டும் என்பதற்காய் உயிர் ஆமைகளை பாதுகாப்பதும், மனிதம் காப்பதற்காக அறியாமை, முயலாமை, இயலாமை, பொறாமை எனும் ஆமைகளை அகற்றுவதும் அவசியம்.