வினோதம்

பொதுவாக இன்றைய இயற்பியலில் பிக்பேங் என்ற பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த கொள்கை, பிரபஞ்சத்தின் விரிவாக்கத்தை ஆர்முடுகச் செய்து கொண்டிருக்கும் கரும் சக்தி மற்றும் கரும் பொருள் போன்ற கூறுகள் மற்றும் ஈர்ப்பு விசையின் தன்மை என்பன போன்றவை முழுமையாக விளக்கப் படாத சூழலே இருந்து வருகின்றது.

இன்னொரு புறம் எமது பிரபஞ்சத்துக்கு 10 அல்லது 11 பரிமாணங்கள் இருக்கலாம் என்றும் சில பௌதிகவியலாளர்களால் நம்பப் படுகின்றது. இதற்கான காரணத்தைப் பார்ப்போம். நிகழ்காலத்தில் பிரபஞ்சத்தில் காணப்படும் 4 வகை விசைகளில் முக்கியமானதான ஈர்ப்பு விசை தவிர்த்து ஏனைய மின்காந்த விசை, இலகு அணுக்கரு விசை, கடின அணுக்கரு விசை ஆகிய 3 தொடர்பாகவும் அவற்றின் தன்மை தொடர்பிலும் பௌதிகவியல் அறிஞர்கள் முக்கியமான கணிதவியல் கோட்பாடுகளை உருவாக்கி பாரிய ஒருங்கிணைப்புக் கொள்கையை (GUI - Grand Unification Theory) வடிவமைத்துள்ளனர்.

ஆனால் Gravity எனப்படும் ஈர்ப்பு விசையை இவற்றுடன் கோட்பாட்டு ரீதியாக ஒருங்கிணைக்க இதுவரை முடியாத காரணத்தால் இந்த GUI கொள்கை பூரணமற்றுக் காணப் படுகின்றது.

ஈர்ப்பு விசை பற்றி புரிந்து கொள்ள குவாண்டம் கொள்கையுடன் பொதுச் சார்புக் கொள்கையை இணைத்து குவாண்டம் கிராவிட்டி (Quantum Gravity) என்ற புது கோட்பாடு வருங்காலத்தில் உருவாக்கப் பட வேண்டும். இந்த நோக்கத்தை அடைய கணித ரீதியான தர்க்கத்தின் அடிப்படையில் விருத்தி செய்யப் பட்டு வருவது தான் Super String Theory எனப்படும் சரக் கோட்பாடு ஆகும்.

இந்த கோட்பாட்டில் பரிசோதனை ரீதியாக நிரூபிக்கப் படாத கணித சூத்திரங்கள்
Compactification எனப்படும் பொருத்தமாக்கல் முறையில் பிரபஞ்சத்தின் Space-time என்ற கணிதவியல் மாடலுக்கு 10 அல்லது 11 பரிமாணங்கள் (Dimensions) உள்ளன என்று கூறுகின்றது. இதனால் இக்கொள்கை Super Symmetric string theory என்றும் கூறப்படுகின்றது.

இது முற்றுப் பெறாத நிலையில் இருப்பதாலும், பரிசோதனை ரீதியாக நிரூபிக்கப் பட முடியாததாலும் பெரும்பாலான விஞ்ஞானிகள் இந்த ஆய்வைப் புறக்கணிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.