வினோதம்

சனிக்கிழமை இரவு முழுதும் ருவாண்டா தலைநகர் கிகாலியில் சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உலக வெப்பமயமாதலைத் தடுப்பதற்காக நடத்திய பேச்சுவார்த்தையின் பிரகாரம் முக்கிய ஒப்பந்தம் ஒன்றிட்கு பெரும்பான்மை இணக்கம் தெரிவித்து வெற்றி கண்டுள்ளன.

அதாவது நமது பூமியில் வளிமண்டலத்தில் அதிகளவு சேர்வதன் மூலம் புவி வெப்பம் அதிகரிப்பதற்குக் காரணமான வாயுக்களில் முக்கியமானது  ஹைட்ரோ ஃபுளூரோ கார்பன் என்ற வாயுவாகும். இந்த வாயு கார்பன் டை  ஆக்ஸைட் போன்ற பச்சை வீட்டு விளைவை (Green house effect) ஏற்படுத்தும் வாயுக்களை விட ஆயிரம் மடங்கு அதிகமாக புவி வெப்பமடைய காரணமாக இருக்கின்றது எனக் கணிக்கப் பட்டுள்ளது. உதாரணமாக நாம் பாவிக்கும் மின் உபகரணமான குளிர்சாதானப் பெட்டிகள் மற்றும் குளிரூட்டிகள் ஆகிய சாதனங்கள் செயற்பட ஹைட்ரோ ஃபுளூரோகார்பன் வாயு முக்கியமானதாகும்.

நம் சுற்றுச் சூழலைக் குளிர்மைப் படுத்த உதவும் இந்த உபகரணங்கள் புவி வெப்பம் அடையக் காரணமாக இருக்கின்றன என்றால் நீங்கள் ஆச்சரியப் படுவீர்கள். ஆனால் உண்மை அதுதான்.  இந்நிலையில் ருவாண்டாவில் சனிக்கிழமை எட்டப் பட்ட ஒப்பந்தம் மூலம் செல்வந்த நாடுகளில் ஹைட்ரோ ஃபுளோரோகார்பன் வெளியிடும் உபகரணங்களின் பயன்பாடு மற்றும் உற்பத்தி இன்னும் 3 ஆண்டுகளில் முற்றாக நிறுத்தப் படும் எனவும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் மற்றும் வறிய நாடுகளில் இம்முயற்சி இன்னும் சில ஆண்டுகளில் ஊக்கம் பெறும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

- நவன்