வினோதம்

 

பொதுவாக விமானப் பயணம் என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை அது சற்று ஆபத்தானது என்ற பயம் இருந்தாலும் மிகவும் விரும்பப் படும் பயண மார்க்கமாகும். ஆனால் இந்த அனுபவத்தை உலக சனத் தொகையில் இதுவரை 5% வீதமான மக்களே பெற்றுள்ளனர் அதாவது ஒரு முறையாவது விமானத்தில் பயணித்துள்ளனர் என ஒரு புள்ளி விபரம் கூறுகின்றது என்றால் நிச்சயம் ஆச்சரியப் படுவீர்கள்.

இது போன்ற சில ஆச்சரியமான விமானத் தகவல்களைப் பார்ப்போம்...

1.ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இன்றைய உலகில் வானில் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள் பயணித்த வண்ணம் உள்ளனர்.

2.ஒவ்வொரு வருடமும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள், விமானத்தில் வழங்கப் படும் கிட்டத்தட்ட 10 மில்லியன் போத்தல்கள் வைன் குடிக்கின்றனர்.

3. வானில் பறக்கும் எந்தவொரு பயணிகள் விமானமும் மின்னலால் பாதிக்கப் பட முடியாது. ஏனெனில் ஒரு மின்னல் தாக்குதலைத் தாக்குப் பிடிக்கும் விதத்தில் தான் விமானங்கள் வடிவமைக்கப் படுகின்றன. ஆனால் மிகச் சிறிய பறவைகள் இரு புறமும் இறக்கைகளில் உள்ள விமான எஞ்சினுக்குள் சென்று மோதினால் அந்த விமானம் விபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது.

4.1919 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் திகதி இலண்டனின் ஹெஸ்டொனில் இருந்து பாரிஸின் லே பௌர்கெட்டுக்கு சென்ற விமானமே முதலாவது சர்வதேச ஒழுங்கமைக்கப் பட்ட ஏர்லைன் சேவை விமானமாகும்.

5.லக்சரி பயணமான பிஸ்னஸ் கிளாஸ் 1979 ஆம் ஆண்டு கண்டாஸ் (Qantas) ஏர்லைன்ஸால் அறிமுகப் படுத்தப் பட்டது.

6.விமானப் பயணம் குறித்து மிகவும் அஞ்சுபவர்கள் Qantas ஏர்லைன்ஸை பயன்படுத்தலாம். ஏனெனில் இதுவரை அந்த ஏர்லைன்ஸில் எந்த விமானமுமே விபத்தில் சிக்கியதில்லை. அதாவது பாதுகாப்பு அளவீடு மிக அதிகம்..

7.எந்தவொரு சர்வதேச விமானத்தின் பைலட்டுக்களும் கட்டாயமாக ஆங்கிலம் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

8.10 000 அடிக்குக் கீழ் பறக்கையில் ஒரு விமானத்துக்குள் பிராண வாயு முகமூடிகள் தேவைப்படாது. ஆனால் எந்த ஒரு கட்டத்திலும் பொதுவாக விமானத்தில் உள்ள பிராண வாயு முகமூடிகள் (Oxygen masks) 10 தொடக்கம் 20 நிமிடமே ஒரு பயணிக்கு உதவக் கூடும்.

9. பிரிட்டனில் உள்ள அரைவாசி மிகப் பெரிய விமான நிலையங்களில் ஒரு சிறு விமானத்தைப் பார்க்கிங் செய்வதை விட வெளியே உள்ள கார் பார்க்கிங்கில் ஒரு காரைப் பார்க்கிங் செய்யும் செலவு அதிகம்.

10.தற்போது பயணத்தில் உள்ள விமானங்களில் மிகப் பெரியது போயிங்கின் 747 விங்ஸ்பான் ஆகும். இது 195 அடி நீளமானது அதாவது இந்த விமானத்தின் இறக்கைகள் விமானத்தின் நீளத்தை விட அதிகம்.

11.ஒலியை  விட வேகமாகப் பயணம் செய்யும் கொன்கோர்ட் விமானத்தின் பைலட்டுக்களை விட அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

12. அமெரிக்க வான் பரப்பில் விமானம் ஒன்று பயணம் செய்கையில் பிறக்கும் குழந்தை ஒன்றுக்கு பிறப்பு அடிப்படையில் அமெரிக்கக் குடியுரிமை வழங்கப் படும் சட்டம் உள்ளது.

13.நீங்கள் பயணம் செய்யும் விமானம் விபத்தில் சிக்கி நீங்கள் இறப்பதற்கான வாய்ப்பு 4.7 மில்லியனுக்கு 1 ஆகும்.