வினோதம்

சமீபத்தில் நாசாவின் ஸ்பிட்சர் விண் தொலைக்காட்டி (Spitzer space telescope) மற்றும் சிலியில் உள்ள தொலைநோக்கி ஆகியவற்றின் மூலம் பூமியில் இருந்து 39 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள டிராப்பிஸ்ட் 1 (Trappist 1) என்ற நட்சத்திரமும் அதனைச் சுற்றி வரும் பூமியை ஒத்த 7 கிரகங்களும் அவதானிக்கப் பட்டுள்ளன.

இந்த அவதானிப்பின் மூலம் Exoplanet hunt எனப்படும் உயிர் வாழ்க்கைக்குத் தகுந்த பூமியைப் போன்ற கிரகங்களின் தேடுதல் முன்பு எதிர்பார்த்திருந்ததை விட விரைவில் சாத்தியமாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த 7 கிரகங்களிலும் 3 கிரகங்கள் நிச்சயம் பூமியைப் போன்ற மலைகளையும் தண்ணீரையும் கொண்டிருக்கும் சாத்தியம் உள்ளது என நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நாசாவாலும் பெல்ஜியத்தைச் சேர்ந்த ஆராய்ச்சிக் குழு ஒன்றினாலும் புதன்கிழமை இக்கண்டுபிடிப்பு வெளியிடப்பட்டது. இதில் பூமியில் இருந்து 235 டிரில்லியன் மைல் தொலைவில் Aquarius (கும்பம்) நட்சத்திர தொகுதியில் உள்ள மந்தமான நட்சத்திரமே Trappist 1 ஆகும்.

அதிசயம் என்னவென்றால் இந்த டிராப்பிஸ்ட் 1 நட்சத்திரத்தை சூரியனுடன் ஒப்பிட்டால் குறித்த பூமியை ஒத்த 7 கிரகங்களும் புதனின் ஒழுக்குக்கு உள்ளே வந்து விடும். (சூரியனுக்கு மிக அண்மையில் உள்ள கிரகம் புதன்) அவ்வளவு நெருக்கமாக இந்த அத்தனை கிரகங்களும் டிராப்பிஸ்ட் 1 இனை சுற்றி வருகின்றன.

டிராப்பிஸ்ட் 1 இன் 6 கிரகங்களின் வெப்பநிலை 0 பாகையில் இருந்து 100 பாகை செல்சியஸுக்குள் உள்ளது. புதனை விட மிக அண்மையில் இக்கோள்கள் சுற்றி வரும் போதும் டிராப்பிஸ்ட் 1 சூரியனை விட 200 மடங்கு மந்தமான வெப்பம் குறைந்த நட்சத்திரமாக இருப்பதால் அக்கிரகங்கள் உயிர் வாழ்க்கையைத் தக்க வைக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகின்றது. மேலும் இக்கிரகங்கள் யாவும் பூமி அல்லது வெள்ளிக் கிரகங்களின் அளவை ஒத்த பாறைகளால் ஆன தரை மேற்பரப்பைக் கொண்டவை ஆகும். இக்கிரகங்களைக் கண்டு பிடித்த நாசாவின் ஸ்பிட்செர் விண் தொலைக்காட்டி 2018 ஆம் ஆண்டு வரையே செயற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மனித இனம் இதுவரை கண்டு பிடித்த நட்சத்திர தொகுதிகளில் இந்தளவுக்கு அதிக exoplanet கள் அதுவும் ஒரே நட்சத்திரத்தை சுற்றி வருகின்றமை என்பது இதுவே முதற் தடவை ஆகும். அதனால் இன்று வியாழன் கூகுள் தேடுபொறி தனது முகப்பில் கூகுள் டூடுளாக இந்த Exoplanet discovery இனை சிறப்பித்துள்ளது.