வினோதம்

இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இன்றைய இளம் தலைமுறையினருக்கு இவைகள் குறித்து எந்தளவு தெரியும் என்று
தெரியவில்லை. நமது பழைய தமிழர் பண்பாட்டில் கூட்டு குடும்பங்களுக்கு
முக்கியத்துவம் இருந்தது. ஒரே வீட்டில் 5 முதல் 10 சகோதரர்கள் வரை
குடும்பமாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். அவர்கள் வாழ்வதற்காக விசாலமான
வீடு இருக்கும். நல்ல காற்றோட்டத்துடன் கட்டப்பட்டிருந்த வீடுகளில்
தாழ்வாரங்கள், பெரிய ஜன்னல் வைக்கப்பட்டிருக்கும். அதன் இடுக்குகள்,
தாழ்வாரத்தில் சிட்டு குருவிகள் கூடு கட்டி மனிதர்களோடு வாழ்ந்து வரும்.
வீடுகளில் சிட்டுக்குருவிகள் கூடுகட்டினால், அந்த வீடுகளில் செல்வம்
கொழிக்கும் என்ற நம்பிக்கையும், மக்கள் மத்தியில் உண்டு

அதிலும் புதியதாக திருமணமானவர்கள் குடியிருக்கும் வீட்டில் சிட்டு குருவி
கூடு கட்டினால், இந்த வீட்டில் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையும்
இருந்தது. கூட்டு குடும்பத்தில் முதியவராக இருப்பவர் தினமும் காலையில்
அரிசி, கோதுமை கேழ்வரகு உள்ளிட்ட உணவு தானியங்களை கொண்டுவந்தால், அதை
பார்த்ததும் சிறகடித்து பறந்து வரும் சிட்டு குருவிகள் மகிழ்ச்சியாக
உண்ணும்.

இப்படி மக்களோடு மக்களாக வாழ்ந்த சிட்டு குருவி இனம் தற்போது அடையாளம்
தெரியாத வகையில் அழிந்து வருகிறது. அதன் அழிவுக்கு பல காரணங்களை பறவை
ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கிறார்கள். கடந்த 25 முதல் 50 ஆண்டுகளுக்கு
முன் விசாலமாக கட்டப்பட்ட வீடுகள் பல இடிக்கப்பட்டு இன்றைய நவீன
காலத்திற்கு ஏற்ற வகையில் கட்டப்படுவதால், சிட்டு குருவிகள் கூடு கட்ட
இடமில்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பது ஒரு சாராரின் கருத்தாகவுள்ளது.
பட்டணம், நகர பகுதியில் ஆங்காங்கே சுற்றி திரியும் புறாக்களுக்கு மக்கள்
பூங்கா உள்ளிட்ட பகுதியில் தீனி போட்டு பராமரிக்கிறார்கள். புறாக்கள்
பொதுவாக மரங்களில் வசிப்பதில்லை. சிட்டு குருவிகள் கட்டியுள்ள வீடுகள்,
கட்டிடத்தின் தாழ்வாரங்கள், இடுக்குகளை ஆக்கிரமித்து கொள்கிறது. இதனால்
சிட்டு குருவிகள் நகர பகுதியில் வாழ முடியாமல் அதன் இனப்பெருக்கம்
அழிந்துவிட்டது என்பது சிலரின் கருத்தாகவுள்ளது. சரி நகர பகுதியில் இந்த
பிரச்னை உள்ளது உண்மை. ஆனால் கிராமங்களில் வாழ்ந்த குருவிகள் ஏன் காணாமல்
போய்விட்டது.

இந்த கேள்விக்கும் ஆராய்ச்சியாளர்களிடம் பதில் உள்ளது. இது என்னவெனில்
சமீப ஆண்டுகளாக ஒவ்வொரு மனிதரின் அறிவிக்கப்படாத வாழ்க்கை துணைபோல்
மாறிவிட்டது செல்போன் ஆதிக்கம் தான். புற்றிச்சல் புற்றுகள்போல் போட்டி
போட்டு செல்போன் கம்பெனிகள் உருவாகியுள்ளது. தங்கள் வாடிக்கையாளர்களுக்கு
தரமான சேவை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆங்காங்கே செல்போன் ரிசிவிங்
கோபுரங்கள் அமைத்து வருகிறார்கள். அதிலிருந்து வெளியேறும் கதிர்
வீச்சுகள் சிட்டு குருவி இனத்தின் அழிவுக்கு முக்கிய காரணமென்று அடித்து
சொல்கிறார்கள். சிட்டுக்குருவிகள் விரும்பி உண்ணும் கம்பு, கேழ்வரகு,
சோளம், திணை போன்ற சிறுதானியங்களின் பயன்பாடு குறைந்துவிட்டதும், நெல்
பயிரிடுதலில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதும்
சில முக்கியக் காரணங்களாக கூறப்படுகிறது. செல்போன் டவர்களின் பாதிப்புகளை
விட இத்தகைய காரணங்களே சிட்டுக்குருவிகளின் வீழ்ச்சிக்கு முக்கியக்
காரணமாக கூறப்படுகிறது.கடந்த 6 ஆண்டுகளில் 40க்கும் மேற்பட்ட நாடுகள்
மார்ச் 20ம் தேதி உலக சிட்டு குருவி தினமாக அனுசரிப்பதுடன், குருவி
இனத்தை பாதுகாக்க என்னென்ன வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து
விழிப்புணர்வு பிரசாரமும் செய்து வருகிறது. இன்று உலகில் பல நாடுகளில்
சிட்டு குருவி தினம் அனுசரிக்கப்படுகிறது.

புதியதாக வீடு கட்ட மேல்கூரை மோல்டிங் போடும்போது குருவிகள் வசிக்க
சிறியளவில் இடம் வசதி செய்ய வேண்டும். வீட்டு முற்றத்திலோ அல்லது
தாழ்வாரத்திலோ எங்கு இடம் கிடைக்கிறதோ அங்கு குருவிகள் குடிப்பதற்காக
அகலமான பாத்திரம், பிளேட், பக்கெட் போன்றவற்றில் தண்ணீர் ஊற்றி வைக்க
வேண்டும். முடிந்தால் வீட்டில் உள்ள அரிசி, கேழ்வரகு, கோதுமை உள்ளிட்ட
தானியங்களை சிறியளவில் வைக்கவும்.* வீட்டில் இடம் கிடைக்கும் இடங்களில்
காலி டப்பாக்கள் வைப்பதும் நல்லது. அதில் கூடு கட்டும் குருவிகள்
முட்டையிட்டு இன பெருக்கம் செய்ய உதவும்.