வினோதம்
Typography

தென் அமெரிக்காவின் அமேசன் நதியைச் சார்ந்திருக்கும் உலகின் மிகப் பெரிய வனமான அமேசன் காட்டில் இதுவரை கண்டு பிடிக்காத மரங்கள் மற்றும் மரம் சார்ந்த உயிரினங்களின் எண்ணிக்கையும் அவற்றைக் கணக்கிட எடுக்கும் காலமும் அதிர வைப்பதாக உள்ளது. மரம் சார்ந்த உயிரின வகைகள் மாத்திரம் 16 000 என அண்ணளவாகக் கணிக்கப் பட்டுள்ளதுடன் இவை அனைத்தையும் கண்டு பிடிக்க 300 வருடங்கள் எடுக்கும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்த கணிப்பை அமேசன் வன உயிரினங்களுக்கான சிக்காக்கோவின் ஃபீல்டு அருங்காட்சியகத்தின் சேகரிப்புக்களைப் பார்த்த வனவியல் ஆய்வாளர்களே உறுதி செய்துள்ளனர். மேலும் சுமார் 4000 அரிய வகை அமேசன் காட்டு மரங்களும் இன்னமும் கண்டு பிடிக்கப் பட வேண்டி உள்ளன என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. உலகில் மிகப் பாரிய உயிர்ப் பல்வகைமை நிலவும் பகுதிகளில் முன்னணியில் உள்ள இடம் அமேசன் மழைக் காடு ஆகும். இங்கு வசிக்கும் அனகொண்டா என்ற வலிமையானதும் நீளமானதுமான மலைப் பாம்பு உட்பட புல் வெட்டும் எறும்புகள் வரை தனிப்பட்ட உயிரினங்கள் எண்ணற்றவை இனம் காணப் பட்டுள்ளன. அனகொண்டா பாம்பு பற்றி ஹாலிவுட் உலகில் திரில்லர் திரைப்படம் கூட வெளியாகி இருந்தது.

ஆனால் கண்ணுக்குத் தென்படாத மர உயிரினங்களான Plethora போன்றவை தான் அங்கு அதிக உயிர் பல்வகைமை உடையதாக உள்ளது. இவற்றை முற்றாக கண்டு பிடிக்கவே 3 நூற்றாண்டு ஆகும் எனக் கூறப்பட்டுள்ளது. அமேசன் காடானது மருந்து வகைகள் தயாரிப்பதற்கும் அரிய வகைத் தாவரங்களை விவசாயம் செய்வதற்கும் என மனித இனத்துக்கு உதவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தகவல் : Mail Online

http://www.dailymail.co.uk/sciencetech/article-3686745/A-tree-mendous-challenge-Amazon-rainforest-boasts-woody-species-300-YEARS-discover-all.html

- 4தமிழ்மீடியாவுக்காக நவன்

BLOG COMMENTS POWERED BY DISQUS