சமூக ஊடகம்

மறைந்த கவிஞர் நா. முத்துக்குமார் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகளைப் பார்க்கையில் பல்வேறு எண்ண ஓட்டங்கள் எழுந்து மறைந்தன. ஆனால் தன் வாழ்வு மகத்தான அனுபவம் என்பதை உணர்த்தி நின்றன அவனது எழுத்துக்கள்...

தீயோடு தோன்றுக!
1975-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி என் தாயின் பிறந்தகமான சென்னையில், எழும்பூர் அரசு மருத்துவ மனையில் நான் பிறந்தபோது, ஒட்டுமொத்த மருத்துவமனையே மாடிக்கு ஓடி வந்தது. என்னைப் பார்க்கத்தான் வருகிறார்கள் என்று நான் என் பால்யத்தின் முதல் புன்னகையைப் பூமிக்குப் பரிசளித்தபோது, அந்தக் கூட்டம் என்னைக் கடந்து, மொட்டை மாடிக்குச் சென்றது. ஒரு சில உயரமான கட்ட டங்களே சென்னையாக இருந்த அந்த மொட்டை மாடியில் பதற்றத்துடன் அவர்கள் பார்த்த காட்சி எல்.ஐ.சி. கட்டடம் தீப்பிடித்து எரிந்துகொண்டு இருப்பதை. இப்படித்தான் நண்பர்களே நான் பிறந்தபோதே என்னைச் சுற்றித் தீப்பிடித்தது. அந்தத் தீயை அபசகுனமாகக் கருதாமல், என் தகப்பன் தன் நாட்குறிப்பில் இப்படி எழுதினான்... 'இன்று உலகின் இரண்டாவது அறிவாளி பிறந்தான்!' நான் முதல் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்!

ஆழம் அறி!
எங்கள் வீடு முழுக்கப் புத்தகங்களே வியாபித்திருந்தன. தமிழாசிரியரான தந்தை தேடித் தேடி புத்தகம் வாங்கினார். வால்கா முதல் கங்கை வரை என்னை புத்தக உலகில் பயணிக்கவைத்தார். மூன்றாம் வகுப்பு படிக்கையில் சந்தை என்ற தலைப்பில் சிறுகதை எழுதி அப்பாவிடம் வாசிக்கக் கொடுத்தேன். காய்கறிச் சந்தையில் கடை வைத்திருப்பவரைப்பற்றிய கதை. வாசித்துவிட்டு ஒன்றுமே சொல்லாமல் திருப்பிக் கொடுத்தார். அடுத்த நாள் அதிகாலை ஐந்து மணிக்கு என்னை எழுப்பி சைக்கிளில் அமரவைத்து, காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறிச் சந்தைக் குக் கூட்டிச் சென்றார். ஒருபுறம் லாரியில் இருந்து கூடை கூடையாகத் தக்காளிகள் இறங்கிக்கொண்டு இருக்க... உள்ளூர் விவசாயிகள் கீரைக் கட்டுகளை அடுக்கிக்கொண்டு இருந்தனர். எங்கிருந்தோ வந்த ஒரு பசு மாடு, வாழை இலை ஒன்றை இழுத்து கடிக்கத் துவங்க, யாரோ ஒருவர் அதை விரட்டிக்கொண்டு இருந்தார். 'இந்த டீக்கடையில் நான் காத்திருக்கிறேன். நீ மார்க்கெட் முழுக்கச் சுற்றிப் பார்த்துவிட்டு வா' என்றார் அப்பா. அரை மணி நேரம் கழித்துத் திரும்பி வந்த என்னிடம் 'உன் கதை நன்றாக இருந்தது. ஆனால், அதில் உண்மையான காய்கறிச் சந்தை இல்லை. எந்த இடத்திலும் காய்கறியின் வாசம் இல்லை. எதையும் உணர்ந்து அனுபவித்து எழுது, உன் எழுத்து வலிமையாக இருக்கும்' என்றார். வீட்டுக்குச் சென்றதும் அந்தக் கதையைக் கிழித்துப் போட்டேன். அன்று இரண்டாம் முறையாக நான் நா.முத்துக்குமார் ஆனேன்!

கோபம் கற்றுணர்!
பள்ளியில் படிக்கும்போதே என் கவிதைகளும் கதைகளும் பத்திரிகைகளில் வர ஆரம்பித்தன. எங்கள் பள்ளியில் ஒரு சில ஆசிரியர்கள் தங்களிடம் டியூஷன் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே பாஸ் மார்க் போட்டார்கள். வகுப்பிலும் சொல்லித் தருவதில்லை. இதைக் கண்டித்து தூசிகள் என்று கவிதைத் தொகுதி வெளியிட்டேன். பிரேயரில் என் கவிதை விவாதிக்கப்பட்டு, என்னை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்தார்கள். வார்த்தைகள் என்னைக் கைவிட்ட நிலையில், குற்றஉணர்வுடன் அப்பா முன் நின்றேன். அவர் அமைதியாகச் சொன்னார், 'இப்போதுதான் உன் எழுத்து வலிமையாகிக்கொண்டு இருக்கிறது. இன்னும் நிறைய எழுது!' மூன்றாம் முறையாக நான் நா.முத்துக்குமார் ஆனேன்.

உன் திசை உற்றுணர்!
காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் சேர்ந்தேன். எங்கள் வீடும் கல்லூரியும் அருகருகே இருந்ததால், பத்திரிகைகளில் இருந்து என் கவிதைக்கு வரும் சன்மானத் தொகையை என் வகுப்புக்கே வந்து தருவார் தபால்காரர். வேதியியல் பேராசிரியர் ஒருவர் ஒருநாள் இதைக் கவனித்து, 'இப்படியே கதை, கவிதைன்னு சுத்துனா, சத்தியமா நீ பாஸாக மாட்டே' என்று திட்டினார். எப்போதும் அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவன் ஒருவன் என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான். அன்று ஒரு வைராக்கியம் தோன்றியது. அவனைவிட ஒரு மார்க்காவது அதிகம் வாங்க வேண்டும். 85 சதவிகிதம் பெற்று தேர்ச்சியடைந்தேன்.

அவனுக்குக் கிடைக்காத பி.டெக். வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என் சபதத்தை முடித்துக்கொண்டு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. தமிழ் இலக்கியம் சேர்ந்தேன். இவ்வளவு மார்க் எடுத்துட்டு ஏன் தமிழ் படிக்கிறாய் என்று அறிவுரை சொன்னார்கள். மௌனமாகத் தலையாட்டிவிட்டு, மண்ணில் விழுந்த மழைத் துளிபோல் தமிழின் வேர் வரை பயணிக்கத் தொடங்கினேன். கல்லூரியிலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி அடைந்ததும், அமெரிக்காவில் இருந்து ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் பணிக்கு வரச் சொல்லிக் கடிதம் வந்தது. மாதம் மூன்று லட்சம் சம்பளம். மீண்டும் அப்பா முன் நின்றேன். நான் திரைப்படத் துறையில் உதவி இயக்குநராகப் போகிறேன். இந்த வேலை வேண்டாம் என்றேன். என்னை உற்றுப் பார்த்துவிட்டுச் சொன்னார், 'உன் முடிவை நீயே எடு. பின் நாட்களில் அதற்காகச் சந்தோஷப்படவும் வருத்தப்படவும் உனக்கே உரிமை உண்டு!' அன்று நான் சலனப்பட்டு அமெரிக்கா சென்றுஇருந்தால், முனைவர் நா.முத்துக்குமாராக மட்டுமே இருந்திருப்பேன். சினிமாவுக்கு வந்ததால் நான்காம் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்.

எரிக்க எரிக்க எழுந்து வா!
இயக்குநர் அருண்மொழி, பட்டுக்கோட்டை பிரபாகர், அறிவுமதி என்று பலரிடம் உதவியாளராக இருந்துவிட்டு, என் ஆசான் பாலுமகேந்திராவிடம் சேர்ந்தேன். பெப்சிக்கும் படைப்பாளிகளுக்கும் பிரச்னை நடந்த காலகட்டம் அது. ஒரு வருடமாக வேலை நிறுத்தம். தன் காரை விற்று எங்களுக்குச் சம்பளம் கொடுத்தார் பாலுமகேந்திரா சார். என் தூர் கவிதையை ஒரு விழாவில் எழுத்தாளர் சுஜாதா வாசிக்க, என் மேல் மஞ்சள் வெளிச்சம் விழுந்தது. நண்பர்கள் பாடல் எழுத அழைத்தார்கள். விளையாட்டாக எழுதத் தொடங்கி, கடந்த ஆறு வருடங்களாக அதிக பாடல்கள் எழுதும் பாடலாசிரியர் என்கிற நிலை வரை ஓடிக்கொண்டு இருக்கிறேன்.

'சினிமா உலகம் போட்டியும் பொறாமையும் நிறைந்தது. இங்கு தூங்கும்போதுகூட காலை ஆட்டிக்கொண்டேதான் தூங்க வேண்டும்; இல்லையென்றால், இறந்துவிட்டான் என்று எரித்து விடுவார்கள்' என்றார் என்.எஸ்.கிருஷ்ணன். சென்ற வருடம் என் திருமண நாளன்று, நான் விபத்தில் இறந்துவிட்டதாகவும், தற்கொலை செய்துகொண்டதாகவும் என்னைப்பற்றி வதந்தி கிளம்பியது.

இறந்துபோனதை அறிந்த பிறகுதான், 'இறக்க வேண்டும் நான்' என்று எப்போதோ நான் எழுதிய கவிதை ஞாபகம் வந்தது. முகம் தெரியாத அந்த நண்பருக்காகவாவது இன்னும் கவனமாகவும், கூடுதலாகவும் உழைக்க வேண்டும் என்று தோன்றியபோது, நான் ஐந்தாம் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்!

இந்தக் கட்டுரையின் முடிவில் கவிஞரே ஆறாவது முறையும் நா. முத்துக்குமார் ஆவீர்களா... என்ற ஏக்கம் வெளிப்பட்டிருந்தது. வாசித்து முடிக்கையில் மனம் வலித்துக் கண்கள் கலங்கின...

இன்று அவனது தம்பியின் வரிகளில் ஆறாவது முறையாக நா.முத்துக்குமார் எழுந்ததைக் காண முடிகையில் மகிழ்ச்சி பிறந்தது. கலங்கிய கண்ணகள் ஆனந்த நீரை உகுத்தன. முத்துக்குமாரின் தம்பியின் வரிகள் இனி...

ஆம் நண்பர்களே... அம்மா என்றழைக்கத் தெரியாத வயதில் எங்கள் தாயை இழந்தோம். அதற்குப் பிறகான ஒரு நிகழ்ச்சியில் 'பாவம் தாயில்லாப் பிள்ளைகள்...'' என எங்களைப் பரிதாபப் பார்வை பார்த்ததை விரும்பாத எங்கள் தந்தை, உறவினர்கள் ஒன்றுகூடும் எல்லா விருந்து விசேஷங்களிலும் விபரம் தெரியும் வரையில் எங்களைத் தவிர்த்தார்...

அதே மனநிலையில் தான் நாங்களும் வளர்ந்தோம். இன்று காலம் அதே கொடூர மனநிலைக்கு எங்கள் பிள்ளைகளையும் தள்ளியிருக்கிறது. எங்களது பிள்ளைகள் மீதும் அந்த பரிதாபப் பார்வைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை.

என் அண்ணன் நா.முத்துக்குமார் சம்பாதித்த நண்பர்களையும், உறவுகளையும் பார்க்கையில், அண்ணன் திருப்தியான வாழ்வு வாழ்ந்ததாகவே எங்களை எண்ண வைக்கிறது. சினிமாவை எவ்வளவு நேசித்தாரோ அதே அளவிற்கு எல்லோரையும் தன் உறவுகளாகவே கருதி வந்திருந்தார். கோடிக்கணக்கானவர்களின் அன்பை விட அவர் சம்பாதித்த எதையும் நாங்கள் பெரிதாகக் கருதவில்லை.

ஏழ்மையின் பிடியில் பிறந்திருந்தாலும், எங்களது வாழ்வு எல்லா காலங்களிலுமே எளிமையாகவே இருந்திருக்கிறது. எங்கள் மனநிலை என்றும் பணத்தை பிரதானமாக நினைத்ததில்லை. விமானங்களில் உயர பறந்தாலும், செருப்புகளற்ற எங்களது கால்கள் இளவயதிலேயே கிராமத்தின் நெருஞ்சி முட்கள் பூத்த ஒத்தையடி பாதைகளுக்கும், சென்னையின் கரைந்தோடுகிற தார் சாலைகளின் உஷ்ணத்திற்கும் பழக்கப்பட்டே இருந்தது.

எங்களது தந்தை எங்களை பழக்கியதுப் போலவே எங்களது பிள்ளைகளையும் இந்த எளிமைக்குப் பழக்கப்படுத்தியே இது வரையில் வளர்த்திருக்கிறோம். எங்களது எளிய வாழ்விற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து விட்டே இறந்திருக்கிறார். கடனில்லாத வாழ்க்கை, யாரேனும் உதவி என கேட்டால் எந்த நிலையிலும் தட்டாமல் உதவி செய்வது என்கிற ஒன்றையே இறக்கும் வரையில் கடைப்பிடித்தவர். அவருக்கு கடன்கள் பிடிக்காது. இதுவரையில் பட்ட நன்றிக்கடன்களுக்காக மட்டுமே தலை வணங்கி வந்திருக்கிறோம். செய்திகளில் வருகிற பல குரூர கதைசொல்லிகளின் கட்டுக்கதைகளைப் போல அமைந்தது அல்ல அவரது வாழ்வு. அவரது வாழ்வு நெறிமுறைகளுக்கு உட்பட்டது. வாழ்வின் எந்தவொரு தருணத்திலும் தனக்கான ஒழுக்கத்தை அண்ணன் தவறவிட்டதே கிடையாது. அவரது உழைப்பை அருகிலிருந்து பார்த்து வளர்ந்தவன் நான் . அவரது உழைப்பு அசுரத்தனமானது. அதன் வெளிப்பாடான வளர்ச்சியைப் பார்த்தும் எங்களது பாதங்களை எப்பொழுதும் தரையில் தான் வைத்திருந்தோம். தயவு செய்து வரலாற்றில் அவரது வாழ்க்கையை தவறாக இடம்பெறச் செய்து விடாதீர்கள் என்கிற கோரிக்கைக்காகவுமே இக்கடிதம்.

இழவு வீட்டில் இழந்ததை விட கதைச்சொல்லிகளின் ஆதரவு கதைகளும், கடிதங்களும் எங்களது இருக்கிற வாழ்வையும் தின்று தீர்க்குமோ என அஞ்சுகிறேன். பிள்ளைகளை எங்களது பிள்ளைகளாகவே, எங்களது ப்ரியத்துடனேயே வளர்க்க விரும்புகிறோம். அவர்களது மனதில், வரும் காலங்கள் தவறான விதைகளை விதைக்க கூடாது என்கிற பதைபதைப்பு இன்னும் துரத்துகிறது.

ஒரு மகனாக, அண்ணனாக, கணவனாக,தகப்பனாக உறவுகளின் மீது அவர் கொண்டிருந்த பேரன்பு நிஜம். எங்களுக்கு எந்த குறையும் வைக்கவில்லை. அவரது இழப்பிலிருந்து இன்னும் எங்களால் மீளமுடியவில்லை. உங்களது அதீத அன்பினால் பல்வேறு தரப்பிலிருந்து உதவிகரங்கள் நீள்வது எங்களை மேலும் சங்கடப்படுத்தவே செய்கிறது. புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன். யாரையும் காயப்படுத்துவது எங்களது நோக்கமல்ல. எங்களுக்குத் தேவையானவற்றை சேர்த்து வைத்தேச் சென்றிருக்கிறார். மற்றெல்லோரையும் விட அவர் எங்கள் மீது கொண்ட அன்பு பெரிது.

என்னுடைய பதின் வயதுகளில், ''இவன் பேரு ராமசுப்பு..'' என்றும், இது விஜய்'' என்றும் தன் நண்பர்களாக அறிமுகப்படுத்தினார். அதன் பின் இயக்குநர் ராம், இயக்குநர் விஜய் என மாறினார்கள். அண்ணனின் நண்பன் எனக்கும் அண்ணன் என்கிற விதிப்படி அன்று முதல் எனக்கும் அண்ணன்களாகவே தொடர்கிறார்கள். அவரது அண்ணன்கள் எனக்கும் அண்ணன்களே. இதுவரையில் அப்படித் தான் பழகி வந்திருக்கிறேன் என்பதை அனைவருமே அறிவீர்கள். எனவே உங்களது சந்தேகங்களுக்கோ, யூகங்களுக்கே, புனைக்கதைகளுக்கோ எங்களில் யாரைவேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.

அண்ணன் மண்ணோடு வீழ்ந்து விட்டதாக நாங்கள் கருதவில்லை. நெடுமண் கீறி ஆழ புதைத்தபோதெல்லாம் வீழ்ந்து விடாமல் விதையென விருட்சமாய் முளைத்து எழுந்தவன். இன்னும் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் வெளியாகாமல் தான் இருக்கின்றன. தான் பெற வேண்டிய மூன்றாவது தேசிய விருதுக்கான படமாக 'தரமணி'யைத் தேர்ந்தெடுத்தும் வைத்திருந்தார். இன்னும் பல நூறு விழுதுகள் தனித் தனி மரமென வரும் காலங்களில் சினிமாவில் அவருடைய இருப்பை உணர்த்தும் என்றே நம்புகிறேன்.

சுஜாதாவின் ''நா.முத்துக்குமாரை சினிமா விழுங்கிவிடாமல் இருக்க ஸ்ரீரங்கநாதரைப் பிரார்த்திக்கிறேன்'' என்கிற வரிகளின் நினைவலைகள் கண்களுக்கு நீர் திரையிடுகின்றன. மரணம் ஒரு முரட்டுத்தனமான, இரக்கமேயில்லாத கறுப்பு ஆடு. ஒவ்வொரு முறையும் அது தனக்கு ப்ரியமான ரோஜாவை இளவயதிலேயே தின்று தீர்த்து ஏப்பம் விடுகிறது.

அள்ளித்தர அன்புடன்
நா.இரமேஷ்குமார்

எரிக்க எரிக்க எழுந்து வா! என்ற முத்துகுமாரின் வரிகள் பொய்கவில்லை இன்று அவனது தம்பியின் நம்பிக்கை வரிகளில் அவன் எழுந்து வந்திருக்கின்றான். இந்த நம்பிக்கை அவன் குடும்பத்தை ,வாரிசுகளை வாழ்விக்கும். ஆறாவது முறை தாண்டி அப்போதும் எழுந்து வருவான் நா.முத்துக்குமார் ....

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல் 'விலாத்தி ஷராப்' (Vilayai Sharaabt) யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ள நிலையில் அல்லு அர்ஜூன் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இத்தாலியில் பயண அனுபவங்களில் நாம் காண முடியும் முக்கிய அம்சம் விதவிதமான விளம்பரத் தட்டிகள். ஏனைய ஐரோப்பிய நாடுகளை விடவும் மிக இத்தாலியில் அதிகமாக நிறுவப்பட்டடிருக்கும் பிரமாண்டமான நிரந்தர விளம்பரத் தட்டிகளை விடவும், பெரும் ஊர்த்திகளில் நிறுவப்பட்ட நகரக் கூடிய தட்டிகளையும் கூடக் காணலாம்.

கடந்த தொடரில் கருந்துளைகள் என்றால் என்ன? அவற்றின் வகைகள் மற்றும் தோற்றம் என்பவை குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் விரிவாகப் பார்த்தோம்.

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கோடியில் ஒருவன்’ மற்றும் ‘காக்கி’ ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகவுள்ளன.

தமிழ் சினிமாவில் திருநங்கைகளை மையப்படுத்தி அவ்வபோது சில படங்கள் வெளிவருவதுண்டு. சில ஆண்டுகளுக்குமுன் விஜய்சேதுபதி ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாக நடித்திருந்தார். இப்போது திருநங்கைகள் தினத்துக்காக ஒரு பாடல் உருவாகியுள்ளது.