சமூக ஊடகம்

கிராமத்து மரத்தடியில், தேநீர்கடையில், கோவில் படிக்கட்டில், நாலுபேர் இருந்து பேசிக் கொள்ளும் காலம் ஒன்று இருந்தது. அவர்கள் பேச்சினை வெட்டிப் பேச்சு என்றும் சொல்வார்கள். ஆனால் அது ஒரு மறு கருத்துருவாக்கத்தின் துவக்கப்புள்ளி. இயக்குனர் கரு.பழனியப்பனும் தன்னுரையொன்றில் இப் பொருள்படப் பேசியிருப்பார். சமூகத்திற்கான கருத்துருவாக்கத்தில் பெரும் பொறுப்புடையவர்கள் ஊடகத்துறை சார்ந்தோர்.

அதற்கான பொறுப்புணர்வோடு பணியாற்றும் ஊடகத்துறை சார்ந்த பலருள் அந்தணன் எமக்கு நன்கு அறிமுகமானவரும் இனிய நண்பரும் கூட. சினிமாச் செய்திகளையும், விமர்சனங்களையும், சிலாகித்து ரசிக்கும் அவரது எழுத்துரு மிகவும் பிடிக்கும். அந்த விருப்பதிலேயே 4தமிழ்மீடியாவின், சினிமாப் பகுதிக்கான செய்தியாசிரியராக அவரை இணைத்துக் கொண்டோம். அவ்வாறு இணைந்து கொண்டதன் பின்னரான சந்திப்புகளின் போதும், உரையாடல்களின் போதும் அவரது உயரிய பண்புகளை அருகிருந்து அவதானித்திருக்கின்றேன். சினிமாப் பிரபலங்களாயினும், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்காதவாறு செய்திகள் பகிர வேண்டும் என்பதில் மிகுந்த அவதானம் காட்டுபவர் என்பதை அறிந்து கொள்ளும் வாய்ப்புக்கள் பணியின் போது வாய்த்திருக்கிறது. ஒரு தடவை நேரில் சந்தித்தபோது, புதிய முயற்சிகள் தொடர்பாக விசாரிக்கையில் " வலைப்பேச்சு " உரையாடல் குறித்துச் சொல்லியிருந்தார். பணிச்சுமை காரணமாக அது குறித்து நாம் அதிகம் கவனம் கொள்ளவில்லை.

இலங்கை சென்றிருந்தபோது 4தமிழ்மீடியாவின் செய்தியாளர்களோடு பேசிக் கொண்டிருக்கையில், புருஜோத்தமன் தங்கமயில், " வலைப்பேச்சு " உரையாடல் குறித்துச் சொன்னார். அதன் பின்னதாகவே அதில் கவனம் கொள்ளத் தொடங்கினேன். இப்போது தினமும் பார்க்க முடியாவிட்டாலும், சேர்த்து வைத்துப் பயணங்களின் போது பார்த்துவிடுகின்றேன்.

கிராமத்தின் கருத்துருவாளர்கள் போல், மூன்று பேர் அமர்ந்திருந்து எளிமையாக, உரையாடுகின்றார்கள். பரபரப்புச் செய்திகளுக்காக மீடியாக்கள் அலைந்து திரிகின்ற சமகாலத்தில், சினிமாச் செய்திகள்தானே எனக் கிசுகிசுக்களையோ, தரங்குறைந்த தகவல்களையோ சொல்லித் தொலைக்காமல், ஆறஅமர உட்காந்திருந்து, உண்மையான சமூகப் பொறுப்புணர்வோடு உரையாடுகின்றார்கள். அதற்காகவே அவர்களைப் பாராட்டத் தோன்றியது.

மூவரில் அந்தணன் மட்டுமே எமக்கு நேரடி அறிமுகமானவராயினும், பிஸ்மி அவர்களின் எழுத்துக்களை வாசித்திருக்கின்றோம். பத்திரிகை நாகரீகமும், பண்பும் தெரிந்தவர் என்பது அவரது எழுத்துக்களில் வெளிப்படுவது போல், பேச்சிலும் தெரிகிறது. இவர்களோடு இணைந்திருக்கும் சக்திவேல் இளையவர். இரு மூத்தவர்களுக்கும் இடையில் சிக்கிச் சிதறமால், சுழித்து வெளிவருகிறார். மூவருக்குமிடையாலான உரையாடல் தொகுப்பு, அவர்கள் எழுத்துப் போலவே சுவாரசியரத் தொடராக அமைவது சிறப்பு.

ஆர்ப்பாட்ட அலப்பறைகள் ஏதுமில்லாது, அழகான உரையாடலாக, நளினமான கதைசொல்லிகளாக, சமூகத்தின் தேவையுணர்ந்து உரையாடுகின்றார்கள். "வலைப்பேச்சு" ஒரு வருடத்தை நிறைவு செய்து, இராண்வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள தருணமிது. இணையப் பெருவெளியில், ஊடக தார்மீகம் உடைந்து போகும் அவலச்சூழலில், " வலைப்பேச்சு " அவசியமான ஒரு உரையாடல். எல்லாமே எக்ஸ்குளுசீவ் என்று சொல்லியவாறு இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் " வலைப்பேச்சு" குழுமத்தினருக்கு, மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள் !

வலைப்பேச்சுக் காண : https://www.youtube.com/channel/UCRTmSft-1I9f0yzTnz32oMg

- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்.