சமூக ஊடகம்

எனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த பதிவை எழுதுகிறேன். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆந்திராவின் நெல்லூரில் மருத்துவராக பணிபுரியும் மருத்துவர் லக்ஷ்மி நாராயணன் என்பவர் தனக்கு இருந்த உடல் உபாதைக்காக சேர்க்கப்படுகிறார்.

அப்போது அவருக்கு தீவிர மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. அப்போது கோவிட் 19 நோய் கண்டறியப்படுகிறது. இந்த நோய் முற்றி மரணமடைகிறார் இதையடுத்து அந்த தனியார் மருத்துவமனை ஊழியர்கள் அவசர ஊர்தி மூலம் இறந்த மருத்துவரின் உடலை அருகில் இருக்கும் அம்பத்தூரில் உள்ள தகன மையத்திற்கு எடுத்துச்செல்கின்றனர்

இறந்தவர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டதால் அவரது உடலை கொண்டு சென்ற தனியார் மருத்துவமனை ஊழியர்கள் முழு உடல் கவசம் அணிந்து சென்றுள்ளனர். இதைக்கண்ட மின் மயான ஊழியர்கள் அச்சம் கொண்டனர். தங்களுக்கும் இதைப்போன்ற கவசங்கள் கொடுத்தால் தான் உடலை தகனம் செய்ய இயலும் என்று கூறியுள்ளனர்

இதையடுத்து அங்கே மின் மயான ஊழியர்களுக்கும் தனியார் மருத்துவ மனை ஊழியர்களுக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. இதைக்கண்ட அந்த வழியில் சென்ற மக்களும் இந்த வாக்குவாதத்தில் மயான ஊழியர்களுடன் சேர்ந்து கொண்டனர். மக்களின் கருத்து என்னவாக இருந்திருக்கிறதென்றால் அந்த மக்கள் கூட்டத்தில் இருந்து ஒரு அறிவார்ந்த? இளைஞரின் பேட்டி செய்தி நேரலையில் ஒளிபரப்பானது

" கொரோனா பாதித்த நபரை இங்க எரிச்சா பக்கத்துல இருக்குற 3000 மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். நல்ல வேளை போராட்டம் பண்ணி அதை நிறுத்திட்டோம். எங்க போராட்டத்துக்கு கிடைச்ச வெற்றியால உடலை இங்கு எரிக்க விடலை" என்கிறார்.

அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது. மயான ஊழியர்களின் பிரச்சனை - கவச உடைகள் .
அவை இருந்தால் நாங்களும் பாதுகாப்பாக உடலை எரிப்போம் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அங்கு போராட்டம் செய்த மக்களின் கோரிக்கை. இந்த மயானத்தில் அந்த மருத்துவரின் உடல் எரிக்கப்படக்கூடாது. அவர் ஆந்திராவை சேர்ந்தவர் தானே . அங்கே சென்று எரிக்க வேண்டும். இங்கு எரிக்கக்கூடாது என்றே போராட்டம் செய்துள்ளனர்.

இது மூலம் என்ன தெரிகிறது என்றால்

இந்த கொரோனா வைரஸ் நோய் குறித்தும் அது பரவும் முறை குறித்தும் போதிய விழிப்புணர்வு இன்னும் சென்னை வாசிகளுக்கு கூட சென்று சேரவில்லை. அல்லது முறையான அறிவை அரசு மற்றும் மருத்துவர்கள் கடத்தினாலும் அதைக் கேட்கும் தன்மை அவர்களிடம் இல்லை. கொரோனா தொற்று இறந்தவரை எரிப்பதால் வரும் புகை மூலம் பரவாது என்ற அடிப்படைக்கூட தெரியாமல் அங்கு போராட்டம் செய்த மக்கள் அனைவரும் வன்மையான கண்டனங்களுக்கு உரியவர்கள்.

கொரோனா தொற்று என்பது இன்று இல்லாவிடினும் என்றாவது பெரும்பான்மை மக்களை வந்தடையும்
அப்போது அந்த போராட்டம் செய்த மக்களின் வீடுகளில் கூட மரணம் நிகழலாம்.
அவர்களுக்கும் இதே நிலை விதியில் எழுதப்பட்டிருக்கலாம் என்பதையும் பதிவு செய்து கடக்கிறேன்.

ஒருவன் எங்கு பிறந்து எங்கு வாழ்ந்தால் என்ன? அவன் மரணமடைந்தாலும் கூட அவனுக்கான இறுதி மரியாதை மறுக்கப்படும் ஈரமில்லாத சமுதாயமாக நாம் ஏன் மாறிப்போனோம்? இறந்த மருத்துவரின் நெருங்கிய சொந்தங்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் இருக்கும் கையறு நிலையை யாரும் உணரவில்லை. சரி அவருக்கான மரியாதையை செலுத்தும் ஊழியர்களையாவது அதை செய்ய விட வேண்டும் . அதுவும் இல்லை. அடுத்து தனியார் ஊழியர்கள் அவரது உடலை அங்கு விட்டுச்சென்றது தவறு என்று கூறுவதற்கு உள்ளே என்ன விசயம் இருக்கும்.

108 ஆம்புலன்சாகவே இருந்தாலும் சரி. இறந்தவர்களின் உடலை அது ஏற்றாது. காரணம் இறந்தவர்களை பார்க்கும் நேரத்தில் அதனால் உயிருக்கு போராடும் மற்றொருவரை காப்பாற்ற ஓடிக்கொண்டிருக்கும். எனவே அந்த தனியார் ஆம்புலன்ஸ் அடுத்த சேவைக்கு கிளம்பி இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

இருப்பினும் அந்த தனியார் மருத்துவமனையின் அதிகாரிகள் அங்கு வந்து உடலை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல மாற்று ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். இதே அரசு மருத்துவமனையாக இருந்தால் இப்படி நிகழ்ந்திருக்கும் வாய்ப்பு குறைவாகவே இருந்திருக்கும்.

இறந்தவர் மருத்துவர். அவருக்கு உரிய மரியாதை என்பது இன்னொரு சக மருத்துவர் அவருக்கு வேண்டிய இறுதி மரியாதையை செய்வதே ஆகும். அது கூட இங்கு மறுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் இவ்வாறு நடந்து கொள்வது என்பதை மந்தை மனப்பான்மை என்று ஏற்கனவே கூறினேன். கொரோனா தொற்று மீது விழிப்புணர்வை வளர்த்துக்கொள்வதை விட அருவருப்பு அதிகமாக வளர்த்துக் கொள்வது நல்லதன்று.
நாளை போராட்டம் உங்கள் குடும்பத்தில் இதீ போன்று கொரோனா பாதித்த ஒருவர் மாண்டு போனாலும் உங்களுக்கும் இதே நிலை தான் ஏற்படும் சகோதர சகோதரிகளே ..

உங்களை நீங்களே அதற்குள் கேள்வி கேட்டுக்கொண்டு மீண்டு வாருங்கள். அறிவின் பாதைக்கு வாருங்கள்

அந்த மருத்துவர் எந்த நாடு ? எந்த ஊர்?
எந்த மாநிலம் ? எங்கு இருந்தால் தான் என்ன?

அவர் மரணமடைந்தது நமது மாநிலத்தில்
அவருக்கான இறுதி மரியாதை இங்கு கிடைப்பதில் என்ன பிரச்சனை?

தயவு செய்து திருந்துங்கள்

உங்களுக்காக உழைக்கும்
மருத்துவத்துறை ஊழியர்களின் நம்பிக்கையை குலைக்காதீர்கள்

இன்று அந்த மருத்துவருக்கும் அவரது குடும்பத்திற்கும் நேர்ந்த கையறு நிலை நாளை உங்கள் குடும்பத்திற்கும் உங்களுக்கும் நேரக்கூடும்

இது சாபம் அன்று
ஆற்றாமை..
கையறு நிலை...

மக்களே...
உங்களுக்கான தேதி வரும் முன்
வருந்துங்கள்
திருந்துங்கள்

முடியாவிட்டால்
கொரோனா உங்களுக்கான பாடத்தை நிச்சயம் புகட்டும்.

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்

- Dr. ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர், சிவகங்கை.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா பெருந்தொற்று ஒரளவுக்கு குறைந்திருக்கும் நிலையில் திரையரங்குகள் தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

இலேசாக வீசிய காற்றில் இலைகள் சலசலத்தன. கூடு திரும்பிய பறவைகளின் குரல்கள் மலரத் தொடங்கிய மாலையை அறிவிக்க, அவற்றின் நடுவே இராசத்தின் குரல் எனக்குக் கேட்டது.

"வேம்பி..!"

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.