நீங்களோ நானோ கூட ‘ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் அமெரிக்கர்கள் கையேந்தி சாலையில் நிற்பார்கள்’ என்று சில மாதங்களுக்கு முன்பு யாரேனும் சொல்லியிருந்தால் நம்மியிருக்க மாட்டோம். ஆனால், இன்றைய நிஜம் இதுதான். அமெரிக்காவில் கொரோனா வைரஸால் வேலையிழந்தோர், வீடற்றோர் என லட்சக்கணக்கானோர் உணவுக்கு வழியின்றி தவிக்கின்றனர்.
இவர்களுக்காக பல்வேறு தொண்டு நிறுவனங்களும் இலவச உணவு விநியோகம் செய்கின்றன. இவற்றை வாங்குவதற்காக மக்கள் பல கி.மீ. தூரத்துக்கு வரிசையில் நிற்கிறார்கள்.
பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா, நியூயார்க், கலிஃபோர்னியா, ஃப்ளோரிடா என பெரும்பான்மையான மாகாணங்களில்.. இலவச உணவுக்காக மக்கள் மணிக்கணக்காக காத்துக்கிடக்கின்றனர். இந்திய நிலைமைக்கும் அவர்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு, இங்கே நம் மக்கள் நெருக்கி அடித்துக்கொண்டு கூட்டமாக நிற்கிறார்கள். அங்கு கார்களில் நிற்கிறார்கள். நியூயார்க் போன்ற நகரங்களில் இத்தகைய கார்களையும் காண முடியவில்லை. உணவு வங்கிகளின் முன்பு பெரும் மனிதர் கூட்டம் வரிசையில் நிற்கிறது. வாங்கிய வேகத்தில் பசி பொறுக்க முடியமால் அங்கேயே சாப்பிடுகின்றனர்.
அமெரிக்கா பற்றி நமக்கு இருக்கும் மனச் சித்திரம் வேறு. ஆனால், ஒரு சின்னஞ்சிறு வைரஸ் அமெரிக்காவை பிய்த்து சிதைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் கொரோனாவின் உச்சத்தை இன்னும் அமெரிக்கா தொடவில்லை. இப்போதே இந்த நிலைமை என்றால், உச்சத்துக்குப் போகும்போது என்னவாகும்? இத்தகைய இக்கட்டான நிலைமைகளில் மக்களின் உணவை கூட உத்தரவாதப்படுத்த இயலாத நிலையில்தான் இருக்கிறது அமெரிக்க வல்லரசு.
குறைந்தபட்சம் ஒவ்வொரு மாகாணத்திலும் 10 ஆயிரம் பேர் இத்தகைய உணவு வங்கிகளில் நிற்பதாக செய்திகள் சொல்கின்றன. “நாங்கள் வாரம் 60 ஆயிரம் பேருக்கு உணவு வழங்குகிறோம். ஆனால், எங்களின் சேவை பகுதியில் மட்டும் 12 லட்சம் பேருக்கு உணவு தேவைப்படுகிறது.” என்கிறார் எரிக் கூப்பர். இவர் The San Antonio Food Bank என்ற தன்னார்வ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி.
கடந்த ஏப்ரல் 9-ம் தேதி டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள San Antonio என்ற இடத்தில் இலவச உணவு பொருட்களை பெறுவதற்காக சுமார் 6 ஆயிரம் கார்கள் ஏழு கிலோமீட்டர் நீளத்துக்கு வரிசையில் நின்றன. சில குடும்பங்கள் 12 மணி நேரம் முன்னதாகவே வந்து வரிசையில் காத்திருந்தனர். ஏப்ரல் 10-ம் தேதி கலிஃபோர்னியாவில் உணவுப் பொருட்களை பெறுவதற்கு 5 ஆயிரம் கார்கள் வரிசையில் நின்றன.
இவ்வாறு உணவு வாங்க வரிசையில் நிற்கும் இவர்கள் அனைவரும் ஏழைகள் என்று சொல்ல முடியாது. பெரும்பான்மையானோர் பணிபுரியும் பிரிவை சேர்ந்தவர்கள். இப்படி ஒரு நிலை தங்களுக்கு ஏற்படும் என்பதை கனவிலும் நினைத்துப் பார்த்திராதவர்கள். “வரிசையில் நிற்பவர்களில் சுகாதாரத் துறை ஊழியர்கள் முதல் வூபர் ஓட்டுனர் வரை பலரும் இருக்கின்றனர். பெரும்பாலும் வேலையிழந்தவர்கள்” என்கிறார் எரிக் கூப்பர்.
ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தன்னார்வ குழு உணவு விநியோகம் செய்கிறது. பெரும்பாலும் வாரம் ஒருமுறைதான் உணவு விநியோகம். அந்த தகவலை அறிந்துகொண்டு அங்கு மக்கள் கூட்டம் குவிகிறது. ஆனால், உணவு போதவில்லை. பல மணி நேரம் வரிசையில் நின்றவர்கள் உணவு கிடைக்காமல் ஏமாந்து திரும்புகின்றனர். உலகின் வல்லரசில் உணவுக்காகக் கையேந்தும் குடிமக்களை நாம் காண்கிறோம். இதுதான் காலத்தின் கோலம்