சமூக ஊடகம்

ஒரு முறை பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது பெண்களுக்குப் பக்கத்தில் அமர்வதற்கு வாய்ப்பு தேடி இடம் கிடைக்காமல், என்னருகில் வந்து அமர்ந்தார் ஒரு அம்மா. அவராகவே என்னிடம் பேச்சு கொடுத்தார். நான் என்ன வேலை செய்கிறேன் என்று கேட்டார். இப்படி சென்று கொண்டிருந்த பேச்சு, அவருடைய வேலை குறித்து திரும்பியது.

நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று கேட்டேன். நான் ஒப்பாரி பாட்டு பாடுவேன் என்றார். இறந்தவர்கள் வீடுகளுக்கு அழைப்பார்கள், இப்போதெல்லாம் அதையும் ரெக்கார்டு பண்ணிட்டாங்க. ஒரு இடத்தில் ரெக்கார்டு பண்ணிட்டு அதை ஊரெல்லாம் போடுறாங்க. அதனால, அதுவும் இப்போது கிடைப்பதில்லை என்று சொன்னார்.

திருமணமான தனது மகன் இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு இறந்து போனதைப் பற்றியும், குடி அவன் உயிரைக் குடித்தது பற்றியும் பேசிக் கொண்டே இருந்தார். அப்படி ஒரு கேள்வியை நான் கேட்டிருக்கக் கூடாது. ஆனாலும் நான் கேட்டேன். உங்கள் மகன் இறந்த அன்று எப்படி இதர வீடுகளில் துக்க நிகழ்ச்சிகளில் அழுவீர்களோ, அப்படித்தான் அழுதீர்களா என்று கேட்டேன். கேட்டு முடித்த பிறகு, இந்தக் கேள்வியை கேட்டிருக்கவே கூடாது என்று உணர்ந்தேன். அதுவரை, கலகலப்பாக பேசிக் கொண்டிருந்த அந்தத் தாய் அமைதியாகிவிட்டார். அது தொழில் பா, இட்டுக்கட்டியெல்லாம் பாடலாம். இவன் புள்ளல, அவன் என்னோட ரத்தம்ல, என்ன வார்த்தை சொல்லி அழ முடியும். மனசுக்குள்ளேயே உருகி உருகி தேத்திக்கிட்டேன் என்றார். அதன் பிறகு, நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை.

இதற்கு சற்றும் குறையாத சோகம், இன்று பத்திரிக்கைத் துறையில் பணிபுரியும் பலரையும் கவ்வியிருக்கிறது. நோக்கியா ஆலை மூடப்பட்டபோது, அந்த ஆலைத் தொழிலாளர்களின் துயரங்கள் சில பேரால் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஒரு தனிநபரின் துயரத்தை விரிவாக எடுத்து எழுதி, ஒட்டுமொத்த தொழிலாளிகளின் மொத்த துயரத்தையும் உணர வைத்ததில் அச்சு ஊடகங்களுக்கும் காட்சி ஊடகங்களுக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு.

வேலை நீக்கம், ஆட்குறைப்பு, அதனால் ஏற்படும் பாதிப்புகள். அது குடும்பத்தில் ஏற்படுத்தும் தாக்கம் என ஊடக ஊழியர்கள் விலாவாரியாக பதிவு செய்வார்கள். ஆனால், இந்தக் காலத்தில் ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு, கட்டாய சம்பளமில்லா விடுப்பு என்று அவர்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஆனால், இதைப் பற்றி யாரும் எதுவும் பேசுவதில்லை. பல நிறுவனங்களும் இதைப் பற்றி ஊழியர்களிடம் முன்கூட்டியே பேசியது கூட இல்லை. சில பேர், ஒரு பகுதி சம்பளத்தை மட்டும் கொடுத்துவிட்டு, அதைப் பற்றி எதுவும் சொல்லாமல் இருக்கிறார்கள். குழுவில் பகிர்வது, சுற்றறிக்கையின் மூலம் அறிவிப்பது, தனித்தனி நபர்களாக பேசுவதற்கு பதிலாக மொத்தமாக கூட்டிவைத்து அறிவித்துவிட்டுச் செல்வது என்று பல வகைகளில் இது நடந்திருக்கிறது.
சாதாரண காலங்களில் தங்கள் நிறுவனத்தின் நடைமுறைகள் பற்றி பேசுபவர்கள் கூட இந்தக் காலத்தில் இதுகுறித்து நாம் விசாரித்துவிடுவோமோ, அது அருகில் உள்ளவரின் காதில் விழுந்துவிடுமோ என்று பதட்டத்தில் பேசி, இந்தக் கேள்வியை எதிர்கொள்ளாமல் அந்த உரையாடலை முடித்துவிட வேண்டும் என்ற வேகத்தோடு ஓடுகிறார்கள். கடந்த காலத்தில் நெருக்கமாக பேசிய அனைவரும், மிகத் தூரமாக விலகுகிறார்கள்.

1000 கோடி ரூபாய் ஆண்டில் லாபம் சம்பாதிக்கும் டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்திலிருந்து சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிக்கை அல்லது தொலைக்காட்சி வரை அத்தனையிலும் மேற்சொன்ன சம்பள வெட்டு, ஆட்குறைப்பு நடந்திருக்கிறது.

ஒரு நிறுவனத்தின் ஊழியர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, தனது நிறுவனத்தில் 30% வரை சம்பள வெட்டு நடந்திருப்பதாகவும், ஆனால், ஊழியர்களில் ஒரு பகுதியினர் நல்லவேளை வேலையிலிருந்து யாரையும் நிறுத்தவில்லை என்று திருப்திபட்டுக் கொண்டதாகவும் கூறினார்.

இன்னொரு நிறுவனத்தில் பணிபுரிபவர் அவருக்கு எவ்வளவு சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது என்று கேட்டபோது, எல்லோரிடமும் கேட்டுச் சொல்கிறேன் ஒருவேளை குறைக்கப்பட்ட சம்பளத் தொகையும் சம்பள விகிதமும் தனக்கு மட்டும் பிரத்யேகமானதாக இருந்தால் கண்டுபிடித்துவிடுவார்கள் என்ற அச்சத்தோடு அவர் அதைச் சொன்னார்.
இத்தனை ஊடக நிறுவனங்கள், ஏராளமான இளைஞர்கள் மிகப்பெரிய கனவுகளோடு இந்தப் பணிக்கு வந்திருக்கிறார்கள். இந்தக் காலத்தில் இதர துறைகளிலும் ஏராளமான நிறுவனங்களில் இதேபோன்று சம்பள வெட்டு, சம்பள மறுப்பு, வேலையை விட்டு தூக்குவது போன்ற அனைத்தும் நடந்திருக்கின்றன. ஆனால், ஊடகங்கள் இவற்றை எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை. அது இயல்பானதுதான். எந்தவொரு நிறுவனமும் தன்னுடைய ஊழியர்களுக்கு சம்பளத்தைக் குறைத்துவிட்டு இன்னொரு துறையில் இருக்கும் ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட்டுவிட்டது, மறுக்கப்பட்டுவிட்டது என்று பேசத் துணியாது. அப்படிப் பேசினால் அது தனது ஊழியர்களின் உணர்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியும்.

இது மிகக் கடுமையான சூழல். துயரங்கள் பெருகி வரும் வேளை, அதேபோல துயரத்திற்கு ஆளான ஒருவர் தன் துயரத்தையும் சொல்லி அழ முடியாமல், இதரர் துயரத்தையும் உரத்துச் சொல்ல முடியாத துயரத்தில் சிக்கியிருக்கிறார்கள்.

சில நிறுவனங்கள் உண்மையிலேயே கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கக் கூடும். அவர்களின் விளம்பர வருவாய் மிகப் பெரிய அளவிற்கு குறைந்திருக்கிறது என்பது உண்மை. இதர தொழில்களைப் போலவே இந்த ஊடக நிறுவனங்கள் எந்த பணமதிப்பிழப்பையும் ஜிஎஸ்டியையும் கொண்டாடினார்களோ அதனால் பாதிக்கப்பட்ருக்கிறார்கள். ஆனால், இப்போது ஏற்பட்டிருக்கிற பாதிப்பு கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு. இதுவெல்லாம் தற்காலிகமாக கடந்த 2 மாதத்தில் அதிரித்திருக்கும் ஒரு விசயம்தான். இன்னும் ஓரிரு மாதங்கள் கழித்து நிலைமை மேம்படலாம் அல்லது சில வருடங்கள் கூட பிடிக்கலாம். ஆனால், 100 ஆண்டுகள், 50 ஆண்டுகள், 25 ஆண்டுகள், 10 ஆண்டுகள் என தொடர்ச்சியாக லாபம் ஈட்டிய நிறுவனங்கள், ஒரு நெருக்கடியான காலகட்டத்தில், நெருக்கடியின் ஆரம்பத்திலேயே தொழிலாளர்களின் மேல் மட்டும் நெருக்கடி முழுவதையும் சுமத்துவது எந்த வகையிலும் பொருத்தப்பாடு உடையதா?

பல நிறுவனங்களிலும் உயர் பொறுப்புகளில் இருப்பவர்களுடைய சம்பவளம் ஓரளவு வசதியான வாழ்க்கையை வாழ்வதற்குப் போதுமானது. ஆனால், பெரும்பாலான தொழிலாளர்களுக்கு அந்த வாய்ப்புகள் எல்லாம் கிடையாது. வாய்க்கும் வயித்துக்கும் எட்டாத அளவிற்கு சம்பளம் வாங்குவோரின் எண்ணிக்கை மிகக் கணிசமானது. அவர்களுக்கு எல்லாம் இந்த சம்பள வெட்டு மிகக்கடுமையான பாதிப்புகளை உருவாக்கும்.

இதர இடங்களில் கூட ஓரளவிற்கேனும் இதுபோன்ற ஊழியர்களுக்கு சங்கங்கள் இருக்கின்றன. அவை எத்தனை பலவீனமானதாக இருந்தாலும் இதுகுறித்து ஏதோ ஒரு வகையில் பேச முயற்சிக்கின்றனர். ஆனால், ஊடக ஊழியர்களுக்கு உள்ள சங்கங்கள் இவற்றையெல்லாம் பேசுவதற்கும், அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்வதற்கும் பலம் படைத்தவையாக இருக்கின்றனவா என்ன கேள்வியும் எழுகிறது.

பொதுவாக, ஊடகங்கள் வர்க்கம் சார்ந்த பிரச்சினைகளில் எப்படி நடுநிலையற்று நடந்து கொள்கிறார்கள் என்பது பற்றியெல்லாம் பல பேரிடம் விவாதிக்கும் போது, அப்படியெல்லாம் இல்லை என்று கடந்து போவார்கள். ஆனால், தங்களுடைய துயரத்தை சில நிறுவனங்களின் பிரச்சினை அல்லது நிறுவனங்களில் பணிபுரிவோரின் பிரச்சனை என்கிற தொனியில் கூட பொதுவாக முன்வைப்பதற்கு வாய்ப்பு இல்லாத சூழல் ஏற்பட்டிருப்பதை அவர்கள் இப்போதேனும் புரிந்து கொண்டிருக்கக் கூடும்.

எந்தவொரு ஊகடமும் நடுநிலையான ஊடகமாக இருக்க முடியாது. நடுநிலை என்பது பம்மாத்து. அது நபர் சார்ந்ததல்ல, சமூகம் சார்ந்தது, அரசியல் சார்ந்தது, பொருளாதாரம் சார்ந்தது. இந்த பம்மாத்தைக் காட்டிக் கொண்டு தோற்றத்தில் நடுநிலையாகவும் உள்ளார்ந்து ஊடக முதலாளிகளின் நலன் சார்ந்ததாகவும் அல்லது ஆளும் வர்க்கத்தின் நலன் சார்ந்துமேதான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இயங்க முடியும், இல்லையேல் அடித்து ஒடித்து வைத்துவிடுவார்கள்.

ஏதாவது ஒரு அநியாயம் அல்லது பாதிப்புகள் நடந்தால் ஊடக வெளிச்சத்திற்கு கொண்டுபோக வேண்டுமென்று நினைப்பது இயல்பாக இருக்கிறது. ஆனால், ஊடகங்களில் பணிபுரிவோரின் பிரச்சினைகளைப் பற்றி ஊடகத்திற்கு அப்பால்தான் பேச வேண்டியதிருக்கிறது. எத்தனை வலுக் குறைந்ததாக இருந்தாலும் இதை ஊடக ஊழியர்களின் நலனிருந்து உரத்துச் சொல்ல வேண்டிய அவசியமிருக்கிறது.
இதன் பொருட்டு, அப்படி குரல் எழுப்புவோரின் குரலும் கூட இத்தகைய ஊடகங்களில் மறைக்கப்படுவதும் நிகழ்கால அனுபவமாக இருக்கிறது.

ஆனால், இந்த உண்மையை வலுவாகவும் விரிவாகவும் பேச வேண்டியதிருக்கிறது. ஏனெனில், எந்த உறவும் இல்லாத யார் யாருடைய துயரங்களுக்காகவோ ஒரு பணியாக அழுது கொண்டிருந்த தாய், தன்னுடைய மகனின் மரணத்திற்கு தனக்குள்ளே குமுறிக் கொண்டது போலவே ஊடகத் தொழிலாளர்களும் இருக்கிறார்கள்.

கே.கனகராஜ்
மாநிலச் செயற்குழு உறுப்பினர், CPIM

கோரோனா  வைரஸ் பாதிப்பினால், உலகளாவிய ரீதியில் ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நெருக்கடி ஒன்றினைப் பேசுகின்றது இந்த அறிக்கை. இவாறான பாதிப்புக்களுக்கு உள்ளாகும் தமிழ் ஊடகவியலாளர்கள் குறித்து நாமும் அக்கறை கொள்கின்றோம். பாதிப்புறும் ஊடகத்துறை நண்பர்களின் விபரங்களைப் பெறவும், அவர்களில்  ஒரு சிலருக்காயினும் உதவிடவும் முயற்சிப்பது குறித்தும் ஆராய்கின்றோம். இதனைப் பார்வையிடும் ஊடகத்துறை சார்ந்த நண்பர்கள், நீங்கள் விரும்பும் பட்சத்தில் உங்களைக் குறித்த உண்மையான விபரங்களை  அனுப்பி வைத்தால், முடிந்ததைச் செய்ய முயற்சிப்போம். உங்கள் தரவுகள் அனுப்ப வேண்டிய முகவரி : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.தரவுகளின் தனித்துவமும், ரகசியம், நிச்சயம் பேணப்படும். - 4Tamilmedia Team

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் எதிர்பாராமல் நிகழ்ந்த கோர விபத்தால் உதவி இயக்குநர் உட்பட பலர் உயிரிழந்தனர். இதனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2003 ஆமாண்டு விண்ணுக்கு பூமியின் தாழ்வு ஒழுக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்று திரும்புகையில் எந்திரக் கோளாறால் கொலம்பியா என்ற விண் ஓடம் விபத்தில் சிக்கியது.

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.