சமூக ஊடகம்

கொலம்பியா வரலாற்றில் இயற்கையால் நேர்ந்த அந்த விபத்து பெரும் கரும்புள்ளியானது. கொலம்பியாவில் நீண்டகாலமாக உருமிக்கொண்டிருந்தது நெவேதோ டெல் ரூயிஸ் ( Nevado del Ruiz volcano ) எரிமலை.

அது 1985ஆம் ஆண்டு, செப்டம்பர் 11-ம் தேதி வெடித்தது. அந்த விபத்தில் இருபத்து மூன்றாயிரம் மக்கள் இறந்தனர். பதிமூன்று கிராமங்கள் அழிந்து போயின. எரிமலையின் மெல்லிய உறுமல்கள் கொப்பளித்த போதே அது உண்டாக்கக் கூடிய கோரமான விளைவுகளை வல்லுநர்கள் எச்சரித்திருந்த போதிலும் அதனை கொலம்பிய அரசாங்கம் அலட்சியப்படுத்தி இருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தாமல் சுணக்கம் காட்டியது. உதாசீனப்படுத்தியது.

பல்லாயிரம் வீடுகள் இடிந்து நொறுங்கின. சுடுநெருப்புச் சாம்பல் மழையாகக் கொட்டியது. எரிமலை வெடிப்பு தொடர்பான ஆவணப்படங்களைப் பார்த்தவர்களுக்குத் தெரியும். அதன் தொலைதூர முணுமுணுப்பே சிங்கத்தின் கர்ஜனை போலிருக்கும். அது நெருங்க நெருங்க மரணத்தின் அதிர்வுகள் பெருமுழக்கங்கள் இடும். நெஞ்சத்தில் ராஜநாகத்தின் சீறல் இடைவிடாது ஒலிக்கும். அது நெருப்புக் குழம்பின் கூதிர்ப்பாசறையே தான்.

அந்தப் பேரிடரில் ஒமைரா சான்ஷெஸ் என்கிற பதிமூன்று வயது சிறுமியும் சிக்கிக்கொள்கிறாள். வீடு இடிந்து அவளது கால்கள் அதில் சிக்குண்டு இருக்கின்றன. அதனுடன் களிமண் சேறும் சேர்ந்து இறுகி அவளது இடுப்பு வரை நிலத்தில் புதைந்துள்ளது. அவளது கால்களை இறுக்கிப் பிடித்தபடியே நிலத்துள் புதையுண்டு இறந்துவிட்ட அத்தையின் கைகளை அவளால் உணர முடிகிறது. சேற்றில் அமிழ்ந்த சிறுமலர்!

எத்தனையோ ஆயிரம் உடல்களுக்கு நடுவே ஃப்ரான்க் ஃபோர்னியர் என்கிற ஃப்ரெஞ்சு புகைப்படக்காரர் அவளைக் காண்கிறார். தனது பணியைப் புறந்தள்ளிவிட்டு அவள் காப்பாற்றப்படும் வரை அவளுடனேயே இருக்க முடிவெடுக்கிறார். பிழைப்போமா மாட்டோமா என்கிற நிச்சயமற்ற சூழ்நிலையிலும் ஒமைரா அழுது அரற்றவில்லை. தன்னைக் காப்பாற்றுமாறு மன்றாடவில்லை. அவளது அமைதியும் உறுதியும் ஃபோர்னியரை அசைத்து விடுகிறது. அந்தச் சிறுமியின் முன்பு, தான் எத்தனை பலவீனமானவன் என்பதை உணர்கிறார். அவளை எப்பேர்ப்பட்டாவது காப்பாற்ற உறுதியெடுக்கிறார்.

கொலம்பிய அரசாங்கத்தின் மெத்தனம் காரணமாக இராணுவமும் பேரிடர் மேலாண்மைக் குழுவும் வந்துசேர ஒன்றரை நாட்கள் ஆகின்றன. ‘மூன்றாம் உலக நாடான எங்களிடம் இதை எதிர்கொள்வதற்கான போதிய வசதிகள் இல்லை’ என அமைச்சர் அறிக்கை விடுகிறார்.

இடிபாடுகளை உடைத்து நொறுக்கினால் மட்டுமே ஒமைராவை மீட்க முடியும் என்கிற நிலை. சேற்றின் தண்ணீர் அளவு கூடிக்கொண்டே இருப்பதால் அவளுக்கு குளிரடிக்கிறது. இரத்தவோட்டம் தடைபட்டதால் அவளது தோலின் நிறம் வெளுக்கிறது. காய்ச்சல் அடிக்கத் தொடங்குகிறது. செஞ்சிலுவை சங்கத்து ஆட்களிடம் நீரை வெளியேற்றுவதற்கான பம்ப்பும் செங்கற்களைப் பெயர்ப்பதற்கான இயந்திரமும் இல்லை. இப்போது அவளது உயிரைக் காப்பாற்ற வேண்டுமெனில் அவள் கால்களை துண்டித்தால் மட்டுமே அது சாத்தியம். முறையான மருத்துவ உபகாரணங்களின்றி அப்படிச் செய்வதற்கு மருத்துவர்கள் அஞ்சுகிறார்கள். அவளை மேலும் துன்புறுத்தி கூடுதல் வலியை உண்டாக்குவதற்கு பதிலாக அவளைச் சாக விடுவதே மேல் எனக் கைவிரித்து விடுகிறார்கள்.

எந்த முயற்சியும் பலனளிக்காததால் ஃபோர்னியர் சோர்ந்து போகிறார். அதைக் காணும் ஒமைரா அவனை ஓய்வெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறாள். அவனுக்காக பாடுகிறாள். கதை சொல்கிறாள். ‘சாப்பிடுவதற்கு எதாவது இனிப்புப் பண்டம் கிடைக்குமா?’ எனக் கேட்கிறாள். ஃபோர்னியர் மனமுடைந்து கதறி அழுகிறார். அவனுக்காக அவள் பிரார்த்திக்கிறாள். ‘உங்களது முயற்சிகளுக்கு நன்றி’ எனப் புன்னகைக்கிறாள்.

நேரமாக ஆக, அவளது முகமும் கண்களும் வீங்கிப் பெருத்து விடுகின்றன. கண் இரப்பைகள் சிவந்து கன்றிப்போகின்றன. அறுபது மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு அவள் இறக்கிறாள். உலகமே கைவிட்ட பிறகும் கூட யார்மீதும் அவளுக்குப் புகாரில்லை. துளி வருத்தமில்லை. எவ்வளவு பரிசுத்தமான உயிர்!

ஃபோர்னியரால் எடுக்கப்பட்ட ஒமைராவின் புகைப்படம் உலகெங்கும் பெரும் பாதிப்பைச் செலுத்துகிறது. கொலம்பிய அரசாங்கத்திற்கு கண்டனங்கள் வலுக்கின்றன. பல்வேறு கலைஞர்களும் தங்களது படைப்புகளில் ஒமைராவுக்கு மரியாதை செய்திருக்கிறார்கள். நிறைய ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இலத்தீன் அமெரிக்க எழுத்தாளரான இஸபெல் அயாந்தே, ‘And of clay we are created’ என்கிற தலைப்பில் இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து சிறுகதை எழுதியிருக்கிறார். அதை லதா அருணாச்சலம் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

மரணத் தறுவாயில் இருக்கும்போது, ‘எனக்குப் பதிமூன்று வயதுதான் ஆகிறது. என்னை இதுவரை யாருமே காதலிக்கவில்லை’ என்கிறாள் ஒமைரா. ஓ! இந்த உலகமே உன்னை நேசித்ததம்மா!

- கோகுல். பி.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பாரதிராஜா நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கியதால் கடுப்பான தயாரிப்பாளர் கவுண்ஸிலைச் சேர்ந்த பலரது எதிர்பார்ப்பு சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சி உடைய வேண்டும் என்பது. அதை எடுத்துக்காட்டுவதுபோல ஒரு தயாரிப்பாளின் பதிவு அமைந்துள்ளது. அவர் தனது பதிவில்:

லொகார்னோ திரைப்பட விழாவில் குறுந்திரைப்படங்களுக்கான போட்டியில், சர்வதேச போட்டிப் பிரிவில் போட்டியிடும் திரைப்படம் "1978" இல் பாகிஸ்தான்.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

நாம் தனிமையில் இல்லை...' (We are Not Alone!)  4 தமிழ்மீடியாவின் புதிய அறிவியல் தொடர். எமது பிரபஞ்சம் மிகவும் ரம்மியமானது.

கோலிவுட் டோலிவுட் மல்லூவுட் சாண்டல்வுட் என தென்னிந்திய திரையுலகில் முக்கிய நாயகியாக வலம்வந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ்.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.