சமூக ஊடகம்

சுவிற்சர்லாந்தின் திசினோவிலிருந்து கிறபுண்டனுக்கு A13 நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது, றோத்தேர்ன் புரூனென் ( Rothenbrunnen ) எனுமிடத்தில் மலைக் குன்றில் மேல் தெரியும் இடிந்துபோன அந்த ஒற்றைச் சுவர் எம் கவனத்தையீர்க்கும்.

ஒரு காலத்தில் இந்த மலைப்பிரதேசத்தை ஆட்சி செய்த குறுநில மன்னர் அல்லது ஜமீன்களின் கோட்டையொன்றின் எஞ்சிய பகுதி அது என்பது பார்க்கும்போதே தெரிந்து விடும். அறியும் ஆவலில் தேடியபோது, அது ஹோச்ஜுவால்ட் (Hochjuvalt) அல்லது நைடர்ஜுவால்ட் அல்லது ஆஸர்-ஜுவால்ட் (Niderjuvalt[1] or Ausser-Juvalt[) கோட்டையின் எஞ்சிய பகுதி என்பது தெரிய வந்தது. இந்தக் கோட்டைக்கான குறிப்புக்கள் 1140ம் ஆண்டிலிருந்து பதிவாகியுள்ளன.

12ம் நூற்றாண்டைச் சார்ந்த இந்தப் பழமை வாய்ந்த கோட்டையின் எச்சத்தை, சுவிற்சர்லாந்தில் உள்ள கிராபுண்டன் மாநிலத்தின் ரோத்தேர்ன்ப்ரூனென் நகராட்சி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சுவிஸ் பாரம்பரிய தளமாகப் பிரகடனம் செய்துள்ளது. 2011-12 ஆம் ஆண்டில் கோட்டையின் எச்சங்கள் வலுவூட்டப்பட்டு பழுதுபார்க்கப்பட்டு மேல் கோட்டைக்கு ஒரு புதிய பாதை சேர்க்கப்பட்டு பராமரிப்பதுடன் மேலதிக தகவல்களையும் பதிவு செய்துள்ளது. அதன்வழியில் இந்தக் கோட்டையின் வரலாறு குறித்த தகவல்களை, ஆர்வமுடைய எவரும் இலகுவில் அறிந்து கொள்ளும் வண்ணம் இப்போது இணையத்தில் நிறைவாகக் காண முடியும்.

நமது பாரம்பரிய நிலமான இலங்கையின் வடபுலத்தில் காணப்படும் இவ்வாறான வரலாற்றுச் சின்னங்களைப் பற்றிய குறிப்புக்களைத் தொகுத்தரும் ஒரு சமூகவலைத்தளத்தின் இணைப்பினை நமது பார்வைக்கு அனுப்பி வைத்திருந்தார் நம் நண்பரொருவர். அதிலே காணப்பட்ட குறிப்புக்கள் பலவும் கவனத்தையீர்ந்தன. அதில் ஒன்று "ஆவுரஞ்சிக்கல்".

(படத்தில் : உடுப்பிட்டி வீரபத்திரர் கோவிலடி ஆவுரஞ்சிக் கல் )

"ஆவுரஞ்சிக்கல்" அறிந்திருக்கின்றீர்களா ? "சுமைதாங்கிக் கல்" என்பது அறிந்திருங்கக் கூடிய நம்மவர்களில் பலரும் கூட அறிந்திராதது "ஆவுரஞ்சிக்கல்". "ஆ" என்றால் பசு . " ஆ " உரஞ்சுவதற்கான கல் "ஆவுரஞ்சிக் கல்" .பசுக்களும் காளைகளும், நீரருந்தியபின், தமது உடலின் அசௌகரியத்தினைப் போக்குவதற்கென நம் முன்னோரால் மேற்கொள்ளப்பட்ட அமைப்பு. ஆவுரஞ்சிக் கல் இருக்கும் இடத்தில் இயற்கையான நீர்நிலையோ அன்றி உருவாக்கப்பட்ட நீர்த்தொட்டி ஒன்று உருவாக்கப்பட்டோ இருக்கும். வாயில்லா ஜீவன்களின் நன்மை கருதி இவற்றை மேற்கொண்ட எம்முன்னோர்களின் குணம் மெய்சிலிர்க்க வைக்கின்றது என வியந்து போகின்றார்கள் "வடமராட்சி வரலாற்று மீட்புக்குழு" வைச் சேர்ந்த இளைஞர்கள்.

பருத்தித்துறை சிவன் கோவில் உள்ளிட்ட சில இடங்களில் இருந்த ஆவுரஞ்சிக்கற்களை தற்போது காணவில்லை எனக் கவலையுறும் அவர்கள் தாம் கண்டுகொண்ட சில " ஆவரஞ்சிக் கல் " களைப் படங்களுடனும், குறிப்புக்களுடனும் பகிர்ந்துள்ளார்கள்.

ஒல்லாந்தகால எழுத்துருக்களுடன் காணப்படுகின்ற கல்வெட்டு/ஆவுரஞ்சிக்கல். உடுப்பிட்டி வீரபத்திரர் கோவிலடியில் காணப்படுகின்றது. கரும்பவாளி கேணிகளுடன் தொடர்புபட்ட "வீராத்தை" யின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

யார்க்கரு பிள்ளையார் கோவிலடி. கல்வெட்டில் " சிற்றம்பலம் வாத்தியாரின் ஞாபகார்த்தம் 8.4.90" என குறிப்பிடப்பட்டுள்ளது. 1890 /1990 எக்காலத்திற்குரியது எனத் தெரியவில்லை. எவரிற்கேனும் தெரிந்தால் அறியத்தாருங்கள். சிற்றம்பலம் வாத்தியாரைப் பற்றியும் அறியத்தாருங்கள் எனவும் கோருகின்றார்கள். அவர்களின் குறிப்புக்களில் கவனமும் கவலையும் தருவதாக உள்ள குறிப்பு " கப்பலோடிய தமிழர்கள்" குறித்ததானது.

முன்னொரு காலத்தில் கப்பல் கட்டுமாணங்கள்,கடற்பிரயாணங்கள் போன்றவற்றில் துறைபோனவர்களாக இருந்துள்ளனர்வடமாராச்சித் தமிழர்கள். அவ்வகையில் , தொண்டைமானாற்றை சேர்ந்த வீரகத்திப்பிள்ளை முக்கியமானவர். இவர் "சுப்பிரமணிய புரவி" என்ற கப்பலின் உரிமையாளராவார். இக்கப்பல் அமெரிக்கா, ரங்கூன், காக்கிநாடா, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு துறைமுகங்களிற்கு சென்று வந்துள்ளது. இவ் "சுப்பிரமணிய புரவி" கப்பலின் பாரிய நங்கூரமானது இன்றளவும் யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில் வாயிலிற்கு அண்மையில் காணப்படுகிறது . அவரின் குடும்பத்தினரினால் 1906ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வடமாராச்சியின் மக்களுக்கு "கப்பலோட்டிய தமிழர்கள்" எனும் கௌரவத்தினை பெற்றுக் கொடுத்த "அன்னபூரணியம்மாள் " (Florence C Robinson) கப்பலின் நங்கூரம் கவனிப்பாரற்றுக் கடற்கரையில் கிடக்கிறது எனக் கவலை தெரிவித்துள்ளார்கள்.

"அன்னபூரணியம்மாள் " வடமராட்சி வல்வெட்டித்துறையை சேர்ந்த சுந்தர மேசுத்திரியாரின் மேற்பார்வையின் கீழ்க் கட்டப்பட்ட பாய்மரக்கப்பலாகும். தமிழ்நாட்டின் நாகப்பச் செட்டியாரிற்காகவே இது கட்டப்பட்டது. 1929/1930 களில் இது கட்டப்பட்டது. பின்னாளில் 1936 ல் இதனை அமெரிக்காவினை சேர்ந்த William Robinson 20,000 ரூபாவிற்கு கொள்வனவு செய்தார்.பின் தமிழ்நாட்டிலிருந்து இதன் தண்டையல் தம்பிப்பிள்ளையால் கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டு அங்கு இதன் பெயர் Florence C Robinson என மாற்றப்பட்டுள்ளது.

இக்கப்பல் வேம்பு, இலுப்பை மரங்களால் கட்டப்பட்டு 90 அடி நீளமும் 19 அடி அகலமும் கொண்டதாக காணப்பட்டது. இதனை வாங்கிய Robinson னிடம் இதனை கையளிக்கவேண்டிய பொறுப்பினை வல்வெட்டித்துறையை சேர்ந்த 6 கடலோடிகள் ஏற்றுக்கொண்டனர்.இவர்களுடன் முழு பயணத்திலும் வெளிநாட்டவரான Capt.Duncan ம் பயணத்தில் இடையே A.Mac Cuish ம் இடம்பெற்றனர். ஏறத்தாழ 80 நாட்கள் இடம்பெற, வல்வெட்டித்துறை - கொழும்பு - அரேபியக்கடல் - செங்கடல் - சுயெஸ் கால்வாய் - Cyprus - Crete - மத்தியதரைக் கடல் - Gibraltar - அத்திலாந்திக்கடல் - ஹமிலடண்- Gloucester (USA) - அமெரிக்கா என்ற இந்த நீண்ட நெடிய பயணம்
வெற்றிகரமாக அமெரிக்காவின் கடற்பரப்பில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி 1938 அன்று கம்பீரமாக அன்னபூரணியம்மாள் நிலைகொள்ள நிறைவுற்றது.

அன்னபூரணியம்மாளை அமெரிக்காவுக்கு ஒட்டிய ஆறு கடலோடிகள்,
1) தண்டயல், கனகரெத்தினம் தம்பிப்பிள்ளை
2) சின்னத்தம்பி சிதம்பரப்பிள்ளை
3) தாமோதிரம்பிள்ளை சபாரத்தினம்
4) பூரணவேலுப்பிள்ளை சுப்பிரமணியம்
5)ஐயாத்துரை இரத்தினசாமி
6) ?? தகவல்கள் ஏதுமில்லை

இப்படிப்பட்ட பெருமைக்குரிய அன்னபூரணியம்மாளின் பாரிய மூன்று நங்கூரங்கள் இன்றளவும் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாச கடற்கரையினை அண்மித்து காணப்படுகின்றன. பலரிற்கும் அன்னபூரணியம்மாள் பற்றி தெரியவில்லை.இதனை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றி அனைவரும் உணரவேண்டும். வருடாவருடம் மாபெரும் இந்திரவிழா கொண்டாடுகின்றோம் ஆனால் இவற்றை போன்ற அம்சங்களை பாதுகாக்க தவறிவிட்டோம். இவற்றை கடற்ப்பரப்பிலிருந்து மீட்டு பராமரிக்க வேண்டும் என வடமராட்சி வரலாற்று மீட்புக்குழு இளைஞர்கள் கோரிக்கை வைக்கின்றார்கள்.

"சுமைதாங்கிக்கல்" என்பது இலங்கையில் யாழ் மாவட்டத்தில் மட்டுமே காணப்படுகின்றன.நெடுந்தூர வெகுநேர பயணங்களின் போது மக்கள் சுமைகளை இறக்கி வைத்து இளைப்பாறும் கட்டமைப்பு இதுவாகும். இவற்றுடன் இணைந்ததாக கேணி/கிணறு , ஆவுரஞ்சிக்கல், மடம்/கோவில் நிச்சயமாக காணப்படும். "கருவுற்ற பெண்ணொருத்தி குழந்தை பெறாமல் இறப்பின் அவளுக்குக்காக சுமைதாங்கி கல் பொதுஇடங்களில் வைக்கப்பட்டது " என கூறப்படுகிறது.

வடமராட்சியில் மாத்திரம் 50ற்கும் மேற்பட்ட சுமைதாங்கிக்கற்கள் இருப்பதாக தெரிவிக்கின்றனர். ஆனால் நாங்கள் இதுவரை 18ஐ இணங்கண்டுள்ளோம்.ஏனையவற்ற கண்டால் அவற்றை அறியதாருங்கள்.பலருக்கும் சுமைதாங்கி பற்றித் தெரியவில்லை.தொல்லியல் திணைக்களம் இவற்றை Google Maps ல் பதிவேற்றிவருகின்றனர். நீங்களும் உங்கள் பிரதேசத்தை சேர்ந்தவற்றை பாதுகாத்து பராமரியுங்கள்.அவற்றை Google maps ல் பதிவேற்றுங்கள். வரலாறு நம்மை எழுதிக்கொள்ளட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

பின்வரும் இணைப்பினை அழுத்தி "வடமராட்சி வரலாற்று மீட்புக்குழு" தளத்தினைக் காணலாம்.

வடமராட்சி வரலாற்று மீட்புக்குழு

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

-மலைநாடான்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சிவகார்த்திகேயன் - இயக்குநர் நெல்சன் - இசையமைப்பாளர் அனிருத் கூட்டணியில் உருவான ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ராசம் மெல்ல அனுங்கிக் கொண்டிருந்தாள்.
தலைவாசல் அறைக்குள்ளிருந்து கேட்ட அவள் அனுங்கலில் “வேம்பி..!”

கொரோனா பேரிடரின் இரண்டாம் அலையை, இஸ்ரலேல் உள்ளிட்ட உலகின் பல நாடுகள் திறம்பட சமாளித்து வரும் வேளையில் இந்தியா அதில் கோட்டை விட்டுவிட்டதாக இந்திய ஊடகங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் மோடி பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று #reginmodi என்கிற ஹேஷ் டேக் இந்திய அளவில் பிரபலமாகி வருகிறது.

நாம் வாழும் பூமியின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் மாசாடையாமால் பாதுகாக்கவும் ஒவ்வொரு ஏப்ரல் 22 ஆம் திகதி புவி தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.