சமூக ஊடகம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் கொலையானதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தொடர்ச்சியாக வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. அதில், பல வாதங்கள் ஒற்றைப்படையானதாக; அதாவது, “இனவாத வெளிப்பாடு“ என்கிற விடயத்தினை பிரதானமாகக் கொண்டிருப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது. ஆனால், இந்தச் சம்பவத்தில் விடயங்களை அதன் வரிசைக்கிரமத்தின் பிரகாரம் பேச வேண்டியது அவசியம். அதுதான், ஆரோக்கியமானதும் கூட.  

முதலாவது, மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளமை என்பது படுகொலைக்கு நிகரானது. அதனை பொலிஸார் மேற்கொண்டிருந்தால் அது தண்டிக்கப்பட வேண்டியது. ஏனெனில், இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கின்ற பொலிஸாருக்கு ஒருவரை உயிர் போகுமளவுக்கு தாக்கும் அதிகாரம் வழங்கப்படாத நிலையில், கொலைகள் இடம்பெறுமளவுக்கான நடவடிக்கைகளை எந்த ரீதியில் மேற்கொண்டாலும் அது அடிப்படையில் படுகொலையாகவே கணக்கில் எடுக்கப்பட வேண்டும். 

ஆக, மாணவர்களின் கொலைகளை படுகொலைகள் என்கிற அடிப்படையிலிருந்து விசாரித்து நீதி வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது அடிப்படை. அந்த அடிப்படையில், பொலிஸார் தவறிழைத்த விடயங்கள் பற்றி வெளிப்படுத்தப்பட வேண்டியதும் அவசியமானது. 

இரண்டாவது, பொலிஸார் அதிகார மிலேச்சத்தனத்தின் வெளிப்பாட்டினால் இந்தக் கொலைகளைப் புரிந்துள்ளார்களாக என்று ஆராயப்பட வேண்டும். அது, அவர்கள் அந்த நேரத்தில் எவ்வாறான அணுகுமுறையைக் கையாண்டார்கள். அவர்களின் உடலில் போதையின் அளவு எவ்வளவு என்பது பற்றியெல்லாம் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.

மூன்றாவது, இரு மாணவர்களும் உண்மையிலேயே பொலிஸார் தடுத்து பரிசோதனை செய்ய முயன்றபோது ஒத்துழைக்கவில்லையா?, அல்லது, அவர்களை பரிசோதித்த பின்னர் மோட்டார் சைக்கிளில்  போக விட்டு துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதா?, என்றும் ஆராயப்பட வேண்டும். 

இந்த மூன்று விடயங்களை ஆராய்ந்து விடை கண்டாலும் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தால், அது படுகொலை என்கிற அடிப்படைகளை மாத்திரமே வழங்கும். ஆக, துப்பாக்கிப் பிரயோகத்துக்கு பொலிஸார் காரணமானால், படுகொலைக்கு காரணமானவர்களும் பொலிஸாரே. அதில் சந்தேகங்கள் இல்லை. நீதிக்கான அடைவுப் பாதையும் இலகுவானதாக இருக்கும். 

ஆனால், இந்த அடிப்படை விடயங்களை புறந்தள்ளிவிட்டு “இனவாத வெளிப்பாடு“ என்கிற விடயம் பிரதானப்படுத்தப்பட்டால், அது, விடயங்களை சிக்கலாக்குவதற்கான ஏதுகைகளை வழங்கும்.

குறிப்பாக, இரு மாணவர்களையும் புலிகள் அல்லது பயங்கரவாதிகள் என்கிற ஏற்பாடுகளை தென்னிலங்கை செய்வதற்கும், அப்படியான கட்டுக்கதைகளை உருவாக்கி தென்னிலங்கை மக்களிடம் குற்றவாளிகளுக்கு அனுதாபத்தைத் தேடுவதற்கும் வாய்ப்புக்களை உருவாக்கும். 

இலங்கை இரமுரண்பாடு கோலொச்சிக் கொண்டிருக்கும் நாடு. அதில், யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால், ஒரு விடயத்தினை நியாயமாக அணுகும் அளவுக்கான விடயங்களைப் புறந்தள்ளி இனவாதத்துக்கு நெய் ஊற்றுவது இன்னும் இன்னும் பிரச்சினைகளை உண்டு பண்ணும். அது, தமிழ் இளைஞர்களுக்கும் நல்லதல்ல.

இன்னொரு விடயம், யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு கிழக்கில் அதிகாரித்துள்ள கொலை, கொள்ளைகள், ரவுடித்தனங்களைக் யார் கட்டுப்படுத்துவது என்கிற கேள்வி? நீதிபதி இளஞ்செழியன் விசேட அதிரடிப்படையினரை களத்தில் இறக்கி இவற்றைக் கட்டுப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டிருக்கின்றார். ஆக, இந்த உத்தரவுக்குப் பின்னாலுள்ள விடயங்களின் அடிப்படைகள் என்ன? அது, வீதியில் பயணிப்போரை எவ்வாறான வரைமுறைகளோடு சோதனை செய்யும் அதிகாரத்தினை பொலிஸாருக்கு வழங்கியிருக்கின்றது என்கிற விடயங்களை எல்லாம் கவனிக்க வேண்டியிருக்கின்றது. 

அடுத்து, சிங்களப் பொலிஸார், தமிழ் மாணவர்கள் என்பதால்தான் இலகுவாக துப்பாக்கிப் பிரயோகம் செய்திருக்கின்றார்கள் ஏனெனில், தமிழர்களைக் கொல்வது இந்த நாட்டில் இலகுவானது, கேள்விக்கு அப்பாலானது என்கிற அடிப்படை வாதமொன்று தென்னிலங்கையிடம் இருக்கின்றது. ஏனெனில், இலங்கை அரச படைகளும், பொலிஸாரும் தமிழ்- முஸ்லிம் மக்களிடையே ஆற்றியிருக்கின்ற வன்முறைகளும், கொலைகளும் கணக்கில்லாதவை. ஆனால், இரு மாணவர்களின் கொலையில் இந்த விடயங்களின் வகிபாகம் பிரதானமானதா, துணையானதா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். 

ஏனெனில், பிரதான விடயத்தினை ஆராய்ந்துவிட்டுத்தான், துணைக்கூறுகளுக்கு செல்ல வேண்டும். மாறாக, பிரதான விடயத்தினை மறந்து துணைக்கூறொன்றை பிரதான விடயமாக்கினால், அதன் விளைவுகளும் மோசமானதாக இருக்கலாம். 

சின்ன உதாரணமொன்று, சில வருடங்களுக்கு முன், பருத்தித்துறை இராணுவ முகாமுக்குள் வைத்து முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கு விசாரணையில் இராணுவ அதிகாரியொருவர் குற்றவாளியாகக் காணப்பட்டு அவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும், குற்றவாளி 20 இலட்ச ரூபாய் நஷ்டஈட்டினை கொலையான நபரின் குடும்பத்துக்கு வழங்குமாறும் தீர்ப்பு எழுதப்பட்டது. ஆனால், இந்த விடயத்தினை தெற்கின் இனவாத அணி எடுத்துக் கொண்டு குற்றவாளிக்காக நிதி சேகரித்தது. நஷ்டஈட்டுக்கான பணத்தினை மஹிந்த அணியே பெருமளவு சேகரித்து வழங்கியது. இங்கு, குற்றம் என்பதைக் காட்டிலும், இராணுவ அதிகாரி செய்த படுகொலை சரியானது என்கிற உணர்வு தெற்கில் ஏற்படுத்தப்பட்டு நிதி சேகரிக்கப்பட்டது. அப்படியான நிலைப்பாடொன்று இரு மாணவர் படுகொலையிலும் ஏற்படுமாறு  செய்ய அனுமதிக்கக் கூடாது.

அடுத்து, பொலிஸார், இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரின் அத்துமீறல்களும், கொலைகளும் சார்ந்தவை. பொலிஸார் மீது வடக்கு- கிழக்கிலிருந்து மாத்திரமல்ல தெற்கிலும் தொடர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த விடயத்தினை அரசாங்கம் எந்தவித சார்புமின்றி கையாள வேண்டும். அதுவே, அடிப்படைகளைச் சரிசெய்ய உதவும். மாறாக, குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக “தேச அபிமானம்“ என்கிற விடயத்தினைப் பிரதானப்படுத்தினால், அப்பாவிகள் மீதான கொலைகள் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படும். அது, ஒரு கட்டத்திற்கு மேல், தமிழ், முஸ்லிம் மக்களை மாத்திரமல்ல, சிங்களை மக்களையும் பலிவாங்க ஆரம்பிக்கும். அப்போது, எல்லாமும் கையை மீறிப் போயிருக்கும். 

இரு மாணவர்களின் படுகொலையோடு தொடர்புடைய குற்றவாளிகள் அதிகபட்சமாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அடிப்படைக் கோரிக்கை. அது, நீதியின் ஒரு பகுதியாக இருக்கும். ஏனெனில், மாணவர்களின் இழப்பு என்பது பெற்றோருக்கும், உறவினருக்கும் என்றைக்குமே ஈடு செய்ய முடியாதது. அந்த இழப்புக்கு எதுவுமே ஈடாகாது. படுகொலைகளுக்கு எதுவுமே பூரண நீதியாகாது!

-புருஜோத்தமன் தங்கமயில்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சிவகார்த்திகேயன் - இயக்குநர் நெல்சன் - இசையமைப்பாளர் அனிருத் கூட்டணியில் உருவான ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ராசம் மெல்ல அனுங்கிக் கொண்டிருந்தாள்.
தலைவாசல் அறைக்குள்ளிருந்து கேட்ட அவள் அனுங்கலில் “வேம்பி..!”

கொரோனா பேரிடரின் இரண்டாம் அலையை, இஸ்ரலேல் உள்ளிட்ட உலகின் பல நாடுகள் திறம்பட சமாளித்து வரும் வேளையில் இந்தியா அதில் கோட்டை விட்டுவிட்டதாக இந்திய ஊடகங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் மோடி பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று #reginmodi என்கிற ஹேஷ் டேக் இந்திய அளவில் பிரபலமாகி வருகிறது.

நாம் வாழும் பூமியின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் மாசாடையாமால் பாதுகாக்கவும் ஒவ்வொரு ஏப்ரல் 22 ஆம் திகதி புவி தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.