சமூக ஊடகம்

2016ம் ஆண்டுக்கான மனிதராக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப்பினை தெரிவு செய்துள்ளது பிரபல டைம்ஸ் சஞ்சிகை. 

எனினும் இத்தெரிவு பெரிதும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. ஒரு புறம்,  இது எனக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய கௌரவம் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் டைம்ஸ் சஞ்சிகையோ, 

 «இந்த வருடத்திற்கான மனிதர் எனும் அடையாளப்படுத்தலை மாத்திரமே நாம் வழங்கியுள்ளோம். அதன் அர்த்தம் இந்த வருடத்திற்கான சிறந்த மனிதர் என்பதல்ல. ஒருவர் எந்தளவு மக்களிடையே செல்வாக்கு செலுத்தியுள்ளார் என்பதனை மாத்திரம் வைத்தே இத்தெரிவு இடம்பெற்றுள்ளது. அது எதிர்மறையான செல்வாக்காக கூட இருக்கலாம்» என இத்தெரிவை நியாயப்படுத்தியுள்ளது. 

இதேவேளை டொனால்ட் டிரம்ப் குறித்த டைம்ஸ் சஞ்சிகையின் டிசம்பர் மாத சஞ்சிகை அட்டைப்படத்தில் காட்சியளிக்கும் விதமும் பெரும் நகைப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.  

டொனால்ட் டிரம்ப் காட்சியளிக்கும் விதம், இதே டைம்ஸ் சஞ்சிகை ஹிட்லரை 1938ம் ஆண்டு தனது அட்டைப் படத்தில் கொண்டுவந்த போது காட்சியளிக்கும் விதத்திற்கு ஒப்பானது.  

அதோடு டொனால்ட் டிரம்பின் தலைக்கு மேல் Time எனும் சொல்லின் «M» எழுத்து பொருந்துவது, டொனால்ட் டிரம்புக்கு இரு கொம்பு முளைத்தது போன்று மாயத்தோற்றம் அளிப்பதால், அதுவும் நகைப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. 

அதோடு டொனால்ட் டிரம்ப்பின் குறித்த காட்சிப்படுத்தலை போட்டோஷாப் மூலம் நகைப்புக்கு உள்ளாக்கும் புகைப்படங்களும் வெளிவந்தவாறு உள்ளன.