சமூக ஊடகம்

உலக அன்னையர் தினம் ஒவ்வொரு வருடமும் உலகில் உள்ள எல்லா அன்னையர்களையும் தாய்மையையும் போற்றும் வண்ணம் வருடாந்தம் மே மாதம் 2 ஆவது வாரம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப் பட்டு வருகின்றது. அன்னையர் தினம் கொண்டாடப் பட்டு வரும் தினம் உலகின் வெவ்வேறு பாகங்களில் வேறுபட்டு வருகின்றது.

உலக அன்னையர் தினத்தின் தோன்றலானது பண்டைய கிரேக்க மற்றும் ரோமன் சாம்ராஜ்ஜியத்தின் போது நிகழ்ந்திருக்க ஆதாரங்கள் இருக்கின்ற போதும் நவீன உலக அன்னையர் தினக் கொண்டாட்டம் ஆனது 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் தான் தொடங்கியது. அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் அன்னா ஜார்விஸ் என்பவரால் 1908 இல் தனது தாயை கௌரவப் படுத்த அறிமுகப் படுத்தப் பட்ட அன்னையர் தினம் குறிப்பாக குடும்பங்கள் மற்றும் அது சார்ந்த உறவுச் சூழல்களை மையமாகக் கொண்டே உருவாக்கப் பட்டது.

பல வருடங்களாக இவரது பிரச்சாரங்களை அடுத்து 1914 இல் வெற்றிகரமாக அமெரிக்காவில் தேசிய அன்னையர் தினம் விடுமுறை தினமாக அறிவிக்கப் பட்டது. அமெரிக்க அதிபர் வூட்ரோவ் வில்சன் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 2 ஆவது ஞாயிற்றுக் கிழமையை தேசிய அன்னையர் தினமாக பிரகடனப் படுத்தினார். பின்னாளில் பல சர்வதேச நாடுகள் இதே வழிமுறையைப் பயன் படுத்தி அன்னையர் தினத்தை கொண்டாடி வருகின்றன.

இருந்த போதும் 20 ஆம் நூற்றாண்டின் மத்தியிலேயே வணிக மயமாக்கப் பட்டதால் அதன் மதிப்பை இழந்து விட்டதாகக் கருதப் பட்டதை அடுத்து அன்னா ஜார்விஸே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இன்று உலகின் பல நாடுகளில் அவற்றின் கலாச்சாரம் மற்றும் மதம் குடும்பக் கட்டமைப்பு சார்ந்து அன்னையர் தினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப் பட்டு வருகின்றன மேலும் அன்னையர் தின சிறப்பை முன்னிட்டு கூகுள் தேடுபொறி தனது முகப்பில் விசேட லோகோ இட்டு சிறப்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலதிகத் தகவல்களுக்கு : விக்கிபீடியா