சமூக ஊடகம்

எமது சூரிய குடும்பத்திலேயே மிகப் பெரிய கிரகமான வியாழனை நாசாவின் ஜூனோ செய்மதி செவ்வாய்க் கிழமை சென்றடைந்துள்ளது. எந்த வகையான தாதுப் பொருளால் வியாழன் ஆக்கப் பட்டுள்ளது என்பதைக் கண்டு பிடிப்பதற்காக செலுத்தப் பட்ட இந்த விண்கலம் 5 ஆண்டுகளாக சுமார் 540 மில்லியன் மைல்கள் தொலைவு பயணித்து வியாழனின் சுற்று வட்டப் பாதையைச் சென்றடைந்துள்ளது.

 ஓர் கூடைப் பந்தாட்ட மைதானத்தின் அளவு விட்டம் உடைய ஜூனோ தன்னைத் தானே சுற்றிக் கொண்டு செயற்படும் ரோபோட்டிக் கலம் ஆகும். மேலும் பூமியில் இருந்து மிக அதிக தொலைவில் சோலார் சூரிய சக்தியில் இயங்கும் ஒரே விண்கலமும் ஜூனோ ஆகும். ஜூனோ இற்கு முன் வியாழனுக்கு நாசாவால் அனுப்பப் பட்ட கலீலியோ செய்மதி பல ஆண்டுகளாக இயங்கி 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 இல் வியாழனுடன் மோதி சிதைந்தது. வாயுக் கோளங்களால் ஆன வியாழக் கிரகம் பூமியை விட 11 மடங்கு விட்டமும் 300 மடங்கு பாரமும் கொண்டதாகும். இதன் வாயுக் கோளங்கள் பற்றிய ஆய்வு நமது சூரிய குடும்பம் எப்படித் தோன்றியது என்பதை அறிந்து கொள்ளவும் உதவக் கூடியதாகும்

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 20 ஆம் திகதியுடன் ஜூனோவின் செயற்திட்டம் முடிவடைகின்றது. இதன் பின் பெரும்பாலும் இந்த செய்மதியும் வியாழனுடன் மோதலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது. நாசாவின் இந்த சாதனையை சிறப்பித்து நேற்று செவ்வாய்க்கிழமை கூகுள் டூடுள் தனது முகப்பில் அனிமேஷன் பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

- 4தமிழ்மீடியாவுக்காக நவன்