சமூக ஊடகம்

உலகின் பிரபல சமூக வலைத் தளங்களில் ஒன்றான டுவிட்டரில் அனைத்துத் தரப்பு பிரபலங்களும் கணக்கு வைத்திருக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில் சர்வதேச நாடுகளின் மூத்த தலைவர்கள் சிலர் பாதுகாப்புக் காரணங்களுக்காக இதில் சொந்தக் கணக்கு வைத்திருப்பதில்லை.

இவர்களில் ஒருவராகவே இதுவரை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் இருந்து வந்தார். ஆனால் ஒரு வழியாக இன்று திங்கட் கிழமை அவரும் டுவிட்டரில் சொந்தக் கணக்குத் திறந்து விட்டார்!

@BarackObama என்ற கணக்கின் வாயிலாக முன்னர் அவரைப் பின் தொடர்ந்த மக்களது தகவல்கள் ஒபாமாவின் ஏனைய தனிப்பட்ட மாபைல் இணையத் தள கணக்குகள் போன்றே ஆக்சன் ஸ்டாஃப் ஒழுங்கமைப்பு என்ற ரகசிய சேவைப் பிரிவினால் கட்டுப் படுத்தப் பட்டு வந்தது. ஆனால் முதன் முறையாக @POTUS என்ற ஒபாமாவின் தனிப்பட்ட கணக்கு வெள்ளை மாளிகையால் திறக்கப் பட்டுள்ளது. அதில் தனது முதலாவது டுவீட்டாக இன்று திங்கள் மாலை 5.38 இற்கு,

"Hello, Twitter! It's Barack. Really! Six years in, they're finally giving me my own account."

என்ற வாசகத்தை ஒபாமா பதிவு செய்துள்ளார். பதிலுக்கு உடனே அமெரிக்காவின் முதல் பெண்மணியும் ஒபாமாவின் மனைவியுமான மிச்சேல் ஒபாமா 'இது உகந்த நேரம்!' என்று பதிவு செய்துள்ளார். மேலும் @POTUS ஆனது ஒபாமாவின் தனிப்பட்ட கணக்காக அவருடன் அமெரிக்க மக்களை மேலும் நேரடியாக நெருங்க வைக்கும் விதத்தில் செயற்படும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அதிபர் ஒபாமா டுவிட்டரில் @POTUS கணக்குத் தொடங்கிய சில மணி நேரங்களுக்குள் 141, 673 ரீடுவீட்டுக்களும், 180 396 விருப்பங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.