விளையாட்டு
Typography

நேற்று நடைபெற்ற உலக கோப்பை கால்ப்பந்து போட்டிகளின் காலிறுதிப் போட்டியில் பலம்வாய்ந்த பிரேசில் அணியும் பெல்ஜியமிடம் 2-1 என தோற்று வெளியேறியுள்ளது.

இதன் மூலம் இம்முறை ரஷ்யாவை தவிர்த்து, அரையிறுத்துக்கு நுழையும் வாய்ப்பை எந்தவொரு ஆபிரிக்க, ஆசிய, தென் அமெரிக்க நாடுகளும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

அதோடு, 1986ம் ஆண்டுக்கு பிறகு இரண்டாவது தடவையாக பெல்ஜியம் அணி, உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அதோடு இதுவரை பிரேசில் அணிக்கு எதிராக விளையாடிய போட்டிகளீல் இரண்டாவது தடவையாக பிரேசிலை வீழ்த்தியுள்ளது.

2006ம் ஆண்டிலிருந்து இன்றுவரை பிரேசில் அணி ஒவ்வொரு முறையும், ஒரு ஐரோப்பிய அணியினாலேயே உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. நேற்றைய போட்டியில் 13 வது நிமிடத்தில் பிரேசிலின் பெர்னாண்டின்ஹோவின் காலில் பட்டு பெல்ஜியமுக்கு சாதகாம கோல் ஒன்று போடப்பட்டது. 31 வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் கெவின் டெ புரூயென் மிக கச்சிதமாக கோல் ஒன்றை அடித்தார்.

இரண்டாவது பாதி ஆட்டத்திலேயே பிரேசில் தனது முழுத்திறனையும் வெளிப்படுத்தி இறுதிவரை போராடியது. ஆனால் அகொஸ்டா 76 வது நிமிடத்தில் தலையால் அடித்து வீழ்த்திய கோல் ஒன்றை தவிர, இன்னுமொரு கோல் அடித்து போட்டியை சமநிலைப்படுத்த அவர்களால் முடியாமல் போய்விட்டது.

இப்போட்டியில் நெய்மார் மற்றும் ஜேசுஸ் இருவருக்கும் இரு முறை பெல்ஜியம் 16mm எல்லையில் வைத்து பெல்ஜியம் வீரர்களால் தடுத்து வீழ்த்தப்பட்ட குற்றச்சாட்டில் பெனால்டி வாய்ப்புக்கான காணொளி மீள்பார்வை சந்தர்ப்பம் இருந்தது. ஆனால் நேரம் போவதாக கருதி, பிரேசில் வீரர்கள் காணொளி மீள்பார்வையில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஆனால் அவ்வாறு மீள்பார்வை செய்யப்பட்டிருந்தால் நிச்சயம் பிரேசில் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்திருக்கும் என தற்போது ஊடகங்கள் கருத்து வெளியிட்டுவருகின்றன.

மறுமுனையில் பிரான்ஸ் - உருகுவே அணிகளுக்கு இடையிலான மற்றுமொரு காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி 2-0 என இலகுவாக உருகுவேயை வீழ்த்தியது. இதன் மூலம் அரையிறுதிச் சுற்றுக்கு 6வது தடவையாக தகுதி பெற்றுள்ளது.

இதோடு பிரான்ஸ் அணி தனது கடைசி 10 உலக கோப்பை போட்டிகளில் ஒன்றில் கூட தென் அமெரிக்க அணி ஒன்றிடம் தோல்வி அடையவில்லை.

நேற்றைய போட்டி முடிவுகளின் படி பிரான்ஸ் - பெல்ஜியம் அணிகள் ஒரு அரையிறுதிப் போட்டியில் மோதவுள்ளன. நாளை இங்கிலாந்து - சுவீடன் அணிக்கு இடையிலான ஒரு போட்டியும், ரஷ்யா - குரோஷியா அணிகளுக்கு இடையிலான இன்னுமொரு போட்டியும் நடைபெறவுள்ளன. இதில் வெற்றிபெறும் அணிகள் அடுத்த அரையிறுதிப் போட்டிகளில் மோதவுள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS