விளையாட்டு

சற்று முன்பு நடந்து முடிந்த இங்கிலாந்து மற்றும் குரோஷிய அணிகளுக்கான கால் பந்தாட்டப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக 2 ஆவது எக்ஸ்ட்ரா டைம் வரை சென்றது.

முதலாவது பாதியில் ஆட்டம் தொடங்கி 5 நிமிடங்களுக்குப் பின் கோல் கம்பத்துக்கு அருகே இங்கிலாந்து வீரரை குரோஷியா கீழே விழுத்தியதற்குப் பதிலாக இங்கிலாந்துக்குத் தரப்பட்ட கோலடிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி உயர்ந்து எழும்பி வளைந்து சென்று கோ கம்பத்துக்குள் விழுமாறு திரிப்பியர் அடித்த அற்புதமான கோலினால் இங்கிலாந்து முன்னிலை வகித்தது.

மேலும் 2 ஆவது பாதியின் 68 ஆவது நிமிடத்தில் குரோஷிய வீரர் இவான் பெரிஷிக் கோலடித்து ஆட்டத்தை சமன் செய்யும் வரை இங்கிலாந்தே வெற்றி பெறும் என எதிர் பார்க்கப் பட்டது. 2 ஆவது பாதி முடிந்து வழங்கப் பட்ட முதல் 15 நிமிட எக்ஸ்ட்ரா டைமிலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால் பெனால்டி வாய்ப்பு வரை ஆட்டம் செல்லும் என எதிர் பார்க்கப் பட்டது. ஆனால் 2 ஆவது எஸ்ட்ரா டைம் முடிய 11 நிமிடம் இருக்கையில் மரியோ மாண்ட்ஸுகிக் அடித்த அற்புதமான கோலினால் ஆட்டம் திசை திரும்பியது. இதன் பின் இங்கிலாந்து கடுமையாகப் போராடியும் கோல் அடிக்க முடியாததால் குரோஷியா வெற்றி பெற்றது.

முன்னதாக நேற்று செவ்வாய்க்கிழமை செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் ஒன்றுக்குப் பூஜ்யம் என்ற கணக்கில் வெற்றி பெற்று பிரான்ஸ் இறுதிப் போட்டிக்கு ஏற்கனவே முன்னேறியிருந்தது. இந்நிலையில் சனிக்கிழமை ஐரோப்பிய நேரப்படி மாலை 4 மணிக்கு இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதும் 3 ஆவது இடத்துக்கான போட்டி இடம்பெறவுள்ளது.

அதைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டின் FIFA உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் சேம்பியன் பட்டத்தை சுவீகரிக்கும் இறுதிப் போட்டியில் எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு வல்லமை வாய்ந்த பிரான்ஸும் இம்முறை அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாகத் தனது திறமையை வெளிக்காட்டி வரும் குரோஷிய அணியும் மோதுகின்றன. பிரான்ஸை பொறுத்தவரை இதற்கு முன்பு ஃபிபா உலகக் கிண்ணத்தை ஒருமுறையாவது சுவீகரித்த 8 அணிகளில் அதுவும் ஒன்றாகும். 1998 ஆம் ஆண்டு தனது சொந்த மண்ணில் இடம்பெற்ற ஃபிபா போட்டிகளில் இறுதிப் போட்டியில் பிரேசில் அணியை அது 3 இற்கு 0 என்ற கணக்கில் தோற்கடித்து உலகக் கோப்பையை வென்றிருந்தது.

ஆனால் குரோஷிய அணியோ 1991 ஆம் ஆண்டு யூகோஸ்லாவியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றுத் தனி நாடான பின்னர் இதுவரை 1998 தொடங்கி 5 ஃபிபா உலகக் கோப்பை போட்டிகளில் மாத்திரமே விளையாடி உள்ளது. மேலும் இம்முறை தான் குரோஷியா அணி இறுதிப் போட்டிக்கு முதன் முறை தேர்வாகி உள்ளது. ஆனாலும் 1998 இல் நடைபெற்ற ஃபிபா போட்டிகளில் பிரான்ஸுடன் அரையிறுதிப் போட்டியில் தோற்று மூன்றாம் இடத்தை குரோஷியா பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.