விளையாட்டு
Typography

ரியோ ஒலிம்பிக்கின் ஆண்களுக்கான 100 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் நீச்சல் ஜாம்பவானும், அமெரிக்காவுக்காக பதக்க வேட்டை நடத்தி வருபவருமான மைக்கல் பெல்ப்ஸை தோற்கடித்து, சிங்கப்பூரின் இளம் புயலாக ஜோசப் ஸ்கூலிங் தங்கப்பதக்கம் வென்றார்.  

ஒலிம்பிக் வரலாற்றில் சிங்கப்பூர் பெற்ற முதலாவது தங்கப்பதக்கமாகவும் அது பதிவானது. 

இந்த போட்டியில் மைக்கல் பெல்ப்ஸ், செட் வி குளோஸ், லெஷ்லோ ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தை பகிர்ந்துக்கொண்டனர்.

ரியோ ஒலிம்பிக்கின் ஏழாவது நாளான நேற்று வெள்ளிக்கிழமை (இலங்கை நேரப்படி இன்று சனி அதிகாலை 6.10) ஆண்களுக்கான பட்டர்பிளை நீச்சல் போட்டி இடம்பெற்றது. 

இறுதிப்போட்டிக்கான தேர்வுப் போட்டிகளிலேயே நேரக்கணிப்பின் பிரகாரம் அமெரிக்காவின் மைக்கல் பெல்ப்ஸைவிட ஜோசப் ஸ்கூலிங் முன்னிலை பெற்றிருந்தார். இதனையடுத்து, இறுதிப் போட்டி கவனம் பெற்றிருந்தது. 

ஒலிம்பிக் போட்டிகளில் நீச்சல் ஜாம்பவானாக திகழும் மைக்கல் பெல்ப்ஸ் 22 தங்கப்பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், 23 தங்கத்தையும் வெல்வாரா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், அவரால் ஜோசப் ஸ்கூலிங்கின் நீச்சல் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் வெள்ளிப்பதக்கத்தோடு திருப்திப்பட வேண்டியிருந்தது. 

இதனிடையே, மைக்கல் பெல்ப்ஸூடன்  ஜோசப் ஸ்கூலிங் 2008ஆம் ஆண்டு எடுத்துக்கொண்ட புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS