விளையாட்டு

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி காலநிலை சீர்கேட்டினால் சமநிலையில் முடிந்தது. இதையடுத்து 2-1 என டெஸ்ட் தொடரை ஏற்கனவே கைப்பற்றியிருந்த இந்திய அணி, 71 வருடங்களில் முதன்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் போட்டித் தொடரை வென்று சரித்திரம் படைத்துள்ளது.

"2011 இல் இந்திய அணி உலக கோப்பையை வென்ற போது அந்த அணியில் இடம்பெற்ற மிக இளைமையான வீரர் நானே. அப்போது அந்த வெற்றியின் மகத்துவம் எப்படிப்பட்டது என பெரிதாக தெரிந்திருக்கவில்லை. இப்போது இவ்வளவு கடின உழைப்புக்கு பிறகு பெற்ற இவ்வெற்றியின் மகத்துவம் உண்மையிலேயே மகிழ்ச்சியை தருகிறது" என இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார். 

சட்டீஸ்வர் புஜாராவின் சதங்கள், ரிஷாப் பேண்டின் அதிரடி ஆட்டம், பும்ராஹ், ஜடேஜா மற்றும் குல்தீப் யாதீவ் ஆகியோரின் அதிரடி பந்துவீச்சு இந்தியாவின் இத்தொடர் வெற்றிக்கு காரணமானது. "கடந்த 12 மாதங்களாக மேற்கொண்டு வந்த தயார்படுத்தல் இது. தென் ஆபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியிலிருந்து நாம் இத்தொடருக்காக தயார்படுத்தல் மேற்கொண்டு வருகிறோம். ஒவ்வொரு தவறுகளையும் இணங்கண்டு, களைந்து, சரியான ஃபோர்முலாவை கண்டுபிடித்து, சரியான வீரர்களை சரியான வீரர்களுடன் இணைத்து இத்தயார்படுத்தலை மேற்கொண்டிருந்தோம்" என இந்திய அணியின் பயிற்றுனர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 

இதேவேளை இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் சர்வதேச போட்டிகள் இனி நடைபெறவுள்ளன.