விளையாட்டு
Typography

ரியோ ஒலிம்பிக் தொடரில்  நேற்று ஜேர்மனி - பிரேசில் காற்பந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் பெனால்டியில் 5-4 என வென்று தங்கத்தை சுவீகரித்தது பிரேசில் அணி.

அதோடு கடந்த உலக கோப்பை காற்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில் பிரேசிலை 7-1 என ஜேர்மனி தோற்கடித்ததற்கு இதன் மூலம்  பழிதீர்த்துக் கொண்டது. இதுவரை ஒலிம்பிக் காற்பந்து தொடரில் தங்கம் வென்றிடாத பிரேசில் அணி, இம்முறை இளம் நட்சத்திர வீரர் நெய்மார் தலைமையில் புதிய நம்பிக்கையுடன் களமிறங்கியது. அனைவரும் எதிர்பார்த்தது போன்று இறுதிப் போட்டி ஜெர்மனி - பிரேசில் அணிகளுக்கு இடையிலேயே அமையப் பெற்றது. நேற்று மரகானா  மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் 90 நிமிடம் வரை இரு அணிகளும் 1-1 என சமநிலை கண்டன. 

பிரேசில் அணி சார்பில் நெய்மார் ஒரு கோலையும், ஜேர்மனி சார்பில் மெக்ஸ் மேயெர் ஒரு கோலையும் அடித்தனர். இதையடுத்து மேலதிக ஆட்ட நேரத்திலும் இரு அணிகளும் கோல் எதனையும் அடிக்காததால், பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஜேர்மனியின் ஐந்தாவது பெனால்டி வாய்ப்பை பிரேசில் கோல் கீப்பர் நெவெர்டோன் வெற்றிகரமாக தடுத்தார். பிரேசிலின் ஐந்தாவது கோல் வாய்ப்பை நெய்மார் வெற்றிகரமாக கோல் ஆக்கி, பிரேசிலின் வெற்றியை உறுதி செய்தார். 

உலக கோப்பை காற்பந்து தொடரில் விளையாடிய தலைசிறந்த ஜேர்மனிய மூத்த வீரர்களோ, பிரேசிலின் மூத்த வீரர்களோ ஒலிம்பிக் தொடரில் விளையாடவில்லை. புதிய இளம் வீரர்களே இரு அணியிலும் களமிறங்கினர். எனவே இதனை ஜேர்மனியின் உலக கோப்பை வெற்றிக்கு பழிதீர்க்கும் போட்டியாக முற்றுமுழுதாக பார்க்க முடியாது என்ற போதும், பிரேசில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதால், இப்போட்டியில் வெற்றி பெற்றமை அவர்களுக்கு நிச்சயம் பெருமை சேர்க்கும்  ஒரு போட்டியே ஆகும். 

BLOG COMMENTS POWERED BY DISQUS