விளையாட்டு
Typography

இன்று ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இவ்வருடத்துக்கான ஐசிசி உலகக் கிண்ணக் கோப்பைப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சம ரன்களைப் பெற்றிருந்த நிலையில் சூப்பர் ஓவர் வழங்கப் பட்டு அதிலும் இரு அணிகளும் சம ரன்களைப் பெற்ற நிலையில் அதிக பவுண்டரிகள் அடித்த அணியான இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது.

இதனால் முதன் முறையாக அதுவும் தனது தாயகத்தில் இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை சுவீகரித்து சரித்திரம் படைத்துள்ளது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி லோர்ட்ஸ் மைதானம் பந்து வீச்சுக்கான மைதானம் என்பதால் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டு இழப்புக்கு 241 ரன்களை நியூசிலாந்து அணி குவித்தது. அதிகபட்சமாக ஹென்றி நிக்கோல்ஸ் 55 ரன்களைப் பெற்றார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே மிக மெதுவாக ரன்களைக் குவித்து வந்தது. ஆனாலும் கடைசி ஒவரில் அதிரடியாக விளையாடி 50 ஓவர் முடிவில் 10 விக்கெட்டுக்களையும் இழந்து 241 ரன்களைப் பெற்று ஆட்டத்தை சமநிலைப் படுத்தியது. பேட்டிங்கில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 84 ரன்களைப் பெற்றார்.

சூப்பர் ஓவரில் இரு அணிகளும் 15 ரன்களைப் பெற்று அதுவும் சமநிலையிலேயே முடிந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அதிக பவுண்டரிகள் அடித்த அணியாகக் கணிக்கப் பட்ட இங்கிலாந்து அணி சேம்பியனானது. ஆட்ட நாயகனாக இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் விருது வழங்கப் பட்டார். மிகவும் விறுவிறுப்பான போட்டியாகக் கணிக்கப் பட்ட இந்த இறுதிப் போட்டியில் ஒரு ரன்னால் தோல்வியுற்ற நியூசிலாந்து அணியினர் ஏமாற்றத்துடன் தாயகம் திரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS