விளையாட்டு
Typography

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 8
விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, இந்திய
அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

முன்னதாக தர்மசாலா, இமாச்சல் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்த
நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை
தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, தனது முதல்
இன்னிங்சில் 300 ரன் குவித்து ஆல் அவுட்டானது. நிதானமாக விளையாடிய
இந்தியா 2-ம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 248 ரன்
எடுத்திருந்தது. சாஹா 10, ஜடேஜா 16 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை
தொடங்கினர். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 96 ரன்
சேர்த்து முன்னிலை பெற உதவியது. ஜடேஜா 63 ரன் (95 பந்து, 4 பவுண்டரி, 4
சிக்சர்), சாஹா 31 ரன் (102 பந்து, 2 பவுண்டரி) எடுத்து கம்மின்ஸ்
வேகத்தில் பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில்
ஆட்டமிழந்தனர். இந்தியா 118.1 ஓவரில் 332 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

பின்னர் 32 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை
துவக்கிய ஆஸ்திரேலிய அணி, இந்திய பந்து வீச்சாளர்களின் அபார பந்து
வீச்சிற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. இதனால் ஆஸ்திரேலிய அணி 2-வது
இன்னிங்சில் 137 ரன்னுக்கு சுருண்டது. இந்திய பந்துவீச்சில் உமேஷ்,
ஜடேஜா, அஷ்வின் தலா 3, புவனேஷ்வர் 1 விக்கெட் வீழ்த்தினர். 106 ரன்கள்
எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, நேற்று ஆட்ட நேர
முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்து வெற்றி வாய்ப்பை
பிரகாசமாக்கிக் கொண்டது.

தொடர்ந்து இன்று ஆட்டத்தை துவக்கிய இந்திய அணி 107 ரன்கள் எடுத்து 2
விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அபார வெற்றி பெற்றது. கே.எல். ராகுல்
அபாரமாக ஆடி அரை சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் நான்கு போட்டிகள்
கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரின் முதல்
டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது டெஸ்ட்டில் இந்தியாவும்,
மூன்றாவது டெஸ்ட் இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில்
முடிந்தது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்