விளையாட்டு

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி இரண்டு வருட தடைக்கு உள்ளான முன்னாள் சம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் மீதான தடை நேற்று வெள்ளிக்கிழமை நீங்கியது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மீது 2013ஆம் ஆண்டு சூதாட்ட சர்ச்சை வெடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் நிர்வாகி ராஜ்குந்த்ரா ஆகியோர் அணியின் தகவல்களை தரகர்களுடன் பரிமாறி சூதாட்டத்தில் ஈடுபட்டது ஆதாரங்களுடன் அம்பலமானது.

இதையடுத்து விசாரணை மேற்கொண்ட சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட லோதா கமிட்டி சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு 2015ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் திகதி முதல் இரண்டு ஆண்டுகள் தடை விதித்து தீர்ப்பளித்தது. அத்துடன் குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோர் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

இதன்படி 2016 மற்றும் 2017ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் இடம் பெறவில்லை. இவ்விரு அணிகளில் இடம் பெற்ற வீரர்கள் புதியதாக உதயமான குஜராத் லயன்ஸ், புனே சூப்பர் ஜெயன்ட் அணிகளுக்கு ஏலம் மூலம் ஒதுக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மீதான 2 ஆண்டு தடை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘வந்துட்டோம்னு சொல்லு...திரும்ப வந்துட்டோம்னு சொல்லு...விசில் போடு’ என்று தங்களது மறுபிரவேசத்தை மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளது.

8 ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மாறாத தலைவராக திகழ்ந்த டோனி, கடந்த இரு சீசனில் வேறு வழியின்றி புனே அணிக்காக விளையாட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் கால்பதிக்க ஆர்வமாக இருப்பதை ஏற்கனவே சொல்லியுள்ளார்.