இந்தியா
Typography

மேற்கு ஆசிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பாலஸ்தீனம் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கும் சென்றிருந்தார்.

இப்பயணத்தை முடித்துக் கொண்டு அவர் ஐக்கிய அரபு அமீரகம் என அழைக்கப் படும் துபாய்க்கு வந்து சேர்ந்துள்ளார். 2015 ஆம் ஆண்டுக்குப் பின் 2 ஆவது முறை துபாய்க்கு பிரதமர் மோடி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அபுதாபியில் பெரிய இந்துக் கோயில் ஒன்று கட்டப் படவுள்ளது என்பது குறித்த அறிவிப்புக்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. தற்போது இக்கோயிலுக்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டியுள்ளார். இவ்விழாவில் பிரதமர் மோடி பேசும் போது இக்கோயில் மூலம் இந்தியர்களது கட்டடக் கலையை குறித்து அரபு நாடுகளும் உலகும் நன்கு தெரிந்து கொள்ளும் என்றும் எமது வரலாற்றின் அடையாளமாக இக்கோயில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை அபுதாபியின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சாயத் அல் நஹ்யானின் அரண்மனைக்கும் மோடி விஜயம் செய்துள்ளார். இந்த அரண்மனைக்குச் சென்ற முதல் வெளிநாட்டுத் தலைவர் மோடி ஆவார். துபாயின் வளர்ச்சிக்கு இந்தியர்கள் செய்த பங்களிப்புக்கான மரியாதை இது என ஊடகங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன.

அரச ரீதியிலான சந்திப்பின் போது இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே எண்ணெய் சுத்திகரிப்புத் தொடர்பிலும் இன்னும் சில முக்கிய விடயங்களிலும் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப் பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அபுதாபியில் சுமார் 55 000 சதுர அடி பரப்பில் அமையவுள்ள இந்துக் கோயிலான ஸ்ரீ அஷார் புருசோத்தம சுவாமி நாராயண சாஸ்தா என்ற இந்த ஆலயத்துக்கான திட்டத்தை வீடியோ ஒளிபரப்பு மூலம் மோடி அறிமுகப் படுத்தி வைத்தார்.

இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் யாவும் 2020 ஆம் ஆண்டு நிறைவு பெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. மோடி குறித்த விழாவில் உரையாற்றும் போது 125 கோடி இந்தியர்களுக்காக வளைகுடா நாட்டில் இக்கோயிலைக் கட்ட அனுமதித்த அபுதாபி இளவரசருக்குத் தன் நன்றியைத் தெரிவித்ததுடன் இக்கோயில் கட்டுமானப் பணிகளுக்கும் பின்னர் வழிபாட்டு நிகழ்வுகளுக்கும் துபாயில் உள்ள இந்தியர்கள் எந்தவொரு தொந்தரவும் அளிக்காது மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கையும் முன் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read