இந்தியா

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த கெடு இன்றுடன் (மார்ச் 29) முடிகிறது. 

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார். அப்போது, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பரிசீலிக்கப்பட உள்ளது.

காவிரி விவகாரம் குறித்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், விசாரணை நடத்தி வந்தது. பின்னர், காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்க வேண்டும் என்று கடந்த மாதம் 16ஆம் தேதி மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதையொட்டி தமிழகத்தில் அனைத்துக்கட்சிகள் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த மாதம் 22ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அனைத்துக்கட்சி தலைவர்கள், விவசாய பிரதிநிதிகள் டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அழுத்தம் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால், பிரதமர் மோடி தமிழக தலைவர்களை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை.அதற்கு பதில், உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவது பற்றி தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரள மாநில பிரதிநிதிகளுடன் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான செயல் திட்டம் பற்றி அறிக்கை தாக்கல் செய்யும்படி 4 மாநிலங்களையும் கேட்டுக் கொண்டார். அதன்படி, அனைத்து மாநிலங்களும் எழுத்துப்பூர்வ அறிக்கையை கடந்த வாரம் தாக்கல் செய்தன. அதேநேரம், இறுதி தீர்ப்பில் சில திருத்தங்களை செய்யும்படி உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு சீராய்வு மனுவும் தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை குழு அமைக்கப்படும் என மத்திய நீர்வளத்துறை சில நாட்களுக்கு முன் அறிவித்தது. ஆனால், அதிகாரம் இல்லாத இந்த குழு தேவையில்லை என திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், தமிழக எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது மத்திய அரசுக்கு எதிராக அதிமுக சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுபற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் கோவையில் பேசும்போது, `காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நீதிமன்றம் விதித்த கெடு முடியும் வரை பொறுத்திருப்போம்’’ என்றார். காவிரி பிரச்னை பற்றி டெல்லியில் நீர்வளத்துறை உயர் அதிகாரிகளை சந்திக்க முதல்வரின் செயலாளர் சாய்குமார், தமிழக பொதுப்பணித் துறை செயலாளர் பிரபாகர், காவிரி தொழில்நுட்ப குழு தலைமை பொறியாளர் சுப்ரமணியன் ஆகியோர் கடந்த 2 நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை குழு அமைக்கப்படலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பால் தமிழக அரசு செய்வது அறியாமல் உள்ளது. அதேநேரம் நீதிமன்றம் மத்திய அரசுக்கு விதித்த 6 வாரம் கெடு இன்றுடன் முடிகிறது. அதே நேரம் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திலும், காவிரி பிரச்னை பற்றியும், உச்ச நீதிமன்ற விதித்த கெடு பற்றியும் விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில், காவிரி விவகாரம் குறித்து பேசுவது கைவிடப்பட்டது. தற்போது கர்நாடகாவில் வருகிற ஏப்ரல் 12ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுவதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய பாஜ அரசு தயக்கம் காட்டி வருவதாகவே கூறப்படுகிறது. அதனால், உச்ச நீதிமன்றம் விதித்த கெடு இன்று முடிவதால், காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசால் அமைக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேநேரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சில விளக்கங்களை கேட்டுப்பெறுவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு அவசர கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், காவிரி பிரச்னை தொடர்பாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. கூட்டத்தில், மூத்த அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர், காவிரி தொழில்நுட்ப குழு தலைமை பொறியாளர் சுப்ரமணியன், தமிழக தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

அப்போது, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழகம் சார்பில் எடுக்க வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால், இன்று முதல்வர் தலைமையில் நடைபெறும் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கட்கரியுடன் பாஜ குழு சந்திப்பு: காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக பாஜ அமைத்த மூவர் குழு உறுப்பினர்கள் எம்பி. இல.கணேசன், பாஜ கட்சியின் தமிழக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் பொன்.விஜயராகவன் ஆகியோர் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணண் தலைமையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரியை டெல்லியில் அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தனர். பின்னர், இல.கணேசன் கூறுகையில், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி திட்டத்தை செயல்படுத்த விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார்’ என்றார்.

(தினகரன்)