இந்தியா

“அம்பேத்கர் பெயரை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்தாதீர்கள், அவருக்கு எங்களைப் போல் வேறு எந்த அரசும் கவுரவம் செய்தது இல்லை” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வட மாநிலங்களில் வன்முறை வெடித்தது. அதில், சிலர் பலியானார்கள்.

இந்நிலையில், இப்பிரச்சினையில் மத்திய அரசை குறிவைத்து எதிர்க்கட்சிகள் தாக்கி வருவதால், அம்பேத்கர் பெயரை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்த வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை கூறியுள்ளார்.

டெல்லியில், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்குவதற்கான விரிவாக்க கட்டிடத்தை திறந்து வைத்து பிரதமர் பேசியதாவது, “அம்பேத்கர் பெயரை ஒவ்வொருவரும் அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், எங்கள் அரசுதான், அம்பேத்கர் சர்வதேச மையத்தை கட்டி முடித்து திறந்து வைத்தது. அது, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது உதித்த யோசனையாக இருந்தபோதிலும், இந்த அரசுதான் பணியை முடித்தது.

மேலும், அம்பேத்கர் உயிர் பிரிந்த அலிப்பூர் சாலை இல்லம், அவருடைய பிறந்தநாளுக்கு முன்பு, ஏப்ரல் 13ஆந் தேதி, நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும். முந்தைய காங்கிரஸ் அரசு, இந்த பணியை பல ஆண்டுகளாக இழுத்தடித்தது. நாங்கள் உரிய காலத்தில் முடித்து விட்டோம்.

இதுபோன்று, இந்த அரசைப் போல், வேறு எந்த அரசும் அம்பேத்கருக்கு கவுரவம் செய்தது இல்லை. ஆகவே, அம்பேத்கர் பெயரை அரசியலுக்கு பயன்படுத்தாமல், அவர் காட்டிய பாதையில் நாம் நடக்க முயற்சிக்க வேண்டும்.” என்றுள்ளார்.