இந்தியா
Typography

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி, அடுத்த கட்ட போராட்டமாக தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இன்று சனிக்கிழமை நடை பயணத்தை ஆரம்பித்துள்ளனர். 

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து, பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் அனைத்துக் கட்சிகள் அடுத்த கட்ட போராட்டத்துக்கு தயாராகி விட்டன. ஒரு வாரமாக தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், அமைப்புகள், விவசாயிகள், மாணவர்கள் என்று பல்வேறு தரப்பினரும் பல விதமாக போராடி வருகின்றனர்.

நேற்று முன்தினம் திமுக தலைமையில் அனைத்து கட்சியினர் மாநிலம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினர். கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என்று அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பல இடங்களில் பஸ்கள் ஓடவில்லை. ரயில் மறியல் நடந்ததால், பல ரயில்கள் தாமதமாக இயங்கின. மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் பேர் கைதாகி விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்ய தி.மு.க. தலைமையில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. கூட்டம் முடிந்த பிறகு திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:

“நேற்று நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மயக்கமுற்று உயிரிழந்த பிரபுவுக்கும், நியூட்ரினோ திட்டத்தை கண்டித்து தீக்குளித்து உயிரிழந்த ரவிக்கும் இரங்கல் தெரிவித்து, அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில், முழு அடைப்புப் போராட்டம் நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெற்றுள்ள நிலையில், இத்தகைய வெற்றிக்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்டு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிற மனுவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும், என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுத்தபடி, ‘டெல்டா பகுதிகளில் காவிரி மீட்புப் பயணம்’ குறித்து கலந்தாலோசித்து, டெல்டா பகுதி முழுவதும் காவிரி மீட்புப் பயணத்தை நடத்திடும் வகையில், இரு குழுக்களாக பிரிந்து பயணம் மேற்கொள்ள வேண்டுமென்று ஒட்டுமொத்தமாக முடிவு செய்திருக்கிறோம். அந்த அடிப்படையில், 7ம் தேதி சனிக்கிழமை (இன்று) திருச்சி மாவட்டம் முக்கொம்பில் இருந்து ஒரு பயணம் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, வரும் 9ம் தேதி அரியலூர் மாவட்டத்தில் இருந்து ஒரு குழுவின் பயணம் தொடங்க இருக்கிறது. எனவே, 7 மற்றும் 9ம் தேதிகளில் இரு பிரிவாகத் தொடங்கும் காவிரி மீட்புப் பயணத்தை, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தொடங்கி வைக்க உள்ளார்.

காவிரி மீட்புப் பயணத்தில், அனைத்து கட்சிகளின் தலைவர்கள், அந்தந்த கட்சிகளின் முன்னோடிகள், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். 1989ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், உச்ச நீதிமன்றம் தந்திருக்கிற தீர்ப்பை திரும்பப் பெற வலியுறுத்தி, வரும் 16ம் தேதி, சென்னையில் மிகப் பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்திருக்கிறோம். அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க இருக்கிறார்கள்.

இத்தனை போராட்டங்களுக்கு பிறகாவது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பார்களா? காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் இத்தகைய போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதை அமைக்காமல் இழுத்தடிக்கும் முயற்சிகளில் மத்திய, மாநில அரசுகள் மீண்டும் ஈடுபடுமென்றால், மீண்டும் நாங்கள் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்.

காவிரிப் போராட்டத்தில் ஈடுபட்ட உங்கள் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்களே? காவிரி உரிமைகளுக்காக போராடும் எங்கள் மீது எப்படிப்பட்ட வழக்குகள் போட்டாலும் அவற்றை சந்திக்கவும், எத்தகையை தண்டனைகளை அளித்தாலும் மகிழ்ச்சியோடும், முழு மனதோடும் ஏற்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியால் காவிரிக்கான போராட்டங்கள் திசை திருப்பப்படுவதாக கூறப்படுகிறதே? எங்களைப் பொறுத்தவரையில் அதை நடத்தக்கூடாது என்று நாங்கள் கூறவில்லை. போட்டிகளை ஏற்பாடு செய்திருப்பவர்கள், மக்களுடைய பிரச்னைகளை உணர்ந்து, அதற்கேற்ற வகையில் செயல்பட வேண்டும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்