இந்தியா

நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்வது அவசியம் என்று சட்ட கமிஷன் சிபாரிசு செய்துள்ளது. 

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி ஆராய்ந்த சட்ட கமிஷன், தனது வரைவு அறிக்கையை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் உள்ள அம்சங்கள் குறித்து மே 8ஆந் தேதிக்குள், அரசியல் சட்ட நிபுணர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் கருத்தை கேட்டுள்ளது.

அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில், தனது இறுதி அறிக்கையை தயாரித்து, மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும்.

அந்த வரைவு அறிக்கையில், சட்ட கமிஷன் கூறி இருப்பதாவது:-

“மக்களவை, மாநில சட்டசபைகளுக்கு 2019ஆம் ஆண்டு, 2024ஆம் ஆண்டு ஆகிய 2 கட்டங்களாக ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம். 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள தமிழ்நாடு, அசாம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு 2019ஆம் ஆண்டும், கர்நாடகா, உத்தரபிரதேசம், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு 2024ஆம் ஆண்டும் தேர்தல் நடத்தலாம்.

இதற்காக, சில சட்டசபைகளின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டி இருக்கும். இதில் சட்ட சிக்கல்கள் வராமல் இருப்பதற்காக, அரசியல் சட்டத்தின் 83(2), 172 ஆகிய பிரிவுகளிலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் பாராளுமன்றத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். அந்த திருத்தத்துக்கு பெரும்பாலான மாநில சட்டசபைகளில் ஒப்புதல் பெற வேண்டும். அதிக இடங்களில் வென்ற கட்சியின் தலைவர் பிரதமராகவோ, முதல்-மந்திரியாகவோ ஒட்டுமொத்த சபையால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அப்போதுதான், மக்களவை மற்றும் சட்டசபைகள் ஸ்திரத்தன்மையுடன் இருக்கும்.

ஒரு அரசு பாதியில் கவிழ்ந்து, புதிய அரசு பதவி ஏற்றால், மீதியுள்ள காலத்துக்குத்தான் புதிய அரசு பதவி வகிக்க முடியுமே தவிர, முழு 5 ஆண்டுகளும் பதவியில் இருக்க முடியாது. அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு பிறகு நம்பிக்கை தீர்மானத்தையும் கொண்டுவர வேண்டும். மாற்று அரசு அமைக்கத் தேவையான பலம், எதிர்க்கட்சிகளுக்கு இல்லாவிட்டால், அந்த அரசை நீக்க முடியாததை உறுதிப்படுத்த இது உதவும்.” என்றுள்ளது.