இந்தியா

மக்கள் நலனில் எந்தவித அக்கறையும் இன்றி அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் இணைந்து செயல்பட்டு வருவதாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் நேற்று திங்கட்கிழமை மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டையில் நடந்த மனித சங்கிலியில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இருக்கும்போது குடிநீர் பிரச்சினையை போக்க செயல்படுத்தப்பட்ட திட்டங்களை எல்லாம் அ.தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு உள்ளது. இதனால் தான் பொதுமக்கள் ஒரு குடம் தண்ணீரை ரூ.5 கொடுத்து வாங்கும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கு தி.மு.க. ஆட்சி காலத்தில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தை அ.தி.மு.க. அரசு கிடப்பில் போட்டது தான் இன்றைய குடிநீர் பிரச்சினைக்கு காரணம்.

அமைச்சர் விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வு அமைச்சராக இருக்க வேண்டியவர், மக்களை சாகடிக்கும் அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.

அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் இரட்டை குழல் துப்பாக்கி போன்று செயல்படுவது உண்மை தான். நீட் பிரச்சினையாக இருந்தாலும் சரி. காவிரி மேலாண்மை வாரிய பிரச்சினையாக இருந்தாலும் சரி மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் பா.ஜ.க., அ.தி.மு.க. அரசுகள் இரட்டை குழல் துப்பாக்கி போன்று இணைந்து செயல்பட்டு வருகிறது.

அ.தி.மு.க. அடிக்கும் கொள்ளைகளுக்கு பா.ஜ.க. அரசு துணை நிற்கிறது. வருமான வரித்துறை சோதனை செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதுகின்றனர். ஆனால் அரசு சார்பில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பிரதமரை சந்திப்பதற்கு நேரம் கேட்பதற்கு இந்த அரசிற்கு தைரியம் இல்லை. தங்களுடைய பதவியை காப்பாற்றிக்கொள்வதற்காக பிரதமரை அவர்கள் சந்திப்பார்கள்.

உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் தோல்வி அடைவோம் என்பதற்காக தேர்தலை நடத்தாமல் அ.தி.மு.க. அரசு உள்ளது. இதனால் உள்ளாட்சிகளுக்கு வரும் நிதிகள் திரும்பி சென்று விடுகிறது.” என்றுள்ளார்.