இந்தியா
Typography

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அவசர நிலை ஆட்சியைவிட, பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய ஆட்சி மிக மோசமானது என்று பா.ஜ.க.லிருந்து விலகிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். 

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கிலுள்ள தனது இல்லத்தில் யஷ்வந்த் சின்ஹா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, “மத்தியில் இருக்கும் அரசால், நாட்டில் இருக்கும் எந்த சமுதாயமும் பாதுகாப்பாக உணரவில்லை. நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத தீர்மானம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாமல் போனதற்கு மத்திய பாஜக அரசே முழுமுதற் காரணம். உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் மற்றும் ஊடகங்கள் என நாட்டின் முக்கியமான அமைப்புக்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளில் மோடி அரசு இறங்கியுள்ளது. மத்திய அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐ, என்ஐஏ போன்ற அமைப்புகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மத்திய அரசு தொந்தரவு அளித்து வருகிறது.

எனது விமர்சனத்தில் இருக்கும் உண்மை பற்றி, பாஜக-விலுள்ள தலைவர்களே பலர் என்னைத் தொடர்பு கொண்டு பேசிவருகின்றனர். மேலும் பலர் தங்களது குரலை வெளிப்படுத்தத் தைரியமற்று இருக்கின்றனர். தேர்தல் அரசியலில் இருந்து விலகினாலும், விவசாயிகள், முறைசாராத் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சமூகத்தின் பலவீனமான பிரிவினருக்காக, நான் தொடர்ந்து போராடுவேன்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS