இந்தியா
Typography

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை, பிரதமராக நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றால், தான் பிரதமர் பதவியேற்பேன் என்று ராகுல் காந்தி நேற்று செவ்வாய்க்கிழமை கூறியிருந்தார்.

இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பங்காரப்பேட்டையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, “ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவி வருகிறது. இதனை உத்தரகண்டிலும், உத்தர பிரதேசத்திலும் பார்த்துள்ளோம். கர்நாடகாவை விட்டு வெளியேறும் நேரமும் அக்கட்சிக்கு வந்துவிட்டது. மாநிலத்தில் காங்கிரசை வழியனுப்ப மக்கள் தயாராக உள்ளனர் அக்கட்சியின் உண்மை முகத்தை மக்கள் தெரிந்து கொண்டுள்ளர். இதனால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்திற்கு என்ன தேவை என்பதை நிர்ணயிக்கும் தேர்தல் இது. பல மாநிலங்களை காங்கிரஸ் சீரழித்து வந்தது, ஜனநாயகத்தின் உயிர்நாடியையும் சிதைத்துவிட்டது. 6 நோய்களால் காங்கிரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. ஜாதி, ஊழல், கிரிமினல், ஊழல், ஒப்பந்தமுறை, வகுப்புவாதம் என்ற நோயால் காங்கிரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களை ஏமாற்றுவதற்கான உரிமை உள்ளதாக காங்கிரஸ் நினைத்து கொண்டுள்ளது. அக்கட்சியின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. மன்மோகன் பிரதமராக இருந்தாலும், ரிமோட் சோனியாவிடம் இருந்தது. ஆனால், எனது ரிமோட் மக்களிடம் உள்ளது. பெண்கள் பாதுகாப்பில் காங்கிரசுக்கு அக்கறையில்லை. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஊழல் நிறைந்துள்ளது. பா.ஜ., ஆளும் மாநிலங்களில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏசி அறையில் அமர்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சியால், உங்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ள முடியாது.

பிரதமராக பதவியேற்பேன் என்ற ராகுலின் பேச்சு ஆணவத்தின் வெளிப்பாடு. தனக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது போல் கூறியுள்ளார். இதன் மூலம் கூட்டணி கட்சி தலைவர்களையும், மூத்த தலைவர்களையும் அவமானபடுத்தியுள்ளார். மூத்த தலைவர்களை மதிக்கும் பழக்கம் அவருக்கு கிடையாது. அரசியலில் அவருக்கு இன்னும் முதிர்ச்சி ஏற்படவில்லை. அவரை, மக்கள் ஏற்க மாட்டார்கள். பார்லிமென்டை இயங்க காங்கிரஸ் அனுமதித்தது இல்லை.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்