இந்தியா

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வரைவுத் திட்ட அறிக்கையை சற்றுமுன்னர் (இன்று திங்கட்கிழமை) தாக்கல் செய்தது. 

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்பு தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தாக்கல் செய்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வின் முன் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் தலைமை வழக்குரைஞர் ஆஜராகி, “வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் வேண்டும்.” என்றார். அதற்கான காரணங்களையும் முன்வைத்தார்.

இதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞரால், “செயல் திட்டத்தை உருவாக்காமல் திட்டமிட்டே மத்திய அரசு காலதாமதம் செய்து வருகிறது. நல்ல நிர்வாகம் குறித்து மத்திய அரசு பேசி வருகின்றது. ஆனால், தமிழகத்துக்கு காவிரியிலிருந்து உயிர நீர் கிடைக்கவில்லை. காவிரி போன்ற தீவிரமான பிரச்சினை குறித்து மத்திய அரசுக்கு அக்கறையில்லை.” என்றார்.

இதனைத் தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “மத்திய அரசு, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பிலான வரைவுத் திட்ட அறிக்கையை 14ஆம் திகதி தாக்கல் செய்ய வேண்டும்.” என்று கூறியிருந்தது.

இந்த நிலையிலேலேயே, சீலிடப்பட்ட கவரில் வரைவுத் திட்ட அறிக்கையை, மத்திய நீர் வளத்துறைச் செயலாளர் இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.