இந்தியா
Typography

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில், திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டத்தை, உச்ச நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை ஏற்று கொண்டு வழக்குகளை முடித்து வைத்தது. 

இந்த வரைவு திட்டத்தை நடப்பு பருவ காலத்திலேயே செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மாநில அரசுகள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில், காவிரி நதி நீர் பங்கீட்டை முறைப்படுத்துவது குறித்த, திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை, உச்ச நீதிமன்றத்தில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், மேலாண்மை வாரியம் என்பதற்கு பதில், மேலாண்மை ஆணையம் என்ற பெயரில், 10 உறுப்பினர்கள் அடங்கிய குழு செயல்படும். நீர் பங்கீடு தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம், மேலாண்மை ஆணையத்திடம் இருக்கும். முக்கிய முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டால், மத்திய அரசின் ஆலோசனையை பெறாலம். மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம், டில்லியில் செயல்படும் என, மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, இறுதி தீர்ப்பளித்த நீதிபதிகள், மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டத்தை ஏற்று கொண்டனர். மேலும், இந்த காவிரி மேலாண்மை ஆணையத்தை நடப்பு பருவ காலத்திற்கு முன்பு செயல்படுத்த வேண்டும். இதனை அரசிதழில் உடனடியாக வெளியிட வேண்டும் எனக்கூறி காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தது. மேலும், மத்திய அரசுக்கு எதிராக அவமதிப்பு ஏதுமில்லை எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்