இந்தியா
Typography

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, கர்நாடக சட்டமன்றத்தில் இன்று சனிக்கிழமை மாலை 04.00 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. 

கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள எடியூரப்பாவின் பதவி தப்புமா என்பது நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் தெரிந்துவிடும்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சி அமைக்கக் கூடிய அளவுக்கு எந்த கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காததால் குழப்பம் ஏற்பட்டது.

தேர்தல் நடந்த 222 இடங்களில் 78 இடங்களை பெற்ற காங்கிரசும், 37 இடங்களை பெற்ற குமாரசாமியின் ஜனதா தளம் (எஸ்) கட்சியும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சித்த நிலையில், 104 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பாரதீய ஜனதாவைச் சேர்ந்த எடியூரப்பாவுக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் வஜூபாய் வாலா கடந்த புதன்கிழமை இரவு அழைப்பு விடுத்தார். அப்போது, சட்டசபையில் 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு எடியூரப்பாவுக்கு அவர் ‘கெடு’ விதித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள், ஆளுநரின் முடிவை எதிர்த்து உடனடியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பாரதீய ஜனதாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தது சட்ட விரோதம் என்றும், எனவே எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்க தடைவிதிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.

இந்த மனுவை விடிய விடிய விசாரித்த உச்சநீதிமன்றம், எடியூரப்பா பதவி ஏற்பதற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. என்றாலும் இந்த வழக்கின் தீர்ப்பு அவர் முதல்வராக பதவியில் நீடிப்பதை கட்டுப்படுத்தும் என்று கூறியது. இதைத்தொடர்ந்து, கர்நாடகத்தின் புதிய முதல்வராக எடியூரப்பா நேற்று முன்தினம் பதவி ஏற்றார். அவருடன் மந்திரிகள் யாரும் பதவி ஏற்கவில்லை.

இந்த நிலையில், ஆளுநரின் முடிவுக்கு எதிராக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காரசாரமான விவாதம் நடைபெற்றது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், கர்நாடக சட்டசபையில் இன்று (சனிக்கிழமை) மாலை 04.00 மணிக்கு முதல்வராக எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அத்துடன், வாக்கெடுப்பை நடத்த மூத்த உறுப்பினர் ஒருவரை தற்காலிக சபாநாயகராக நியமிக்கவேண்டும் என்றும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாநில டி.ஜி.பி. உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த உத்தரவு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியதோடு காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளுக்கு மிகுந்த உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, கர்நாடக சட்டசபை இன்று காலை 11.00 மணிக்கு கூடுகிறது. முதலில் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொள்வார்கள். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள பாரதீய ஜனதாக கட்சியைச் சேர்ந்த போப்பையா பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்ததும் மாலை 04.00 மணிக்கு, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை முதல்வராக எடியூரப்பா சட்டசபையில் தாக்கல் செய்து பேசுவார். அதன்பிறகு எதிர்க்கட்சி தலைவர்கள் பேசுவார்கள்.

பின்னர் நம்பிக்கை தீர்மானத்தின் மீது தற்காலிக சபாநாயகர் வாக்கெடுப்பு நடத்துவார். ஓட்டெடுப்பை இரகசியமாக நடத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதால், வெளிப்படையாக நடைபெறும். நம்பிக்கை தீர்மானத்தை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கைகளை உயர்த்தியோ அல்லது எழுந்து நின்றோ ஆதரவு தெரிவிப்பார்கள்.

எடியூரப்பா அரசு பிழைக்குமா? அல்லது அற்ப ஆயுளில் கவிழுமா? என்பது இந்த பலப்பரீட்சையின்போது தெரிந்துவிடும். சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவது குறித்து எடியூரப்பா நேற்று பெங்களூருவில் நிருபர்களிடம் பேசுகையில், “சட்டசபையில் தன்னால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும்“ என்றும் இதில் நூறு சதவீதம் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்